ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதை போலத் தான் ஒரே சமூகத்தை சேர்ந்த 2 அரசியல் தலைவர்கள் எதிரும் புதிருமாக நிற்பது, நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இலக்கை எட்ட முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள்.
ஆதிதிராவிடர் இனப்பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, இந்த சமூகத்தினரால் பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்றிட வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை.
இதுகுறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறையின் செயலாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், ஆதி திராவிடர் நல இயக்குநரை உறுப்பினர் - செயலராகவும் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
இதனாலேயே, ஏப்ரலில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெற்றிருந்தது. தேர்தல் முடிந்த பிறகு அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலேயே, கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறியது. இடைத் தேர்தல் நடந்த நாங்குநேரி தொகுதியில், இந்த சமூகத்து மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள். இதனாலேயே, வாக்கு பதிவு சதவிகிதம் குறைந்தது. ஒரு வேளை அந்த மக்கள் ஓட்டுப் போட்டிருந்தாலும், அது காங்கிரசுக்கு கொஞ்சம் கூடுதல் வாக்குகளை பெற்று தந்திருக்கும். அதிமுக வேட்பாளருக்கும், காங்கிரஸ் வேட்பாளருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் கணிசமாக குறைந்திருக்கும்.
இடைத் தேர்தலுக்கு முன்பாக கிருஷ்ணசாமியிடமும், ஜான் பாண்டியனிடமும் ஆளுந்தரப்பு பேச்சு நடத்தியது. ஆனால், 2 கட்சிகளும் பிடி கொடுக்கவில்லை. இதனால், தேர்தல் முடிந்த பிறகு 'தேவேந்திர குல வேளாளர்' என்ற அரசாணை கோரிக்கையை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க "இனியும் நாங்கள் காத்திருக்க மாட்டோம். எங்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் அரசை ஸ்தம்பிக்கிற வகையில் போராட்டம் நடத்திடுவோம். எம் சமுதாய மக்கள் 90% பேர் என் பின்னாடி உள்ளனர். தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடும் வரை பொது வெளியில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்போம்" என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியினரோ, "நாங்கள் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வெள்ளை சட்டை அணிந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவோம்" என்று அறிவித்துள்ளனர்.
இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அந்த சமூகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட இளைஞர் கார்த்திக்கோ.,. "தேவேந்திர குல வேளாளர் அரசாணையை இந்த அரசாங்கம் வெளியிடாது என்பது, கிருஷ்ணசாமிக்கும் தெரியும், ஜான் பாண்டியனுக்கும் நல்லா தெரியும். இருந்தாலும் அரசியல் பண்ண வேண்டும் என்பதற்காக கறுப்பு சட்டை, வெள்ளை சட்டை என கூறி வருகின்றனர். இவங்க வெள்ளை சட்டைபோட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதற்கு அப்புறம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி அரசாணை பெறுவதற்கு, இப்போது பதவியில் உள்ள இந்த சமூகத்து எம்.எல்.ஏக்கள் 14 பேரை (4 திமுக, 1 காங்., 9 அதிமுக) ராஜினாமா செய்ய சொல்லி அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், அந்த 14 எம்.எல்.ஏக்களும் இதற்கு சம்மதிக்க மாட்டாங்க. இது தான் எதார்த்தம். சும்மா பெயருக்கு அரசியல் பண்ணுவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை" என்றார்.