‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், த.வெ.க. மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
தமிழ் நாட்டு அரசியலில் விஜய் போன்ற திரைப்பட பிரபலங்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு அதைச் செய்யாமல் இருந்தததையும், கட்சி தொடங்கி ஒரு கட்டத்திற்கு மேல் தொடரமுடியாமல் இருந்த வரலாற்றையும் பார்த்திருக்கிறோம். விஜய் கட்சி தொடங்கியதற்கு நட்பு ரீதியாக வாழ்த்தியிருக்கிறோம். அவரின் கொள்கை பிரகடனத்தில், கருத்தியல் ரீதியாக ஒரு சாராரை எதிரி என விஜய் சுட்டிக்காட்டியதில் தெளிவு இருக்கிறது. தி.மு.க.வை அரசியலில் எதிரியாகச் சொல்லி அதற்கேற்ப தீர்மானங்களையும் நிறைவேற்றி விஜய் வருகிறார். ஆளும் அரசை விமர்சிப்பது தவறு கிடையாது. ஆனால் ஆளும் அரசை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் யாரை நிறுத்த போகிறார் என்பதுதான் கேள்வி. இன்றைக்கு கட்சி தொடங்கி அடுத்தாண்டில் ஆட்சியைப் பிடிப்பது தமிழ்நாடு வரலாற்றில் நிகழ்ந்தது இல்லை. எனவே விஜய் ஆட்சிக்கு வரப் போவதில்லை. ஆனால் யாரை அவர் ஆட்சியில் நிறுத்த போகிறார் என்று யோசிக்க வேண்டும். தி.மு.க.-வை அகற்றுவது என்பது பா.ஜ.க.வுக்கு வாய்ப்பை கொடுக்கும் என்ற விமர்சனப் பார்வையில் அதைப் பார்க்கிறோம்.
விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொன்னதை ஆதவ் அர்ஜூனா வரவேற்றிருக்கிறார். ஆனால் வி.சி.க-வின் இறுதி கருத்து என்பது தலைவர் திருமாவளவன் சொல்வதுதான். கட்சியில் புதிதாக துடிப்புடன் வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனாவை வரவேற்பது கட்சியின் கடமை. அதே சமயத்தில் அரசியல் சூழலுக்கேற்ப கருத்துகளை, தலைவர் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவருக்குத் தோழமையுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். த.வெ.க. 4 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதையே அதிசயமாகத்தான் பார்ப்போம். அதற்கு மேல் வாக்குகளைப் பெறுவதற்கு த.வெ.க. கட்சிக்கு வாய்ப்பு இல்லை. இதுதான் அரசியல் யதார்த்தம். திரைப் பிரபலங்களுக்குப் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு செல்லும் போக்கு தமிழ்நாட்டில் இல்லை.
தமிழ் நாட்டில் கடந்த 20 வருடங்களாக நடந்த சாதிய வன்கொடுமை போன்ற பல முக்கிய பிரச்சனைகளைப் பற்றி எந்தவித கருத்தும் சொல்லாமல் இருக்கும் விஜய்யின் பேச்சுகளை இளைஞர் எப்படிப் பார்ப்பார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். த.வெ.க. கட்சி 4 விழுக்காடுக்கு மேல் வாக்குகளைப் பெறாது என்பதை உறுதியாக நம்புகிறோம். அதற்கு மேல் விஜய்யுடனான உறவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை வி.சி.க. தலைவர் திருமாவளவன் தான் தீர்மானிக்க வேண்டும்
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன், விஜய் பங்கேற்பதை இந்த நிமிடம் வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதைப் பெரிதாகச் சித்தரித்து ஊடக தாக்குதல் நடைபெறுகிறது. தி.மு.க.வுடனான கூட்டணியை திருமாவளவன் தேசத்தின் நலனாகப் பார்க்கிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதனத்தைப் பாதுகாக்க ‘நரசிம்ம வாராஹி படை’ உருவாக்கவுள்ளதாக முடிவெடுத்துள்ளார். சனாதனம் என்பது மதத்தைக் குறிப்பதாகத் திரித்துப் பேசுகிறார்கள். அது மதத்தைக் குறிக்கும் சொல் கிடையாது. சனாதனம் என்பதற்கு நிலையானது என்று பொருள். இந்த சனாதனம் என்ற சொல்லை வர்ணாசிரமம் நிலையானது என்று சொல்வதற்காகவும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர். குடியரசுத் தலைவரானால் கூட சாதியை மாற்ற இயலாது அது நிலையானது என்று சொல்கின்றனர்.
வர்ணாசிரம தர்மத்தை நிலையானது என்று சுட்டிக்காட்டத்தான் சனாதனம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதைத் திரித்து மத நம்பிக்கையாகச் சித்தரித்து மதத்தைக் காப்பற்ற ஒரு படை அமைக்கும் கேலிக் கூத்து தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு கருத்தியல் அரணாக இருப்பது தி.மு.க. கட்சி. அக்கட்சியுடன் வி.சி.க.வுக்கு பல்வேறு கோரிக்கைகள் இருக்கிறது. அதை விமர்சனம் செய்தால் கூட்டணியை உடைக்கப் போவதாகப் பேசும் கருத்து மலினப்போக்கானது. சாமானியராக இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவர் திருமாவளவன். அவர் எடுக்கும் முடிவை சமூக வலைத்தளங்களில் மலினமாகப் பார்ப்பவர்கள் மனநோயாளிகள். முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரான திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது அதிகாரப் பகிர்வு வேண்டும் இல்லையென்றால் அதை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கலைஞரிடம் கூறி, உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது தி.மு.க.விற்கு நெருடலாக இருக்க வேண்டாம் என்று ராஜினாமா செய்தார். இப்படி நீண்ட நெடிய வலிகள் நிறைந்த பயணத்திற்குச் சொந்தக்காரரான திருமாவளவன் எந்த முடிவை எடுத்தாலும் அது தேசத்திற்கான மற்றும் தமிழர்களுக்கான நலனாக இருக்கும்.