பாரூக்
"நான் கடவுள் - நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு'' என்று மெசெஜ் வந்தவுடன் "ஐ லவ் யு'' என்று சொல்கிறார் அந்தப் பெண். அடுத்து…"இப்ப கடவுள் உன்னைப் பார்க்கணும்னு விரும்புகிறார். உன்னோட படத்தை எனக்கு அனுப்பு'' என்றவுடன், அந்தப் பெண்ணும் தன்னுடைய படத்தை அனுப்புகிறார். "கடவுள் இப்ப உன்னை முழுமையாகப் பார்க்க விரும்புகிறார். பிறந்தமேனியாய் உன் படத்தை அனுப்பு'' என்றவுடன் அந்தப் பெண்ணும் அப்படியே படம் அனுப்புகிறார்.
இப்படி செல்ஃபோனில் வாட்ஸ்ஆப்-ல் கடவுள் பெயரில் பேசியவர் மீதுதான் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் அந்த இளம் பெண் புகார் கொடுத்தார். தன்னை வசியம் செய்து ஏமாற்றியவனுக்கு தன் கணவனே உடந்தையாக இருப்பதையும், 25 பவுன் நகையை ஏமாற்றி வாங்கியதையும் தன்னைப்போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும் புகாராகத் தெரிவித்தார். மிரண்டு போன உயரதிகாரிகள் உடனே கண்டோன்மென்ட் ஏ.சி. மணிகண்டனை விசாரிக்க உத்தரவிட்டனர்.
அவரது விசாரணையில், புகாரில் உண்மை இருப்பது தெரியவர, அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வேதவள்ளியை உடனே ஆக்ஷனில் இறங்கினார். கடவுள் பெயரால் வசியம் செய்த பாரூக், அந்தப் பெண்ணின் கணவர் அஸ்லாம் ஆகியோர் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்து 3 லேப்டாப் உள்ளிட்ட செல்போன்களைப் பறிமுதல் செய்து 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
கண்டோன்மெண்ட் ஸ்டேஷனில் புகார் கொடுத்த பர்வீனின் அண்ணனிடம் பேசினோம்.. அவர் தயங்கித் தயங்கி, "சார்.. பாரூக் இறைபோதனை செய்பவர் எனத் தெரியும், அவர் ஒருநாள் என்னிடம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இரண்டு பேர் நம்ம மதத்தை நம்பி வந்திருக்காங்க, அவுங்களுக்கு நாமதான் உதவியா இருக்கணும். உங்க தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க எனச் சொன்னார். எங்களுக்குப் பெற்றோர் இல்லாததால் என்னோட தங்கைக்கு 2008 இல், 25 பவுன் நகை போட்டு, மதம் மாறிய அஸ்லாமுக்கு திருமணம் பண்ணிக் கொடுத்தோம். கடைசியில் இப்படி இறைபோதகர் பாரூக்கே நாசம் பண்ணுவான்னு எதிர்பார்க்கவே இல்லை'' என்று கண்ணீர் விட்டார்.
புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த பர்வீன் நம்மிடம்,… "தாதா (பாரூக்) சொன்னதால தான் விவேக் என்கிற அஸ்லாமைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவர் ஐ.டியில் வேலை செய்கிறவர் என்பதால் கல்யாணம் ஆகிச் சென்னையில் இருந்தோம். ஒரு வருடத்திலே அஸ்லாம் என்னிடம் தாதா திருச்சி வரச் சொல்கிறார் என்றார். திருச்சியில் சுந்தர் நகரில் தனிக்குடித்தனம் போனோம். கூடவே, அவரோடு மதம் மாறிய தங்கை அபர்ணா என்கிற இரமும் எங்களோட தங்கி இருந்தாங்க. தாதா பாரூக் அவரோட மனைவி பாத்திமாவுடன் வீட்டுக்கு வந்து போதனை வழங்குவார் எங்களுக்கு. பல நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். மன்னார்புரம், பீமநகர், இடங்களில் மாறி மாறி நடக்கும், தன்னை நபி வழி வந்தவர் என்றும், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்ட நத்தர்வலி அவுலியா என்றும் சொல்வார்.
இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், கணவருக்காக போதனை கூட்டத்திற்குப் போவேன். மாதம் ஒரு முறை எனக்குத் தனியே போதனை கொடுக்க வேண்டும் என்று பாரூக் சொல்ல, என் கணவரும் சரி சொல்லிவிட்டார். தாதா என்னிடம் தனியாக, நான் ஆசீர்வதிக்கப்பட்டவன், என்று வாட்டர் பாட்டிலில் புனித தீர்த்தம் கொடுப்பார். அதைக் குடித்த கால் மணி நேரம் கழித்து மயக்கம் வருவது போல் இருக்கும். தூங்கிவிடுவேன், காலையில் எழுந்தால் இடுப்புக்குக் கீழே எனக்கு வலி அதிகமாக இருக்கும். இது பத்தி என் நாத்தனாரிடம் சொன்னேன். அவர் அப்படிதான் இருக்கும் சரியாகிடும்னு சொல்லிட்டார். அந்தத் தாதா என்னிடம் செல்போனில் பேசுவார். இப்படிப் பேசிப்பேசி என்னை மெஸ்மரிசம் பண்ணி, அவர் சொல்வதை எல்லாம் செய்யும்படி ஆக்கிவிட்டார்.
