Skip to main content

வலியார்முன் தன்னை நினைக்க... காவல்துறைக்கு ஒரு கேள்வி

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

police brutal attack

 

 

பிப்ரவரி 1ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிற்காமல் சென்றதால் காவலர் துரத்தி சென்று லத்தியால் தாக்கினார். அதில் அவர் வண்டியோடு கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  சோதனைக்கு ஒத்துழைக்காமல் செல்பவரை தாக்கியாவது நிறுத்த வேண்டும் என்பதன் நிர்பந்தம் என்ன ?  விபத்துக்களை தடுப்பதற்காக சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் வாகனம் ஓட்டிக்கொண்டிருப்பவரை தாக்கினால் விபத்து ஏற்படும் என்பதை  உணர்ந்திருக்கவில்லையா ? அல்லது ஒரு சாமானியன் தன்னை மதிக்காது செல்கிறான் என்ற அதிகாரம் கொண்டவருக்கான கோவமா ?

 

சில நாட்களுக்கு முன்பு, பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக பணிபுரியும் ராஜேஷ் தனது மரணத்துக்கு முன் அவர் எடுத்த வீடியோ வெளியானது அதில் சொல்லப்பட்டிருக்கும் அவரின் ஆதங்கம் பார்ப்போர் அனைவருக்குள்ளும் இருப்பதை உணர முடிகிறது.  பாடியிலிருந்து பெண் ஊழியரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகரில் அடுத்த ஊழியருக்காக சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி காத்திருந்த ராஜேஷை அங்கு வந்த போலீசார் அது நோ பார்க்கிங் என்றுக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். வண்டியில் பெண் ஊழியர் இருக்கிறார் நாகரீகமா பேசுங்கள் என்று கூறியும் அதை பொருட்படுத்தாத போலீசார் அவரது வீட்டில் இருக்கும் பெண்களை பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதற்கு முன் திருவொற்றியூரில் சர்விஸ் ரோடு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு உறங்கிய ராஜேஷின் காரை போலீசார் லாக் செய்துவிட்டு 500 ரூபாய் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுமாதிரி சம்பவங்களால் மிகவும் மனம் உடைந்த ராஜேஷ் போலீசார் ஏற்படுத்திய அவமானத்தால் தற்கொலை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளார். தான் மட்டும் அல்லாது தன்னை போன்ற எளிய வாகன ஓட்டிகள் போலீசாரின் அதிகாரத்தால் பலியாவதையும் தனது சாவுக்கு முழு காரணம் சென்னை காவல்துறைதான் எனவும் ஒரு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.  காக்கி சட்டை போட்டிருப்பதால்தான் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போலீசுக்கு மரியாதை கொடுக்கிறோம், அது இல்லாமல் இப்படியெல்லாம் பேசியிருந்தால் நாங்கள் யார் என காட்டியிருப்போம். என் சாவுக்கு பிறகாவது இதுபோல் நடக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டிவிட்டு மறைமலைநகர் அருகில் இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து உயிரைவிட்டிருக்கிறார்.  காவல்துறையின் அத்துமீறலுக்கு அடுத்த பலியாக ராஜேஷ் மரணம் கருதப்படுகிறது.

 

தமிழகத்தில் இது புதிதல்ல. குற்றவாளிகள் முன்பு,ம் சமூக விரோதிகள் முன்பும் மட்டுமே ஓங்கப்பட வேண்டிய காவல்துறை லத்திகள் சாமானிய மக்கள் மீதும் சமூகநல போராளிகள் மீதும் ஓங்கி அடிக்கும் என்பது காவல்துறையின் இயல்பான அடையாளமாய் உள்ளது.  பெரும்பாலான காவல்துறையினர் காக்கிச்சட்டை அணியும்போதே மனிதம் என்ற உணர்வை உரித்து பத்திரமாக வீட்டில் வைத்துவிடுகின்றனர் போலும்.  2017 ஆம் ஆண்டு திருப்பூர் அருகே சாமளாபுரத்தில்  இயங்கிவந்த மதுக்கடையை மூடக்கூறி பெண்கள் நடத்திய போராட்டதை களைப்பதற்காக போலீசார் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என்றும் பாராமல் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கணவனின், மகனின், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனை தாங்காமல் தெருவில் இறங்கி போராடிய அப்பாவி பெண்கள் தலை உடைந்து, கை முறிந்து ஜனநாயகம் செத்துவிட்டது என குமுறினர். சமூகம் சார்ந்த போராட்டங்களின் மீது காவல்துறையின் தடியடிகளும், துப்பாக்கிச்சூடும் ஒருபுறம் இருக்க  தன் அன்றாட வாழ்க்கையில் பிழைப்புக்காக போராடும் சாமானிய மக்கள் போலீசின் மனிதநேயமற்ற செயல்களுக்கு பலியாவதும் நடக்கிறது.

