மலைகளின் இளவரசி என்று சொல்லப்படும் கொடைக்கானலில் சாக்லேட் ஃபாக்டரி தான் இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் கொடைக்கானல் நகரில் இன்று தூத்துக்குடி மக்கள் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் போன்ற ஒரு நச்சுக் கழிவு தொழிற்சாலை இருந்துள்ளது. இது அந்த ஊர் மக்களுக்கும், சூழலியல் செயல்பாட்டாளர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. பச்சை பசேல் என்ற இயற்கை சூழ் பகுதியான கொடைக்கானல், கோடை விடுமுறை வந்தாலே மக்கள் சுற்றிப் பார்க்க வரும் ஒரு சுற்றுலா தளமாக இருக்கிறது. அப்படி இயற்கை வளமிக்க இந்த பகுதியில் தான் உலகிலேயே இரண்டாம் நச்சு குணம் கொண்ட பாதரசத்தை தெர்மாமீட்டரில் பொருத்தும் தொழிற்சாலை இருந்துள்ளது. அங்கு வேலை பார்த்த மக்களுக்கும், ஏரிகளில் நீந்திக் கொண்டிருந்த மீன்களுக்கும், காட்டில் அலைந்துகொண்டிருந்த விலங்குகளுக்கும், பரந்துவிரிந்து எல்லோரையும் தாங்கிக்கொண்டிருக்கும் நிலத்துக்கும் இந்த யுனிலீவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலை ஒரு விஷமாகவே இருந்திருக்கிறது.
சீஸ்ப்ரோ - பாண்ட்ஸ் என்கிற நிறுவனம் முதலில் அமெரிக்காவில் இந்த தெர்மாமீட்டர் தொழிற்சாலையை நிறுவியது. அங்கு இதன் விஷத்தன்மையும், மாசுத்தன்மையும் அறிந்தவர்கள், இந்த நிறுவனத்துக்கு தடை விதித்தனர். உடனடியாக எங்கே சென்று தொழிற்சாலையை தொடங்கலாம் என்று கணக்குபோட்டு அவர்களின் இந்திய கிளையான பாண்ட்ஸ் இந்தியா லிமிடட் நிறுவனத்தின் மூலம் கொடைக்கானலில் 25 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலையை 1982 ஆம் ஆண்டு அமைத்தனர். இதே போலத்தான் ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்தியாவில் பல மாநிலங்களில் தடைசெய்யப்பட்டு துரத்தப்பட்டு, கடைசியில் தமிழகத்தில் தங்கு தடையின்றி அமைத்து, தொழிற்சாலையை பெரிதாக்க தற்போது திட்டம் போட்டு நகர்கின்றனர். இதனால் அந்த நிறுவனங்களுக்கு மட்டும் தான் லாபம், பயன் எல்லாம். அந்த இடங்களை சுற்றி வாழ்பவர்களுக்கு ஒரு சாபக்கேடுதான். இந்த வாதம் வளர்ச்சியை எதிர்ப்பதல்ல, வளர்ச்சி என்ற பெயரில் எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் சூழலைக் கெடுக்கும் இவர்களை சாடுவது. பின்னர், சீஸ்ப்ரோ பாண்ட்ஸ் நிறுவனத்தை யுனிலீவர் என்ற நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் வாங்கியது. இந்தியாவில் இருக்கும் இந்த பாண்ட்ஸ் இந்தியா லிமிடட் நிறுவனமும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. எந்தெந்த நாடுகள் இந்த மெர்குரி (பாதரச) தொழிற்சாலையை அவர்கள் நாட்டுக்குள் அமைக்க தடைவிதித்தனவோ, அந்த நாடுகளுக்குத்தான் ஏற்றுமதியும் செய்திருக்கின்றனர்.
