
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி சென்னையில் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமோ படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார்.
இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது. பாலசுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளனர். கடன் பணம் செலுத்துவது தொடர்பாக் சொத்து ஒன்றை கிரையம் பேசி முன்பணம் வாங்கியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக டிராவல்ஸ் தொடங்க வேண்டும் என்று அந்த பணத்தைத் தாய் செல்வியிடம் கேட்டு கோபிநாத் தொந்தரவு செய்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் மது அருந்திவிட்டு வந்து கோபிநாத் வீட்டு வாசலில் உள்ள கட்டிலில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரத்தில் இருந்த செல்வி, மகன் கோபிநாதை கொடாரியால் வெட்டியுள்ளார். பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாய் செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.