Skip to main content

தீபத்திருவிழா - 15 லட்சம் பக்தர்கள் வணங்கிய மகா தீபம்

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
m


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீப விழா நவம்பர் 23ந்தேதி மாலை 3 மணியளவில் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் தொடங்கியது. பாடகர் மனோ தலைமையிலான குழுவினர் பக்தி பாடல்களை பாடி பக்தர்களை பரவச நிலைக்கு கொண்டு சென்றனர்.


கோயிலுக்குள் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு ஆயிரம் போலிஸார் நிறுத்தப்பட்டனர். கோயிலுக்குள் பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு அமர வைக்கப்பட்டனர். இன்று காலை முதலே நகரில் மழை பெய்து வந்த நிலையில் மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்தது. இருந்தும் பக்தர்கள் மழையில் நனைந்தபடி திருவிழாவை கண்டுகொண்டிருந்தனர்.


மாலை 6 மணியளவில் கோயிலுக்குள் இருந்து அர்த்தநாதீஸ்வரர் வெளியே வந்து மலை உச்சியை நோக்கும்போது கோயிலுக்குள்ளும், மலை உச்சியிலும் சரியாக தீபம் ஏற்றப்பட்டது. கோயிலுக்குள்ளும், கோபுரங்களும் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குள் எரியவிடப்பட்டன. இதனை கோயிலுக்குள் இருந்த சுமார் 5 ஆயிரம் பக்தர்களும், கிரிவலப்பாதை மற்றும் நகரம், நகரத்தை சுற்றி 20 கி.மீ தொலைவு வரையிலான மக்களும் தீபத்தை கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்கிற சரண கோஷத்துடன் வணங்கினர்.


தீபவிழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், டி.ஜி.பி ராஜேந்திரன், கலெக்டர் கந்தசாமி, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னால் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான பிச்சாண்டி ( திமுக ) பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.


மகா தீபத்தை காண 10 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு ஆண்டும் கோயிலுக்குள் பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்துவருவது எதனால் என்கிற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அதேபோல் மலையேற 2 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள், ஆனால் மலையேற 1500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்