சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டெல்லி சென்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உள்ளார். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என ஆர்.டி.ஐ. மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு, சிறையிலுள்ள சசிகலா 2021, ஜனவரி 27-ல் விடுதலையாகிறார். மேலும், அபராதத் தொகையான ரூ.10 கோடியை அவர் நிச்சயம் செலுத்த வேண்டும், ஒருவேளை செலுத்தத் தவறினால், விடுதலையாவது ஓராண்டு தள்ளிப்போகும் என்று அவருக்கு அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அமமுகவினர் செப்டம்பர் மாதத்திலேயே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (20.09.2020) சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்றுள்ளார். தினகரனின் டெல்லி பயணம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்தபோது, சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதற்கு மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை செய்வதற்காக சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்கூட்டியே விடுதலையாவதற்கு என்னென்ன வாய்ப்பு இருக்கிறது. அபராதத் தொகையை கட்ட வேண்டிய வழிமுறைகள் என்ன? என விரிவான ஆலோசனை நடத்தவே டெல்லி சென்றார் என்றும், இந்த பயணத்தின் போது பாஜகவைச் சேர்ந்த சிலரை சந்திக்கவும் சென்றார் என்றும் கூறப்படுகிறது.
சசிகலா இந்த மாதமே வந்துவிடுவார் என்று தகவல்கள் வெளியான நேரத்தில் கடந்த 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, "சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், அவர் வந்ததற்குப் பிறகு என்ன முடிவு எடுக்கிறாரோ அதனைப் பொறுத்துத்தான் அரசியலில் தாக்கம் இருக்கும்" என்றார். அன்றைய தினமே சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் சசிகலா விடுதலை குறித்தும் காரசாரமாக பேசப்பட்டது. இந்தநிலையில் தினகரன் டெல்லி சென்றுள்ளால் அதிமுகவினரிடையே மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.