Skip to main content

‘பண்பாட்டு வேர்’ – பொங்கல் குறித்து முனைவர் மஞ்சுளா

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

‘Cultural Root’ - Dr. Manjula

 

தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய பண்பாட்டு அடையாளம் ‘பொங்கல்’ விழா. செழுமையைக் கொண்டாடுவதற்காக விழா எடுக்க விரும்பிய தமிழன் அதற்கு ‘பொங்கல்’ என்று பெயரிட்டான். உயிர் இரக்கம் என்ற அன்பு வள்ளலாரிடம் பெருகி நிற்கும். அகிம்சை என்ற பண்பு அண்ணல் காந்தியடிகளிடம் நிறைந்து காணப்படும். சமூகநீதி என்ற கண்ணோட்டம் பெரியாரிடம் மேலோங்கி நிற்கும். புரட்சிக் கருத்துக்கள் என்ற புதுமை பாரதிதாசனிடம் அலையடித்துக் கிடக்கும். அதுபோலப் பொங்கிப் பூரிப்படையும் விழா பொங்கல்.

 

அன்பும், பண்பும், இன்பமும், வளமும் நிரம்பித் ததும்பும் தமிழர் திருநாள் தை முதல் நாள் அன்று புத்தாடையுடன் கொண்டாடப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ‘‘அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு, அத்தனையும்  தித்திக்கிற  நாள்தான்” பொங்கல் எனலாம்.  வேட்டையாடிய சமூகத்திலிருந்து நாகரிக சமூகத்திற்கான பயணத்தின் உச்சபட்ச கண்டுபிடிப்பு வேளாண்மை. இந்தத் தொற்றுநோய்க் காலத்தில் மற்ற கடைகள் அடைக்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகளுடன் உணவுப் பொருள்கள் விற்பனையாகும் கடைகள் இயங்கியதற்கான காரணத்தை விளக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாத் தேவைகளையும் தள்ளி வைத்த போதும் உணவுத் தேவையை மட்டும் நிறுத்திக் கொள்ள வாய்ப்பில்லை.

 

உணவைத் தேடி மனிதன் சென்ற காலம் மலையேறிப் போய், தான் இருக்கும் இடத்தில் உணவை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டான்.  நாள்தோறும் உதிக்கின்ற சூரியன் விடியலை மட்டும் தருவதில்லை. அதன் ஒளியினால்தான் பயிர்களும் வளர்கின்றன என்ற அறிவியலை உணர்ந்தவன் தமிழன். உணவின் உற்பத்திக்கு உறுதுணை செய்த சூரியனுக்கு நன்றி சொல்ல விரும்பினான். அதைப் போல உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்குத் தன் நன்றியைப் படையிலிட்டான். இந்த நன்றியுணர்ச்சி என்று தோன்றியதோ அன்றிலிருந்து பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.  தன் இனத்தைக் காக்க நடந்த போரில் உயிர்த் தியாகம் செய்த வீரனுக்குச் செய்யப்படும் நடுகல் வழிபாடு போல முன்னோர் வழிபாடும் இந்தப் பொங்கல் விழாவின் இன்னொரு சிறப்பம்சம். முற்காலச் சோழர் காலத்தில் ‘இந்திர விழா’ என்ற விழாவும் பொங்கலுடன் தொடர்புடைய விழாவாகக் குறிப்பிடப்படுகிறது.

 

புதிதாக விளைந்த அரிசி, தானியம், இஞ்சி, மஞ்சள், கரும்பு, வெல்லம் என்று எல்லாவற்றையும் அறுவடை செய்து தனக்கு உதவி செய்தவர்களுக்குப் படையலிட்டு மகிழ்வது எத்தகைய உயர்ந்த பண்பாடு! பிணங்களைப் புதைக்கும் போது புதைகுழியாக மாறும் நிலம், விதைகளை விதைக்கும் போது கருவறையாக மாறித் தாய்மை சூடிக் கொள்ளும் அதிசயம் நடந்து விடுகிறது. அதனால்தான் உண்ணும் போது குனிந்து உண்டு நமக்கு உணவிட்ட நிலத்திற்கு நன்றி சொல்கிறோம். ஆனால் தண்ணீர் குடிக்கும் போது அன்னாந்து குடிக்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. காரணம் நமக்குத் தண்ணீர் கொடுக்கும் வானத்தைப் பார்த்து நன்றி சொல்லவே இந்த வழக்கம் என்று உணரும் போது முன்னோர்களை நினைத்து உடல் சிலிர்க்கிறது.