கொஞ்ச நாள் கழித்து என் கணவருடன் என்னுடைய நகைகளை எல்லாம் வாங்கி அந்த பாரூக்கிடம் கொடுக்க, இதனால் எனக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது. என் நாத்தனார் இரமிடம் சொன்னப்ப, அங்கே போய்ப் பிரார்த்தனை செய்தால் சரியாகிவிடும் என்றார். ஆனால், அங்கே போனபோது, புனிதநீர் கொடுத்தார்கள். மயக்கத்திலிருந்த என்னை என் கணவரே, பாரூக் ரூமில் தூக்கிக் கொண்டு போய் ரூமில் விட்டுவிட்டார். மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்தது. இப்படி ஒரு ஈனவேலைக்குப் பயன்படுத்தும் கணவனே தேவையில்லை என்று இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு எங்க அண்ணன் வீட்டிற்குப் போயிட்டேன்.
அதன்பிறகுதான், அந்த பாரூக் ஒரு நாள் போன் செய்து, மதபோதனைக்கு வரும்படி கட்டாயப்படுத்தியதோடு, இல்லையென்றால், போட்டோக்களை நெட்டில் போட்டுவிடுவேன் என்றும் மிரட்டினான். என்னைப் போல பல பெண்களைச் சீரழித்த பாரூக்குக்கு என் கணவர் அஸ்லாமும், நாத்தனார் இரமும் உடந்தையாக இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். பிராமணர்களான விவேக்கும் அபர்ணாவும் அஸ்லாம், இரம் என்ற பெயரில் மதம் மாறி ஏமாற்றுகிறார்கள்'' என்றார்.
இரமின் கணவர் இஸ்மாயில் நம்மிடம்... "எனக்கும் இரமுக்கும் திருமணம் ஆகி 8 வருடம் ஆச்சு. என்னுடைய பால்ய நண்பர் பாரூக் அடிக்கடி வீட்டுக்கு வருவார், இரம் அவரை டாடி என்றுதான் அழைப்பார். என் பேச்சைவிட அவர் பேச்சுக்கு மதிப்பளிப்பார். மதபோதகர் என்பதால் மரியாதை என நினைத்தேன். மன்னார்புரம் ஏரியாவில் உள்ள பெரிய ஓட்டலில் இரண்டு நாள் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள் எனத் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். மனைவியுடன் சண்டை போட்டேன். தப்புப் பண்ணிவிட்டதாகவும் மன்னிக்கும்படியும் சொன்னார். ஆனால், போலீசில் புகார் கொடுக்க போனப்ப, பாரூக் தனக்கு டாடி என்றும், நான்தான் சந்தேகப்படுகிறேன் என்றும் மாறி மாறிப் பேசி குழப்பினார்.
விசாரித்தபோதுதான், இரம் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்தவர் என்றும், ராமகிருஷ்ணன் என்பவருடம் திருமணம் ஆகி, இந்த பாரூக் பிரச்சனையில் விவாகரத்து வாங்கியிருக்கிறார் என்றும் தெரிந்தது. இன்னும் யாரையெல்லாம் பாரூக் கெடுக்கப் போகிறானோ என்கிற பயம் இருக்கிறது, என் 2 குழந்தைகளும் இரமிடம்தான் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்று அங்கலாய்த்தார்.
பாரூக் நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது… விவேக் என்கிற அஸ்லாம், எம்.பி.ஏ. பட்டதாரி, அவர் சகோதரி இரம் என்.ஐ.டியில் கோல்டு மெடல். விவேக், பரூக், நானும் திருச்சி பிஷப்ஹீபர் பள்ளி தோழர்கள். உடன் படித்தவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறான். என்னையும் மதம் மாற்றிவிட்டான். தனக்கு கேன்சர் என்றும், தன் உடலில் உள்ள கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்லி, என்னிடம் 18 இலட்சம் வரை ஏமாற்றிவிட்டான்'' என்றார்.
பாரூக்கின் இன்னொரு நண்பர் நம்மிடம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தர்ஷா இவனுடைய உடலில் இருப்பதாகச் சொல்லி குரலை மாற்றி பேசுவான், சிரியா பிரச்சனையில் வீரர்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று வாங்குவான், என் உடல் இங்க இருக்கு, ஆனா ஜிகாதுக்காக சிரியா வரை சென்று வந்தேன் என்று சொல்வான். விவேக்கை மதம் மாற்றி அடிமைபோல நடத்தினான். பாரூக் சொன்னதற்காக, விவேக் தன் மகனின் கழிவுகளைக்கூட சாப்பிட்டிருக்கான் என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார்.
பர்வீனின் வழக்கறிஞர் ராஜா தமிழ்செல்வன் நம்மிடம், "பாரூக்கினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சமூகச்சூழல் கருதி ரொம்பப் பயப்படுகிறார்கள், திருச்சியில் ரஜினி ரசிகர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவரின் குடும்பத்தில் மெஸ்மரிசம் செய்து இலட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றியிருக்கிறார்கள். இதை எல்லாம் போலிஸ் சரியான முறையில் விசாரித்தால் இவனால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவார்கள்'' என்றார்.
இந்த வழக்கை விசாரிக்கும் கண்டோன்ட்மெண்ட் ஏ.சி. மணிகண்டன் நம்மிடம், "செல்போன், லேப்டாப் எடுத்து வந்திருக்கிறோம். அதை எல்லாம் ரெக்கவரி செய்ததும் விசாரணை தொடங்கும். யாரும் தப்ப முடியாது'' என்றார்.
-ஜெ.தாவீதுராஜ்