Skip to main content

தேவநாதனின் சொத்து விவரங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்!

Published on 03/04/2025 | Edited on 03/04/2025

 

Details of Devanathan assets filed in the High Court

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிட்டவர் தேவநாதன் யாதவ். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதி தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக தேவநாதன், குணசீலன், சாலமன், மோகன்தாஸ், மகிமைநாதன், தேவசேனாதிபதி மற்றும் சுதீர்சந்தர் ஆகிய 7 மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதி (13.11.2024) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே தேவநாதன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக தேவநாதன், குணசீலன் ஆகிய இருவரும் 2வது முறையாக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் கடந்த  மார்ச் மாதம் 25ஆம் தேதி (25.03.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிடுகையில், “இந்த விவகாரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டோர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். தேவநாதன் அரசியல் மற்றும் பண பின்புலம் கொண்டவர் ஆவார். எனவே தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார். அதே சமயம் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்திலக் வாதிடுகையில், “விசாரணைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சந்தர்மோகன், “தேவநாதனின் சொத்துகளை ஏலம் விட்டு, அந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா? என தேவநாதன் பதிலளிக்க வேண்டும். அதோடு தேவநாதன் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (03.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் தொடர்புடைய சொத்து விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை மற்றும் முதலீட்டாளர்கள் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது என நீதிபதி சந்திரமோகன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்