அணுகுண்டு சொம்புடன் அமெரிக்க நாட்டாமை ட்ரம்ப்!
சோவியத் ரஷ்யா கூட்டமைப்பு நாடுகள் சிதறிய பிறகு, அமெரிக்க நாட்டாமையின் அடாவடி மிரட்டல்கள் உலகை பதற்றத்திலேயே வைத்திருக்கிறது.
தனக்கு பிடிக்காத நாடுகளில் சில ஆயிரம்பேரை போராட்டத்துக்கு தூண்டிவிட்டு, அந்தப் போராட்டம் நீடிக்கும்படி செய்வது சமீப காலமாக அமெரிக்கா நடத்தும் கலவர பாணியாக மாறியிருக்கிறது.
இராக் தனது ஆதரவாளராக இருக்கும்வரை சதாம் உசேனுடன் கூடிக்குலாவியது அமெரிக்கா. அதன்பின்னர் சதாம் உசேன் அமெரிக்காவின் முடிவுகளை ஏற்க மறுத்து சுயேச்சையாக எண்ணெய் விலையைத் தீர்மானிக்க முயன்றார்.
அதைத்தொடர்ந்து, இராக்கிடம், உயிரி ஆயுதங்களும், அணு ஆயுதங்களும் குவிந்து கிடப்பதாக ஐ.நா. சபையைப் பயன்படுத்தி தொடர்ந்து டார்ச்சர் செய்தது.
சர்வதேச அணு ஆயுத கமிஷன் சோதனையில் அப்படி ஆயுதங்கள் இல்லை என்று கூறியபின்னரும், இராக் மீது நேட்டோ கூட்டப்படை தாக்குதலைத் தொடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வயல்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட்டு கொன்று பழிதீர்த்தது.
அமெரிக்காவின் ஆதரவு வேண்டாம். உலக வங்கியின் கட்டுப்பாடும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த லிபியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. பாலைவன நாட்டை சோலைவனமாக்கிய அதிபர் கடாபியை எதிர்த்து வெறும் பத்தாயிரம் பேரை திரட்டி தொடர் போராட்டம் நடத்தும்படி தூண்டியது அமெரிக்கா. கடாபிக்கு எதிராக லிபியா முழுவதும் கொந்தளிப்பதாக மீடியாவை வைத்து பிரச்சாரம் செய்து உலகை நம்ப வைத்தது.
எண்ணெய் வருமானத்தை மக்களுக்கு பிரித்துக் கொடுத்த கடாபியின் அரசாங்கத்தை, தனது கைக்கூலிகளுக்கு ஆதரவாக ராணுவத்தை அனுப்பி கவிழ்த்து நாட்டை நாசம் செய்தது. தந்தை என்று போற்றிய கடாபியை சொந்த மக்களே கொல்லும் நிலைக்கு தள்ளியது அமெரிக்கா.
அதில் தனது முயற்சி வெற்றி பெற்றவுடன் எகிப்தில் மக்கள் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டியது. அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான அந்தப் போராட்டத்தின் முடிவில் ராணுவத்தின் பிடியில் எகிப்து நிர்வாகம் போனது. அங்கும் அமெரிக்காவின் பொம்மை அரசு பொறுப்புக்கு வந்தது.
எகிப்தைத் தொடர்ந்து சிரியாவில் இதேபோன்ற மக்கள் போராட்டத்தை தூண்டி அங்கு இன்னும் குழப்பம் முடிவுக்கே வராமல் நீடிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்களின் நலனையும், உலகம் முழுவதும் உள்ள ஆயுத வியாபாரிகளின் நலனுக்காகவும் இதுபோன்ற கலவரங்களை தூண்டுகிறது அமெரிக்கா. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களின் பொறுப்பில் உள்ள அரசுகளுக்கு எதிராக கலவரத்தை தூண்டி அந்த நாடுகளில் ரத்தக்களறியை உருவாக்குவது அமெரிக்காவின் நோக்கம்.
அந்த வரிசையில் சமீப காலமாக வடகொரியாவையும், வெனிசூலாவையும் அமெரிக்கா கண் வைத்திருக்கிறது. வெனிசூலாவில் 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சோசலிஸ ஆட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாதபடிக்கு தொடர் போராட்டங்களை தூண்டிவருகிறது அமெரிக்கா.
யாருடனும் எந்த வம்பு தும்புகளுக்கும் போகாமல் சுயமாக முன்னேறும் கம்யூனிஸ நாடான வடகொரியாவை ரவுடி நாடு என்று முத்திரை குத்தி அந்த நாட்டின் மீது தாக்குதலைத் தொடுக்க பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சிக்கிறது. அந்த நாட்டின் மீது போடப்பட்ட அத்தனை பொருளாதார தடைகளையும் மீறி அது முன்னேறி, அணு ஆயுத தொழில் நுட்பத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
வெனிசூலாவில் அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகளின் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அங்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க மக்கள் ஆதரவுடன் அதிபர் மதுரோ முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இதற்காக நடந்த தேர்தலை செல்லாது என்று அமெரி்க்கா கூறுகிறது. வெனிசூலா மீது பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அவருடைய எச்சரிக்கை கோமாளித்தனமானது என்று வெனிசூலா கிண்டலடித்துள்ளது. இன்னொரு நாட்டின் இறையாண்மையை கேலிக்குரியதாக்கும் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை வெனிசூலாவை ஆதரிக்கும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்துள்ளன.
அதுபோலவே, வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்த நாட்டின் மீது குண்டு மழை பொழியும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
அணு ஆயுத வெறி அமெரிக்காவுக்கே சொந்தமானது. அதுதான் அணு ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. அத்தகைய அழிவு ஆயுதம் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது.
அமெரிக்காவின் அணு ஆயுதத்துக்கு உலக நாடுகள் பயந்து நடுங்கிய காலம் மறைந்துவிட்டது. ஒவ்வொரு நாடும் தன்னுடைய தற்காப்புக்கு அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளியதே அமெரிக்காவின் இந்த மிரட்டல் போக்குதான் என்று வடகொரியா கூறியுள்ளது.
அமெரி்க்க நாட்டாமையின் மிரட்டல்களுக்கு எப்போது முடிவு வரும் என்று போர்ப்பதற்றத்தில் இருக்கிற அப்பாவி நாடுகள் கேட்கின்றன.
-ஆதனூர் சோழன்