 

இந்திய மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழரின் தனித்த அடையாளமாக பொங்கல் விழா பார்க்கப்படுகிறது. இந்த விழாவுக்கு எந்தத் தீட்டும் தடைபோடுவதில்லை என்று பேராசிரியர் தொ. பரமசிவம் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற தன் ஆய்வு நூலில் விளக்கியுள்ளார். வீட்டில் இருப்பவரோ நெருங்கிய உறவுக்காரரோ இறந்து விட்டால் அவருக்கான துக்கம் ஓராண்டுக்கு அனுசரிக்கப்படும். இந்தச் சூழலில் மற்ற பண்டிகைகளுக்கு அந்த ஆண்டில் அனுமதி இல்லை. ஆனால் பொங்கல் விழாவைப் பொறுத்தவரை எந்தச் இறப்பு நிகழ்வும் பொங்கலிடுவதற்கு முட்டுக்கட்டையாக வராது என்று கூறுகின்றார். ஒருவேளை பொங்கல் தினத்தன்று இழவு விழுந்து விட்டாலும் உடனடியாக உடலை நல்லடக்கம் செய்தபின் வீட்டைத் தூய்மை செய்து பொங்கலிடலாம் என்ற வழக்கம் இன்றும் நெல்லை மாவட்டங்களில் பின்பற்றுவதாகவும் பதிவு செய்துள்ளார்.

 

இலக்கியங்கள் காட்டும் பொங்கல் கொண்டாட்டம் வேறு பார்வையைத் தருகிறது. சங்க இலக்கியத்தின் காதல் அல்லாத புறப் பொருள்களைப் பேசும் புறநானூற்றில் ஒரு பாடலில் ‘‘நாள் புதிது உண்மார்’’ என்ற சொற்றொடர் இடம் பெற்றிருக்கிறது. அதாவது புதிய விளைச்சலை உண்ணுதல் என்று பொருள் தருவதாக இவ்வரி எழுதப்பட்டிருக்கிறது. கறந்து நுரை எழும்பும் சுவையுடைய பாலில் புத்தரிசியை இட்டு, சந்தனக் கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரிப்பார்களாம். இவ்வாறு சமைக்கப்பட்ட பொங்கல் பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை இப்பாடல் அழகாக விவரிக்கிறது. 

 

கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் பாடிய பாடலில் மனம் விரும்பும் இயற்கைக் காட்சிகள் கண்முன் விரிகின்றன. ஓர் அழகிய மூங்கில் காடு. அந்த மூங்கிலில் மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும். அந்த இடத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகம். காட்டுப் பன்றியின் குடும்பம் அங்குள்ள காந்தள் கிழங்குகளைக் கிண்டி உண்ணும். கிண்டிய புழுதியில் ஆதித் தமிழர்கள் தினையை உழாமலேயே விதைப்பர். அதில் விளைந்த தினையை மரையான் என்னும் காட்டுப் பசுக்கள் மேயும்.  அந்த மரையானின் பாலைக் கறந்து அதை உலையாக வைத்துப் பொங்கல் சமைப்பர். இந்தச் செய்திகள் ஆதித் தமிழர் வாழ்க்கையின் நடப்பியலைக் கண்முன் கொண்டு வருகிறது. 

 

சங்க காலத்தில் புது அரிசி பொங்கிய நாளை நல்ல நாளாகக் கொண்டாடி இருக்கிறார்கள். இதனால் நல்ல நாள் பார்த்துப் புது அரிசி பொங்குவது என்னும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். பொங்கல் அன்று பால் பொங்கி வழியும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்வது குழந்தை முதல் எல்லோருக்கும் உற்சாகத்தைத் தரும்.

 

‘‘நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ”
என்ற திரைப்படால் வழியாகவும் மகிழ்ச்சியின் பொங்கலை உணரமுடிகிறது.

 

பாண்டவர்களை வஞ்சம் தீர்க்க தக்க காலம் பார்த்திருந்தான் துரியோதனன். அதற்கு அவன் மாமன் சகுனி மூலம் ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது. சூதாட்டத்தின் வழியாகப் பாண்டவர்களைத் தோல்வி அடையச் செய்து பாஞ்சாலியை அவமானப்படுத்தி விடலாம் என்பது அவன் திட்டம். அதன்படியே சகுனியின் பகடைக் காய்கள் பாண்டவர்களை வீழ்த்தின. தன் எண்ணம் ஈடேறியதை நினைத்து இன்பக் கடலில் குதிக்கும் துரியோதனன், தன் மாமனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்று ‘பாஞ்சாலி சபதம்’ என்ற படைப்பில் மகாகவி பாரதியார் புனைந்திருப்பார்.
‘‘ஆசை தணித்தாயடா – உயிர் மாமனே
ஆவியைக் காத்தாயடா
பூசை புரிவோமடா – உயிர் மாமனே
பொங்கல் உனக்கிடுவோம்”
என்று துரியோதனன் பேசுவதாக மகாகவி அமைத்திருப்பார்.  இதன்படி ஒருவர் செய்த உதவிக்குச் சரியான முறையில் நன்றி பாராட்ட வேண்டும் என்றால் பொங்கல் இட வேண்டும் என்று விளங்குகிறது. பாரதியாரின் இந்தக் கருத்து காலம் காலமாகத் தமிழரின் நன்றியுணர்ச்சிக்குச் சான்றாக இருக்கும் பொங்கலின் மகத்துவத்தை மறைமுகமாகப் பேசுகிறது.

