ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 25- ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
அரசு மருத்துவர்களுக்கான காலம் சார்ந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, 50 சதவீத இட ஒதுக்கீடு, கலந்தாய்வு மூலம் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்கம், மருத்துவ அலுவலர்கள் சங்கம் என பல சங்கங்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு, மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கிறது.
எங்கள் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆறு வார காலத்திற்குள் எங்கள் பிரச்னைகள் மீது உரிய தீர்வு காணப்படும் என்றும் அப்போது அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவர்களும் ஒன்றிணைந்து வரும் 25ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மருத்துவர் செந்தில்குமார் கூறினார்.