புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டை முதல் திருவரங்குளம் வரை தொடர்ச்சியாக உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான தடயங்களாக உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள், செய்புரான்கல் உருக்கு உலைகள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உருக்கு கழிவுகளை பல ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு இதுவரை காணப்படாத அறிய வகையில் காணப்பட்டுள்ளது. இதுபற்றி புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் நிறுவனர் புலவர். பு.சி.தமிழரசன், செயலாளரும், தொல்லியல் ஆர்வலருமான பெருங்களூர் மு.மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகியோர் இணைந்து பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள குறுக்கு வாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பகுதியில் ஏராளமான இரும்பு தாதுக்கள் கிடைப்பதால் அவற்றை உருக்கி இரும்பு ஆயுதங்கள் தயாரித்துள்ளது தெரியவருகிறது. இப்படி தயாரிப்பதற்கு துளையிட்ட சுடுமண் குழாய்கள் மாவட்டத்தில் ஏராளமாகக் கிடைத்திருக்கிறது. தற்பொழுது குளிப்பதற்கு இப்பகுதியைப் பயன்படுத்தி வரும் மக்கள், முன்பு இப்பகுதியில் தண்ணீர் கிடைத்ததாலும், செம்புராங்கற்கள் நிறைந்த மேட்டுப்பகுதியாக இருந்ததாலும் சின்ன மோடு, பெரிய மோடு என மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் மக்கள் வசித்ததற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது.
நாகரீகமடைந்த மனித இனம் இரும்பின் பயன்பாட்டை அறிந்து போர் கருவிகளை செய்வதற்கு இப்பகுதியில் இரும்பு உருக்காலைகளை நிறுவியிருக்கலாம். இப்பகுதி பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு காலமாகவும் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். மேலும் இரும்பை பிரித்தெடுத்து கருவிகளாக உருவாக்கியவர்களுக்கு 'வல்லத்திராக்கோட்டை அரையர்கள்' வரிகள் வாங்கியதை திருவரங்குளம் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரும்பு தாதுக்களை உடைத்துப் பொடி செய்து அவற்றை ஊது உலையிலிட்டு, உருக்கி இரும்பை பிரித்து எடுத்திருக்கிறார்கள். இத்தாதுக்களை உருக்குவதற்கு அதிகளவு வெப்பம் தேவைப்படுவதால், தற்பொழுது கொல்லுப் பட்டறையில் காற்றை செலுத்தப் பயன்படுத்தப்படும் துருத்தி போன்ற அமைப்பால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளையிட்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு வட்ட வடிவமாக தாழி போன்ற அமைப்புடன் உலைக்கலன்கள் புதைந்த நிலையில் கட்டுமானத்துடன் உள்ளது. இரும்பு உலையில் வாய்ப் பகுதியான விளிம்பின் மேல் பகுதியில் இரும்பு தாதுக்கள் வழிந்தோடும் வகையில் வெளிவட்டத்திலும், உள்வட்டத்திலும் பள்ளமான அமைப்புடன் உருக்கு உலைக்கலன்கள் காணப்படுகின்றன.
இதுபோன்ற உருக்காலையின் தடயங்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஏற்கனவே பொற்பனையான்கோட்டையில் ஆய்வு செய்து அர்மேனியா போன்ற வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் தடயங்களுக்கு நிகராக இருந்ததை வெளிப்படுத்தியதை போலவே தற்போது இக்கண்டுபிடிப்பானது வழிந்தோடும் இரும்பு தாதுக்களை கீழ் தளத்தில் சேமித்ததற்கான உலையின் மேல் பகுதி மற்றும் மூக்கு பகுதி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.
உருக்கிய இரும்பு தாதுக்களின் எஞ்சிய பகுதி ஆங்காங்கே செம்புராங் கல்லுடன் இறுகிய நிலையில் திரட்டுத்திட்டாகக் காணப்படுகிறது. மேலும் “தென்பனங்காட்டு நாட்டு பெருங்கோளியூர்” எனப் இப்பகுதி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் பனை மரங்கள் நிறைந்த இவ்விடங்களில் எஞ்சிய இரும்பு கழிவுகளை கொட்டும் போது பனைக்குருத்தின் மையப்பகுதியிலிருந்து ஓலை விரிந்த நிலையில் இரும்பு தாதுக்கள் அதன் மீது கொட்டப்பட்டு குருத்தோலை விரிந்த நிலையில் அச்சு வார்ப்பாக செம்புராங் கற்களின் மீது படிந்துள்ளது. 2000 வருடங்களுக்கு முற்பட்ட இவ்வமைப்பு தற்போதுள்ள நவீன கருவிகளின் அச்சு வார்ப்பு போன்று அழகாகவும், பழமையான தொல்லியல் சான்றாகவும் உள்ளது.
இவ்விடத்திலிருந்து மேற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் பெருங்கற்கால ஈமத் திட்டைகள் 6 மீட்டர் விட்டத்தில் வெள்ளை நிற பளிங்கு கற்களால் உள்ளது. இவற்றின் காலம் (கிபி 200 - 150) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதியைத் தொடர்ந்து ஆய்வு செய்தால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும். ஆகவே இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றனர்.