கரோனா தொற்று பாதிப்பில் தமிழ்நாட்டில் இன்று மட்டும் ஒரே நாளில் கண்டறியப்பட்ட 57 பாசிட்டிவ் நோயாளிகளில் 22 பாசிட்டிவ் நோயாளிகளை கொண்ட நெல்லை மாவட்டம் மாவட்டளவில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது, இருப்பினும், நெல்லையில் இன்று இனம் கண்டறியபட்ட பாசிட்டிவ் நோயாளிகளுடன் பழகிய 90 நபர்களின் சோதனை முடிவுகள் வரும் பட்சத்தில் தமிழகளவில் நெல்லை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.
பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் பலருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதிச்செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கலந்து கொண்ட 1,131 பேர் தமிழ்நாடு வந்துள்ளதாகவும், 515 பேர் மட்டும் இனம் காணப் பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோனோர் நெல்லை மாவட்டத்தினை சேர்ந்தவர்களென்றும், குறிப்பாக நெல்லை மேலப்பாளையத்தில் மட்டும் 17 நபர்கள், நெல்லை டவுனின் - 4 நபர்கள் மற்றும் பாளையங்கோட்டையில் 1 நபர் என மொத்தம் - 22 நபர்களுக்கு கரோனா பாசிட்டிவ் இருந்ததும் கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று அறிவிக்க, நெல்லை மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு மேலப்பாளையத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் யாரும் வெளியே வரவும் அனுமதி இல்லை என காவல்துறை அறிவிக்கவும் செய்தது.
"குடியிருக்கும் தெருக்களின் முனைகளிலேயே காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் இருப்பதை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், எவ்வித வாகனங்களிலும் தெருக்களுக்கு வரக் கூடாதெனவும், மருந்து சம்பந்தமாக அத்தியாவசியம் ஏற்பட்டால் மட்டுமே அதற்கான ஆவணத்தை கொண்டு வெளியில் வரவேண்டும். அதுவும் ஒருவரின் வருகை மட்டுமே அவசியமாகின்றது." என மாவட்ட நிர்வாகமும் அறிவிக்கவே, மருத்துவக்குழுக்களுடன் உள்ளூர் போலீசாருடன், சிஆர்பிஎப் போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். இது இப்படியிருக்க, இன்று கண்டறியப்பட்ட கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் 22 நபர்களுடன் நெருக்கமாக பழகிய 90 நபர்களின் பரிசோதனை விபரங்கள் விரைவில் வெளியாகும் சூழலில், மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் நெல்லை மாவட்டம் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்கின்றது சுகாதாரத்துறை.