 

police brutal attack

 

நீதிமன்றங்கள் மக்கள் நலனுக்காக விதிக்கும் சட்டங்கள் காவல்துறைக்கு லஞ்சம் வாங்கும் வாய்ப்பாக மாறிப்போகிறது. சட்டங்கள் என்னவாக இருந்தாலும் போலீசுக்கு தேவையெல்லாம் ஸ்பாட் ஃபைன்  100, 500தான்.  திருச்சியில் கடந்த ஆண்டு உஷாவின் உயிருக்கு காவல்துறை விதித்திருந்த விலை இதுதான் போலும். பாவம் ராஜாவுக்கு இது புரியாமல் காவல்துறையின் அதிகாரத்திற்கு தன் மனைவி உஷாவையும், அவர் வயிற்றில் இருந்த குழந்தையையும் பறிகொடுத்துவிட்டார். தஞ்சாவூரை சேர்ந்த ராஜா, கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் நண்பரின் திருமண நிச்சய விழாவிற்காக சென்றுவரும்போது திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போகும் வழியில் துவாக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் காமராஜ்  ராஜாவின் வாகனத்தை நிறுத்தி பணம் வாங்க முயற்சித்துள்ளார்.  அதை புரிந்து கொள்ளாத ராஜா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய போது  ஆய்வாளர் காமராஜ் வேறொரு வாகனத்தில் துரத்திவந்து கோவமாக உதைத்துள்ளார். இதனால் நிலைதடுமாறி விழுந்ததில் உஷா பலத்தகாயமடைந்தார். சிறிது நேரத்துலயே அவரும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்.  மாற்றுத்திறனாளி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய உஷாவை மிகுந்த கனவுகளுடன் திருமணம் செய்த ராஜா அவரின் வாழ்க்கையையே காவல்துறையினால் அழித்துவிட்டது என கதறிய கதறல் கல் இதயம் கொண்டவரையும் கண் கலங்க செய்தது. இதற்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை பணியிடை நீக்கம் மட்டுமே.

 

காவல்துறைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமும், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களும் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும் மட்டுமே. அனால் தற்போது காவல்துறையினர் சட்டங்களை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.  பணம் படைத்தவர்கள் குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களுக்கு விதிவிலக்களிப்பதும், சாதாரண மக்கள் குற்றமற்றவராய் இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் இன்னலுக்கு ஆளாவதும் வாடிக்கையே.  போக்குவரத்துக்  காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்குவது போன்றும் நிற்காதவர்களை துரத்தி அடிப்பது போன்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திகின்றன. தன்  சொந்த செலவில் தலைக்கவசம் வாங்கி இலவசமாக தருகிற மிக நேர்மையான காவல் அதிகாரிகள் இருக்கிற போதும், பெருவாரியான அதிகாரிகளின் சுயநல போக்கினால் ஏற்படும் விளைவுகள் ராஜேஷின் மரணம் போன்று  ஈடுசெய்யமுடியாதவை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டபோதும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் நேர்மையான அதிகாரிகள் இருந்தும் பயனில்லை என்பது கசக்கும் உண்மை!!!

 

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து

 

இது வள்ளுவரின் வார்த்தைகள். காவல்துறையினர் வலியவர்களுக்கு தாங்கள் எப்படி அனுகூலம் செய்கிறோம் என்பதை, மெலியவர்களின் முன் அராஜகம் செய்யும்போது நினைக்க வேண்டும்.

 

 

 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.