அரசியலில் இருந்து விலகுவதாகவும், இலங்கிய மேடையில் தன்னை காணலாம் என்றும் அறிவித்த நாஞ்சில்சம்பத், ஸ்டாலின் முதல்வராவார் என பேட்டி அளித்திருந்ததையடுத்து திமுகவுக்கு செல்வார் என்றும், வைகோவை சந்தித்து மதிமுகவுக்கு சென்றுவிடுவார் என செய்திகள் பரவின.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு நாஞ்சில் சம்பத் பேட்டி அளித்தார்.
ஸ்டாலின் முதல்வராவார்... ராகுல் பிரதமராவார் என்று கூறியிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறதே... இருவருமே பலவீனமானவர்கள் என்று அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுபவர்கள். அவர்கள் வெல்வார்கள் என்று எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்?
என்னிடம் போகிற போக்கில் கேட்டார்கள். இப்போதைக்கு தேர்தல் வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்றார்கள். திமுகவுக்குத்தான் அந்த வாய்ப்பு இருக்கிறது என்றேன். ஸ்டாலின் பெயரைக்கூட சொல்லவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் மன்னித்துவிட்டார் என்று சொன்னதன் மூலம் வானத்தன் உச்சிக்கு போய்விட்டார் ராகுல். அவர்களை மன்னித்துவிட்டேன் என்று சொன்னால் மட்டும்போதாது. அவர்களை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளுக்கும் ராகுல்காந்தி தன்னுடைய பங்களிப்பை தந்தால் அவர் இன்னொரு அண்ணல் காந்தியாக மாறுவார் என்று சொன்னேன். இனி வருகிற தேர்தல்களில் தேசத்தை ஆளுகிற பிரதமர் என்கிற மகுடம் அவருக்கு கிட்டும் என்று சொன்னேன்.
அரசியலைத் தாண்டியும் உங்கள் வாழ்வில் முக்கியமானவர் வைகோ. இனி இலக்கிய மேடைதான் என நீங்கள் முடிவு எடுத்திருக்கும் இந்த நேரத்தில் வைகோவைப் பற்றி நினைக்கிறீர்களா?
ஆமாம். 18 ஆண்டுகாலம் அவரோடு பணியாற்றி இருக்கிறேன். கனவுகள் காணுகிற கால்சட்டை பருவத்தில் அவரை அப்போதே என்னுடைய தலைவராகவும், குருநாதராகவும் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, அவருடைய விவாதத்திறமை, அவருடைய பேச்சாற்றல், அவருடைய மனிதாபிமானம் எல்லாம் என்னை கவர்ந்தது. நான் மிகவும் மதித்து போற்றிய தலைவர். இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் 9 பிரதமர்களை கேள்விக்கணைகளால் திகைக்க வைத்தவர். காமராஜருக்கு பிறகு தென் தமிழகத்தில் இருந்த ஒரு தலைவருடைய செல்வாக்கு வடபுலத்தில் இருந்தது என்றால், அந்த வரலாறு வைகோவுக்கு மட்டும்தான் சொந்தம்.
வைகோவுடன் இணைய வாய்ப்பு உள்ளதா?
இனி இலக்கிய மேடைதான். நான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறேன்.
இவ்வாறு கூறினார்.