Skip to main content

டாஸ்மாக்கால் சமூகப் பரவலுக்குத் தயாராகிறதா தமிழகம்? எச்சரிக்கும் மருத்துவர்கள்... ஷாக்கிங் ரிப்போர்ட்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

tasmac


கோயம்பேட்டிலிருந்து எல்லா மாவட்டங்களுக்கும் போய்க்கொண்டிருந்த பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், எல்லா மாவட்டங்களுக்கும் கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கரோனா பயணித்திருக்கிறது. 65 ஏக்கரில் அமைந்த இந்த மார்க்கெட்டில் 3,200 மொத்த விற்பனைக் கடைகளும் 830 பழக்கடைகளும் 401 பூக்கடைகள், உதிரி கடைகள் என மொத்தம் 7 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. ஒரே இடத்தில் அமைந்த இந்தக் கடைகளுக்குத் தினமும் ஒன்றரை லட்சம் பேர் வந்து செல்வார்கள்.


சென்னை, புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆசிர்வாதபுரத்தில் நடந்த ஒருஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோயம்பேட்டைச் சேர்ந்த பெண் பூ வியாபாரி உள்பட 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி டிரைவர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. கோயம்பேட்டில் சலூன் கடை நடத்திக் கொண்டிருந்தவருக்கும் நோய்த் தொற்று. மூவர் என்ற நிலையிலிருந்து சென்னை நகரில் மட்டும் ஒரே நாளில் 277 பேருக்கு கோயம்பேடு மூலமாகக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கோயம்பத்தூர், திருப்பூர், பெரம்பலூர், விழுப்பரம், கடலூர், அரியலூர், நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களிலும் இது பரவியது.
 

market


கோயம்பேட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த 7 பேருக்குச் சோதனை செய்ததில் அந்த 7 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் 33 பேர் என அதிர்ச்சி அதிகமானது. கோயம்பேட்டுடன் தொடர்புடைய 7,800 பேருக்கும் அவர்களோடு தொடர்புடைய 25 ஆயிரம் பேருக்கும் சோதனை நடத்த வேண்டும் எனத் தமிழக அரசின் மருத்துவர்கள் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார்கள்.


"நாங்கள் நிறைய சோதனைகள் செய்கிறோம். அதனால் கரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது'' எனச் சென்னை நகரத்தைக் கரோனா நோய் ஒழிப்புக்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், "அதிகமான சோதனை மூலம் தெரியவரும் பாசிட்டிவ் நோயாளிகள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் மிகவும் முக்கியமானது. இதில் கேரளாவின் பாணியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

துபாயில் இருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு கரோனா நோய்த் தொற்றுடன் வந்த ஒருவர் அந்த நோயை மறைத்துவிட்டார். அவர் ஒரு கால்பந்து போட்டியைக் காணச் சென்றார். கேரள அரசு அந்தக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தியது. அதேபோல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதிகள் கரோனா நோய்ப் பாதித்தது பற்றி கவலைப்படாமல் குடும்ப விழாக்களிலும், சர்ச் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார்கள். அந்தத் தம்பதிகளுடன் விழாக்களில் பங்கெடுத்த அனைவரையும் கேரள அரசு சோதனைக்கு உட்படுத்தியது.
 

hospital

 

இதுபோல, பாசிட்டிவ் என அறியப்பட்டவரிடமிருந்து எத்தனை பேருக்குப் பரவியுள்ளது என்பதைக் கண்டறியும் நடவடிக்கைகளும் சோதனைகளும் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடக்கவில்லை. காசிமேடு மீன் சந்தை, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுகளை மூடிய தமிழக அரசோ, முழு ஊரடங்கு நாட்களில், கரோனா நோய்ப் பாதித்த கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் மக்களை அனுமதித்தது. இது கரோனா நோய்ப் பரவுவதற்குப் பெரிய காரணமாக அமைந்தது. அதை மறைத்துவிட்டு, அதிகளவில் சோதனை செய்ததால் மட்டும் அதிக பாசிட்டிவ் கேஸ் என்பது சரியானதல்ல. இன்னமும் டெஸ்ட் செய்யப்படாத நிறைய பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அவர்களுக்குத் தெரியாமல் அந்த நோயைத் தமிழகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு இதுவரை 824 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. இந்தத் தொகையும் தேசிய நலவாழ்வு, இயற்கை பேரிடர் ஆகிய தொகைகளில் இருந்தும் எடுத்து செலவு செய்து கொள்ளுங்கள் என்கிற ஒற்றை வரி அனுமதிதான். இது போதாது என்று முதலமைச்சர் ஆறு முறை மத்திய அரசுக்குக் கடிதங்கள் எழுதினார். அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே வருமானம் போதவில்லை என்று கவர்னரைச் சந்தித்த போதும் எடப்பாடி பழனிசாமி முறையிட்டார்.
 

http://onelink.to/nknapp


மத்திய அரசின் அனுமதியுடன் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல மதுபானக் கடைகளைத் திறக்க எடப்பாடி அரசு முடிவு செய்தது. மே 7இல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் போது, கோயம்பேடு மார்க்கெட்டைவிட 100 மடங்கு கரோனா நோய்ப் பரவும்.

சமூகத் தொற்று என்ற நிலையைத் தமிழகம் எட்டியுள்ளதற்கு எடப்பாடி அரசின் தாறுமாறான நடவடிக்கைகளே காரணம். எனவே கரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரங்களிலிருந்து லட்சத்தை எட்டும் மாநிலமாகத் தமிழகம் மாறும் அபாயம் உள்ளது. கவனமாக இருங்கள் என எச்சரிக்கிறார்கள் நல்லெண்ணம் கொண்ட மருத்துவர்கள்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் பெட்கள் நிரம்பிய நிலையில், ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. நிலைமையின் ஆபத்தை உணர்ந்துதான் தனியார் திருமண மண்டபங்கள், பள்ளிகள் என எல்லாவற்றையும் ‘ரிசர்வ்' செய்து வைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

படங்கள் :  அசோக்