சென்னையில் மூதாட்டி ஒருவரிடம், பார்ப்பதற்கு தனது அம்மா போல் இருப்பதாகக் கூறி பாசத்தை காட்டி மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி நகைகளை பறித்துச் சென்ற பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜானகி. 60 வயதான இவர், அருகில் உள்ள சீத்தம்மாள் தெருவில் உள்ள அலுவலகத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் வேலை முடித்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த நபர் அம்மா என கூறி மூதாட்டியை கட்டி அணைத்து தன்னுடைய அம்மாவைப் போல் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு பாச மழை பொழிந்துள்ளார்.
அவரது கண்ணீரைக் கண்டு மனமிறங்கிய அந்த நபருக்கு மூதாட்டி ஆறுதல் கூறியுள்ளார். அப்போது வெகுநேரம் பாசத்துடன் அந்த நபர் மூதாட்டியிடம் பேசியுள்ளார். பின்னர் மூதாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய அந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த நகை தனது அம்மா அணிந்திருக்கும் நகை போல் இருப்பதாகவும், அந்த நகையை தருமாறும் கேட்டுள்ளார். அதற்குப் பதிலாக, தான் வைத்திருக்கும் அதிக அளவிலான நகையை தருவதாக ஆசைவார்த்தை கூறி மூதாட்டியை ஏமாற்றியுள்ளார். இதை உண்மையென நம்பிய மூதாட்டி ஜானகி, தான் அணிந்திருந்த செயின், மோதிரம், கம்மல், மூக்குத்தி உட்பட 6 சவரன் நகைகளை கொடுத்துள்ளார்.
சாதுர்யமாக நகையை வாங்கிக் கொண்ட அந்த நபர், மீண்டும் தனது வசீகரப் பேச்சால் மூதாட்டியிடம் இருந்து செல்போன் மற்றும் 40 ரூபாய் பணத்தையும் பறித்துள்ளார். பின்னர் பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற அந்த நபர் நீண்ட நேரமாகியும் வராததால், தான் ஏமாந்துவிட்டோம் என்பதை உணர்ந்த மூதாட்டி ஜானகி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடித்த கொள்ளையனின் காட்சிகள் அந்தப் பகுதியில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை கொண்டு தப்பியோடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். வயது முதிர்ந்த காலத்திலும் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் மூதாட்டி ஜானகி, கொள்ளையனிடம் நகைகளை பறிகொடுத்துவிட்டு தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.