
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் எந்தவித ஆவணங்களோ, பதிவு எண்களோ, இல்லாத ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடி தொழில் என்கிற பெயரில் புழக்கத்தில் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலம் மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கடத்துவதாகவும் மீனவர்கள் மத்தியில் புகையத்துவங்கியுள்ளது.
‘பதிவு செய்திடாத படகுகளை வைத்திருப்பவர்கள், மீனவர்கள் மத்தியில் பசுந்தோல் போர்த்திய புலிகளைப்போல தலைவர்களாக இருந்துகொண்டு, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், பாலியல் தொல்லை கொடுப்பதும், தட்டிக்கேட்பவர்களின் குடும்பங்களை கிராமத்தைவிட்டு ஒதுக்கிவைத்து கொடுமைப்படுத்துவதாக’ குமுறுகிறார்கள் மீனவர்கள்.
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களின் நலனுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டில் மீன்பிடித் துறைமுகம் காரைக்காலில் உருவாக்கப்பட்டது. அங்கு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 200 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவருகின்றனர். அதோடு தமிழக பகுதிகளை சேர்ந்த சில மீனவர்களும் தங்களின் விசைப் படகுகளை அங்கு நிறுத்தி வைத்துக்கொண்டு மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர். அப்படி நிறுத்திவைத்து மீன்பிடிக்க செல்வதற்கு முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி எந்தவித அனுமதியும், பதிவும் செய்திடாத சில ராட்சத படகுகள் தான் மீன்பிடி என்கிற பெயரில் கடத்தல் தொழிலை செய்கின்றனர். என்கிறார்கள் மீனவர்கள் சிலர்.

இது குறித்து மீனவ அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், "சாதாரணமாக மீன் பிடிக்க செல்லும் படகுகள் அனைத்துமே முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மீன்பிடி உரிமை பெற்றிருக்க வேண்டும். மீன்பிடித் துறைமுகத்தில் அனுமதி சீட்டு பெற்றே கடலுக்கு செல்ல வேண்டும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இவ்வளவு எல்லையை தாண்டி செல்லக்கூடாது, வலைகள் கட்டுப்பாடு என்று ஏராளமான விதிமுறைகள் உள்ளன. உண்மையாக மீன்பிடி தொழிலை மட்டும் செய்பவர்கள் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்திருப்பார்கள். அதே போல 24 மீட்டர் நீளம் மற்றும் 147 திறன் கொண்ட விசைப்படகுகள் மட்டும் பதிவு செய்யப்படும். அதற்கு மேற்பட்ட விசைப்படகுகள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் அதிக திறன் கொண்ட இன்ஜினுடன் கூடிய சட்டவிதிகளுக்கு உட்படாத வகையில் உள்ள ராட்சத விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் புழக்கத்தில் இருக்கிறது, நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடித் தொழிலுக்கு செல்கிறது என்பது மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட தெரியும். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த படகுகள் அனைத்துமே மீனவர்கள் மத்தியில் பெரும் புள்ளிகளாக இருப்பதால் அதிகாரிகளும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. இதை சாதகமாக்கிக்கொண்டு உள்ளூரில் உள்ள மீனவர்களிடம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியரும், எஸ்,பியும், மீன்வளத்துறை ஆணையரும் நினைத்தால் முடிவுகட்டமுடியும்," என்கிறார் விவரமாக.
காரைக்கால் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் ஒருவர் கூறுகையில், "காரைக்கால் துறைமுகம் சமீப காலமாகவே கட்டுபாடுகளை இழந்துவிட்டது, சில மாதங்களுக்கு முன்புகூட கடல்வழியாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திசென்று ஒருசில படகுகள் மாட்டிக்கொண்டன. தங்கம், போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி மாட்டிக்கொண்ட படகுகளும், அது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
இவை அனைத்துமே பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மூலமே நடக்கிறது. அதோடு ராட்சத இயந்திரங்களுடன் படகுகளில் மீன்பிடிக்க செல்வதால் ஒரு மாதம் பிடிக்கவேண்டிய மீன்களை ஒரு வாரத்தில் பிடித்துக்கொண்டு வந்துடுவாங்க. அவர்களிடம் எந்த அனுமதியும் கிடையாது, ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறாங்க. அதனால அவங்க எங்களை போன்ற மீனவர்கள் மத்தியில் அராஜகம் செய்கின்றனர். கிளிஞ்சல்மேட்டில் ஊர் தலைவர்கள் என்கிற போர்வையில் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அலவே இல்லாமல் போய்விட்டது. அவர்களால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளது, பல பெண்கள் பாலியல் ரீதியாக வெளியில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் உடனடியாக பதிவு செய்யப்படாத படகுகள் அனைத்தையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார் வேதனையுடன்.