அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா, டெலவர் மற்றும் நியூஜெர்ஸி மாகாணங்களில் இயங்கும் தமிழ் மரபிசைக்குழுவான 'அடவு கலைக்குழு', டெலவரில் உள்ள மகாலட்சுமி கோவில் கலாச்சார மையம் மற்றும் இந்திய அமைப்புகளின் கவுன்சிலுடன் இணைந்து "கலைகளின் சங்கமம் 2019" விழாவை பிப்ரவரி 1-ம் தேதி நடத்தினர். இந்த நிகழ்வில் பாரம்பரியமான தமிழ் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் ஆகியவற்றை வட அமெரிக்க மண்ணில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த 11 கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களில் சிலர் தமிழக அரசின் பெருமைமிக்க கலைமாமணி விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், நாகாசுரம், பம்பை, பறையாட்டம், ஒயிலாட்டம், கைசிலம்பம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த அனைத்து நாட்டுப்புறக் கலைகளையும் அமெரிக்காவில் ஒருசேரக் காண்பது ஒரு அரிது.
பிப்ரவரி 1 வெள்ளிக்கிழமை, 2019 மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மகாலட்சுமி கோயில் கலாச்சார மைய மண்டபத்தில், 760 Yorklyn Road, Hockessin, DE 19707 இல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. உலகில் தொன்மையான மொழிகளில் இன்றுவரை வாழும்மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே. கலை மற்றும் இசை ஆர்வர்களும், குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரிய நடனங்களை நேரடியாக காண்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது. இந்த நிகழ்விற்கு அனுமதி இலவசம். தமிழ்ப் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாக்காலத்தில் இந்த நிகழ்வில் பங்குபெற்று பயனடைவது மிகவும் பொருத்தமானது.
இந்த நிகழ்ச்சியில் டெலவர் மாகாணத்தின் நான்காவது மாவட்ட செனட்டர் லாரா வ. ஸ்டர்ஜியன் மற்றும் ரெப்ரெசென்டடிவ் கிறிஸ்டா கிரிஃபித் கலந்துகொண்டு கலைஞர்களை சிறப்பித்தனர்.
p class="text-align-justify">