Skip to main content

உத்தவ்தாக்கரே சபதம்; துணை நிற்கும் சரத்பவார்; அதிர்ச்சியில் பாஜக! - புதுமடம் ஹலீம்

Published on 22/10/2024 | Edited on 22/10/2024
Pudumadam Haleem |Maharashtra |BJP

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசிவருகின்றனர். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம், நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கள நிலவரத்தை விளக்குகிறார்.  

288 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் என்.சி.பி. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியமைத்தது அதேபோல் காங்கிரஸ், சரத் பவாரின் என்.சி.பி. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியமைத்திருந்தனர். இதில் உத்தவ் தாக்கரேவுடன் இருந்த ஏக்நாத் ஷிண்டே மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து. அதே போல் சரத் பவாருடன் இருந்த அஜித் பவாரின் மனைவியின் மீது ரூ.12,000 கோடி ஊழல் வழக்கு இருந்தது. இதை பகடை காயாக நகர்த்திய பா.ஜ.க. சிவசேனா கட்சியையும் என்.சி.பி. கட்சியையும் உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வாராகினர். இது உத்தவ் தாக்கரேவுக்கு மிகப்பெரிய கெளரவ பிரச்சனையாக மாறிய நிலையில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கட்சியை அழிப்பதே தன் முதல் வேலை என்று சபதம் எடுத்திருந்தார். சித்தாந்த அடிப்படையில் பா.ஜ.க.வும் சிவசேனாவுக்கும் 90% ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இருந்தாலும்  பா.ஜ.க.வை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற முடிவை உத்தவ் தாக்கரே எடுத்திருந்தார். 

இப்போது நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு மிகவும் முக்கியமான தேர்தல். ஏனென்றால் மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூரில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அடுத்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகி ஒரு நூற்றாண்டை கடக்கவிருப்பதால் பா.ஜ.க. இந்த தேர்தலில் பெரும்பான்மையாக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.  160க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளராக களம் காண போகிறார். இவர் நாக்பூரை சேர்ந்த சித்திர பவ பிராமணர் சமூகம் என்பதால் முதல்வராக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விரும்புகிறது. இதற்கு காரணம் பெரும்பாலான பா.ஜ.க.வினர் சித்திர பவ பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான்.   

பா.ஜ.க. இந்த தேர்தலில் வெற்றிபெறுமா என்றால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை வாக்கு எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கையில் பா.ஜ.க. வெறும் 9 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றிருந்து. அதேபோல் பா.ஜ.கவுடன் என்.டி.யே கூட்டணியில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி 7 தொகுதிகளிலும் அஜித் பவாரின் என்.சி.பி. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் சரத் பவாரின் என்.சி.பி. 8 தொகுதிகளிலும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். மகாராஷ்டிராவில் 48 நாடளுமன்ற தொகுதிகளில் மொத்தமாக 30 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. என்.டி.யே கூட்டணி 18 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது. அதனால் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எளிதாக 180 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் என்.சி.பி. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

2019ல் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வாங்கியிருந்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதத்தைவிட நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.யே கூட்டணி வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் மிகக்குறைவாக இருப்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த மாதிரியான வியூகம் அமைத்தாலும் பெரும்பான்மையாக பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மாகாராஷ்டிரா மாநிலத் தேர்தலை சீரியஸான தேர்தலாக கருதுவதால் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதிகப்படியான அழுத்தம் இந்த தேர்தலில் இருக்கிறது. தேர்தல் ரிசல்ட் பா.ஜ.க.விற்கு எதிராக அமைந்தால் மோடி வீட்டிற்கு அனுப்பப்படக்கூட வாய்ப்பிருக்கிறது.