அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பாரா டி.டி.வி.தினகரன்?
அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தால்தான் மத்திய பாஜக அணியில் சேர்ப்போம் என்று தமிழக பாஜக தலைவர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. சசிகலா தலைமையிலான அணி ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்றியிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி தங்கள் பக்கம்தான் தொண்டர்கள் இருப்பதாக கூறிவருகிறது.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இருந்த 12 எம்எல்ஏக்களில் இருவர் சசிகலா அணியில் இணைந்துவிட்ட நிலையில், அவருக்கு 11 எம்பிக்களும், 10 எம்எல்ஏக்களும் மட்டுமே ஆதரவு தருகின்றனர்.
பெரும்பாலான நிர்வாகிகள் சசிகலா அணியில்தான் இருக்கிறார்கள். இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலாவது தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பிரதமர் மோடியை வற்புறுத்தி வருகிறார்கள். வற்புறுத்தல் என்று சொல்லக்கூடாது, தங்களுடைய இருப்பை உறுதிசெய்ய மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கெஞ்சுகிறார்கள் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு அணியினரும் பாஜகவை போட்டிபோட்டு ஆதரிப்பதால் எந்த ஒரு அணியையும் பகைத்துக் கொள்ள பாஜக விரும்பவில்லை. எனவே, இரண்டு அணிகளும் தங்களுக்குள் இணக்கமான முடிவை எடுக்கும்படியும், பிறகுதான் மத்திய அமைச்சரவையில் இணைப்பது குறி்தது பேச முடியும் என்றும் பிரதமர் மோடி போக்குக் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இரண்டு அணியினருமே மத்திய அமைச்சரவையில் இடம்பெற விரும்புவதால் பாஜக தலைவர்கள் அவர்களைச் சமாளிக்க பல தந்திரங்களை கையாள்வதாக தெரிகிறது.
இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா தலைமையிலான அணிக்கு கொடுப்பதை பன்னீர் அணியும், பன்னீர் அணிக்கு கொடுப்பதை சசிகலா அணியும் எதிர்க்கின்றன.
அதேசமயம் இரட்டை இலைச் சின்னத்தை யாருக்குமே தராமல் இருவரும் இணைந்தால்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று பாஜக கூறிவிட்டது.
இந்நிலையில், இரண்டு அணிகளும் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டன. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அணியில் சேரலாம் என்று இரண்டு அணிகளுமே அறிவித்துள்ளன.
இவர்களுடைய முடிவு இப்போது தினகரனைத்தான் சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. அவர் ஆகஸ்ட் 4ம் தேதி தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறார்.
அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற அவர் முயற்சி செய்வாரா? அதை முதல்வர் எடப்பாடி அனுமதிப்பாரா? என்பதெல்லாம் பிறகுதான் தெரியும்.
தன்னை கட்சி அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்காவிட்டால், எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு பலம் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் ஆட்சியைக் கவிழக்க அவர் விரும்புவாரா என்பதும் 4ம் தேதிக்கு பின்னர்தான் தெரியும்.
-ஆதனூர் சோழன்