நாம் இந்த உலகத்தில் அதிகமாக கவனிக்கவேண்டிய, ஆனால் கவனிக்காமல் விடுகின்ற ஒரு விஷயம் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் (Terms and conditions).
நாம் வாங்கும் காரில் இருந்து போனில் டவுன்லோட் செய்யும் ஆப் வரை எல்லா இடத்திலும் இந்த ஆப்பு இருக்கிறது. இதை நாம் முழுமையாக படித்து பார்த்தால் அதில் இருக்கும் ஆபத்து மற்றும் நமக்கான வசதிகள் ஆகியவை தெரிய வரும். இதில் முக்கியமாக நாம் படிக்கவேண்டியது பொறுப்பு துறப்பைதான் (disclaimer). பொறுப்பு துறப்பு என்றால் ஏதோ பெரிய விஷயம் இல்லை. நாம் எங்கு சென்றாலும் வெளியே ஒரு போர்டு போட்டிருப்பார்கள், அதில் ஒரு வாசகம் எழுதியிருக்கும், இங்கு இருக்கும் பொருட்கள் காணாமல்போனாலோ, சேதமடைந்தாலோ நிர்வாகம் பொறுப்பல்ல என்று. அதற்கு பெயர்தான் பொறுப்பு துறப்பு.
நீங்கள் உங்கள் பொருட்கள் சேதாரமைடைந்து விட்டது, காணாமல் போய்விட்டது என புகாரளித்தால், அவர்கள் இது எங்களது பொறுப்பல்ல எனக்கூறிவிடுவார்கள். இது தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல. நாம் வீட்டை விட அதிகமாக நம்பும் வங்கிகளிலும்கூட இது உள்ளது. கடந்தாண்டுகூட வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகை ஆகியவை காணாமல் போனபோது வங்கி இதைத்தான் சொன்னது.
அண்மையில் ஒரு மால்க்கு (shopping mall) சென்றபோது அங்கு பார்க்கிங் கட்டணம் வாங்கப்பட்டது. அதில் என்ன வாகனம், நேரம், ஆகியவை இருந்தது. கூடவே இந்த டிக்கெட் தொலைந்தால் 150 ரூபாய் கட்டவேண்டும் என இருந்தது. அதுவரை அனைத்தும் நன்றாக இருந்தது, அதன்பின் இருந்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது. உங்கள் உடைமைக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ, காணாமல் போனாலோ நாங்கள் பொறுப்பல்ல என்றும் இருந்தது. இது என்னடா கொடுமையாக இருக்கு, 1 ரூபாய் கூட வராத டிக்கெட் தொலைஞ்சா 150 ரூபாய் ஃபைன், 1 இலட்ச ரூபாய் வண்டி காணாமல்போனா பொறுப்பில்லையா, கண்டிஷனாவே இருந்தாலும் நியாயம் வேண்டாமா??? என புலம்பியதுதான் மிச்சம்.
ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு என பணத்தை மட்டும் வாங்கிக்கொள்ளும் நிறுவனம், அதற்கான பணியை முழுமையாக செய்யவேண்டும். சட்டம் கடுமையாக இருந்தாலும் அதிலிருக்கும் சில ஓட்டைகள்தான் பல பெரிய பிரச்சனைகளை மறைக்கிறது...