 

பொங்கலின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக இருப்பது ‘ஏறு தழுவுதல்’ என்று இலக்கியங்கள் பேசும் ‘ஜல்லிக்கட்டு’.  இது காளைகளைப் பற்றியதல்ல, நம் கலாச்சாரத்தைப் பற்றியது.  மஞ்சுவிரட்டு, வெளி விரட்டு என்றெல்லாம் அழைக்கப்படும் இப்போட்டியில் பங்கேற்கும் மாடுகள் பிரத்யேகப் பயிற்சி பெற்றவை.  அவற்றை வண்டி இழுக்கவோ, வேறு வேலைகளுக்கோ ஏன் விவசாயத்திற்கோகூட பயன்படுத்த மாட்டார்கள். கட்டபொம்மன் காலத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் ஜெக்கம்மா கோயிலில் யாராலும் அடக்க முடியாத பொம்மியம்மாளின் ‘மருது’ என்ற காளையை அடக்கியது கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை என்பதை வரலாற்றில் நாம் படித்து இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக வீரர்களுக்கு அடிபட்டது என்று நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் மாட்டிற்கு அடிபட்டதாக வரலாறு இல்லை. மாட்டிற்கு அடிபட்டால் அன்றைய போட்டியையே நிறுத்திவிடுவர்.

 

ஏறு தழுவுதல் என்ற நிகழ்வு ஒரு வீர விளையாட்டு மட்டுமல்ல; நம் கால்நடைகளின் ஆரோக்கியமும் சிறந்த முறையில் இருக்க நம் பண்டைத் தமிழர்களின் இயற்கையோடு இணைந்த ஒரு நிகழ்வு. காடும் காடு சார்ந்த நிலமான முல்லை நில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாக இருந்தது ஜல்லிக்கட்டு. ஆயர் மகள் தன் துணைவன் காளையை அடக்கும் துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அந்தத் துணிவு இல்லாதவனை மறுபிறப்பிலும் காதலனாக ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்றும் கலித்தொகை என்ற இலக்கியம் காட்டுகிறது. ஆனால், காலப்போக்கில் காளையை அடக்குவோருக்குத்தான் திருமணம் என்ற விதிமுறை வலுவிழந்து போனது.

 

தமிழகத்தின் மதுரை மாவட்டம் சாரந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களில் காளைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்க, தமிழ்நாட்டில் குறையாமல் இருக்க ஒரே காரணம் ‘ஏறு தழுவுதல்’ தான்.

 

ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கென்று ஒரு பண்டிகை இருக்க ஒட்டுமொத்த தமிழகமும் எந்த வேறுபாடின்றி வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடக்கூடிய விழாவாகப் பொங்கல் அமைகிறது. கிராமப்புறங்களில் ‘சமத்துவப் பொங்கல்’ என்ற பெயரில் அனைத்து மக்களும் ஒன்றுகூடி பொதுவெளியில் பொங்கலிடும் வழக்கத்தைப் பார்க்கும் போது கீழடியில் இதுவரை சமய வழிபாடு சார்ந்த எந்தப் பொருளும் கிடைக்காததற்கான காரணம் புரிகிறது. அப்படியென்றால் இயற்கையைக் கடவுளாக வழிபட்ட ஆதி இனத்தைப் போற்றாமல் இருக்க முடிவதில்லை. பொதுவெளிகளில் நிகழும் பொங்கலின் விழாவில் உறியடித்தல், கோலப்போட்டி போன்ற பல விளையாட்டுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. சென்னை பெரியார் திடலில் நடக்கும் பொங்கல் திருவிழா நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகிறது. அங்கே கலைஞர்கள் தக்க முறையில் மரியாதை பெறுகின்றனர்.  

 

பொங்கல் விழாவின் போது பிராமணர்கள் தலையீடு இல்லாத முன்னோர்கள் வழிபாடும் மனதிற்கு இதமளிக்கிறது. நிறுவனமாக்கப்பட்ட தெய்வங்களை விடுத்து நம் குடும்பத்திற்காக உழைத்து இறந்தவர்களை அவர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்துப் படையலிட்டு வணங்குவது ஆறுதலான செய்தி. அடுத்த தலைமுறையினருக்குச் சொத்து சுகத்தைத் தேடி வைக்காமல் போனாலும் பரவாயில்லை. நம் பண்பாட்டு வேர்களைக் காட்டிக் கொடுக்காமல் போவது பெரிய ஆபத்தைத் தந்துவிடும், அவர்கள் ஏமாந்து போகக்கூடும். எனவே நம் பண்பாட்டு வேர்களின் வீரியத்தைத் தேவையான போதெல்லாம் பேசுவோம்!

 

- முனைவர் மஞ்சுளா

 

 

சார்ந்த செய்திகள்