காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? எனக் குழம்பிப் போயிருந்த அரசியல் கட்சிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளன. அதேசமயம், இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்பாத நிலையில், அடுத்த வருடம் நடக்க வேண்டிய சட்டமன்றத் தேர்தலும் தள்ளிப்போகுமோ? என்கிற கேள்விகள் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் குடியாத்தம் காத்தவராயன், திருவெற்றியூர் கே.பி.பி.சாமி ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் கடந்த பிப்ரவரியில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். ஜூன் மாதம் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் ஜெ.அன்பழகன், கரோனா தாக்கத்தால் உயிரிழந்தார். இதனால் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கண்ட 3 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. இறந்துபோனால் அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், குடியாத்தம் மற்றும் திருவெற்றியூர் தொகுதிகளுக்கு ஆகஸ்டிலும், திருவல்லிக்கேணிக்கு டிசம்பரிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கரோனா நெருக்கடிகளால் பொது முடக்கம் அமலில் இருக்கும் சூழலில், இடைத்தேர்தல் நடக்குமா? என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் எதிரொலித்தபடி இருந்தது. ஆனால், தேர்தல் விதிகளின்படி, பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையே ஒரு வருட காலம் மட்டுமே இருந்தால் இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை. ஒரு வருடத்திற்கு அதிகமான நாட்கள் இருந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தைப் போலவே உத்தரப்பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளும், மத்தியபிரதேசம், பீகார், அசாம், கேரளா மாநிலங்களில் தலா 1 தொகுதியும் காலியாக இருக்கிறது. அதனால், பொதுத்தேர்தலுக்கு ஒரு வருட காலம் இல்லாத மாநிலங்களில் ஆகஸ்டில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில், "இடைதேர்தல் நடத்த வேண்டிய சூழலில், கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்தபடி இருக்கிறது. இதனால் தமிழகம், பீகார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. மக்களின் நலன் கருதி தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை" எனத் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கரோனா நெருக்கடிகளை முன்னிறுத்தி தமிழகத்தில் நடத்த வேண்டிய சட்டமன்ற பொதுத் தேர்தலையும் தள்ளிவைத்து விடுவார்களோ? அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிவிப்பா? என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள்.