
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரான திருச்செல்வம் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு கடையின் விற்பனை பணம் ரூ.12 லட்சத்தை எடுத்து கொண்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி வழியே ராகவரெட்டிமேடு பகுதிக்கு செல்லும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தை இடித்து தள்ளி கத்தியை காட்டி மிரட்டி 12 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சோழவரம் அருண், புழல் பக்ருதீன், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார், அருண், ஜெய்சீலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்ததும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.