இந்த நிறுவனம் எந்த தடையும் இன்றி டன்கணக்கில் பாதரசத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, அதை தெர்மாமீட்டரில் பொருத்தி, அவர்களுக்கே திருப்பி அனுப்பியது. பாதரசம் அதிக அளவில் நம் உடம்பில் கலக்க நேரிடுமானால், அது பல உடல் விளைவுகளை உண்டாக்கும். இந்தத் தொழிற்சாலைகளிலேயே வேலை பார்த்து வந்தவர்களுக்கு உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போய்விட்டது. மூளையை பாதிக்கும், நரம்புகளை பாதிக்கும், இரத்த வாந்தி எடுக்க செய்யும், கிட்னி செயலிழந்து இருக்கும் என்று ஒவ்வொரு பிரச்சனையாக அவர்களைத் தாக்க ஆரம்பித்தது. மெர்குரிக்கு எதிராக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சங்கங்கள் ஒன்று கூடின, அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அதன் கெடுதல்களை பட்டியலிட்டனர். போராட்டங்கள் நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு அந்த தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது.
அந்தத் தொழிற்சாலையை மூடிய பின்னரும் அங்கிருந்த பல டன் மெர்குரி கழிவுகளால், நிலங்களும் காடுகளும் ஏரிகளும் குலங்களும் மாசடைந்துதான் இருக்கின்றன. அங்கு வேலை பார்த்தவர்களில் 49 பேர் பாதரச தாக்கத்தால் நோயுற்று இறந்திருக்கின்றனர். இங்கு வேலை பார்த்த 690 பேருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இன்றும் காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று பதினைந்து வருடங்களாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், நிறுவனமோ அங்கு கழிவுகள் எதுவும் புதைக்கப்படவில்லை, வேண்டுமானால் வேலை பார்த்து நோயுற்றவர்களுக்கு நாங்கள் நஷ்ட ஈடு வழங்குகிறோம் என்றது. பாதரசத்தால் தன்மை மாறுபட்ட நிலத்தை சுத்திகரித்து மாசற்றதாக மாற்றுகிறோம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது. சமூக ஆர்வலர்கள், "இந்தக் கழிவுகள் சாதாரணமானவை இல்லை, சர்வதேச தரத்தில் சுத்திகரிப்பு செய்திருக்க வேண்டும்", என்கின்றனர்.
இந்த நிறுவனம் மூடப்பட்டு 17 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் இங்கிருக்கும் கழிவுகளால் நிகழ்காலமும் பாதிப்பில் இருக்கிறது, வருங்காலமும் பாதிக்கப்பட இருக்கிறது. 2016ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் கழிவுகளை அகற்ற உதவவும் யுனிலீவர் நிறுவனம் ஒத்துக்கொண்டது. இந்த மெர்குரி தொழிற்சாலையை எதிர்த்த செயல்பாட்டாளர்களில் ஒருவரான நித்தியானந்த் ஜெயராமன், "அவர்கள் நஷ்டஈடு தருகிறேன் என்று சொன்னது நல்ல விஷயம்தான், இருந்தாலும் முறையான சுத்திகரிப்பு செய்யும் வரை போர் தொடரும்" என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 2015 ஆண்டில், சோபியா என்கிற ராப் பாடகர் ஒரு பாட்டை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மக்களிடம் வைரலாக்கினார். தனுஷ் நடித்த கொடி என்ற படத்தில் கூட மெர்குரி விஷத்தன்மை தான் படத்தில் மையக்கருவாக இருக்கும். அதேபோலத்தான் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, பிரபுதேவா நடித்திருக்கும் படமான மெர்குரியும் இந்த தொழிற்சாலையை அடிப்படியாகக் கொண்ட கதையாக இருக்கிறது. முன்பு போபாலில் யூனியன் கார்பைட், கொடைக்கானலில் யுனிலீவர், தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்று கார்ப்ரேட்களும் அரசுகளும் கைகோர்த்துக்கொள்கின்றன, சாதாரண மக்களின் உயிரும் வாழ்வும்தான் பலியாகின்றன.