சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி சண்முகம் தினகரனை பற்றி கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்தார். அடிக்கடி சர்ச்சை பேச்சுகளில் சிக்கி கண்டனத்துக்குள்ளாகி வரும் அமைச்சர் சண்முகம், தற்போது தினகரன் குறித்து கடுமையான சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக நம்முடைய கேள்விக்கு தேனி கர்ணனின் பதில் வருமாறு,
தமிழக சட்ட அமைச்சர் நேற்று டிடிவி தினகரனின் அறிக்கைக்குப் பதில் அளித்துப் பேசியிருந்தார். தினகரன் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறிய அவர், தினகரன் குறித்து அன்பார்லிமெண்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை தாக்கியுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சட்ட அமைச்சர் சண்முகம் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்குகின்ற மாதிரியும், தனிப்பட்ட நபர்களை விமர்சனம் செய்கின்ற நோக்கிலும்தான் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். சின்னம்மா மருத்துவமனையில் இருந்து தமிழகம் திரும்ப இருந்த நிலையில், சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்கள். அமைச்சர்கள் முதலில் டிஜிபி அலுவலகம் செல்லலாமா? இதற்கு முன்பு அந்த மாதிரியான முன்மாதிரிகள் இருக்கின்றதா? இவர்கள் தங்களுடைய பதவியின் தன்மை புரியாதவர்களாக இருக்கிறார்கள். அந்த பேட்டியில் அமைச்சர் சசிகலா உள்ளிட்டோரை இவர்கள் எல்லாம் குற்றப்பரம்பரையைச் சார்ந்தவர்கள். கொள்ளை அடிப்பதுதான் இவர்களின் நோக்கம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இது மிகவும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தின் சட்ட அமைச்சராக அவர் இருக்கிறார். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியவேண்டும். அமைச்சராக இருக்கக் கூடியவர்கள் கட்டாயம், சாதி ரீதியாகப் பேசக் கூடாது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு அமைச்சர் பேசியுள்ளார். எந்த ஒரு மதத்தையும் தவறாகப் பேசக்கூடாது. இதை ,அவர் பதவி ஏற்கும் போது உறுதி மொழியாக எடுத்திருப்பார். அப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரை என்றும், அவர்கள் கொள்ளை அடிப்பதுதான் தொழிலாக வைத்துள்ளார்கள் என்றும் அவதூறாகப் பேசியுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக தென் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இவர் அவமதித்துள்ளார். குற்றப்பரம்பரை என்றால் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள அமைச்சர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். எதனால் குற்றப்பரம்பரை என்று இவர்களுக்கு பட்டம் சூட்டப்பட்டது என்பதை இவர் புரட்டிப் பார்க்க வேண்டும். பிரிட்டீஸ் ஆட்சிக் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவர்கள்தான் குற்றப்பரம்பரை என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் 64 சாதிகளை உள்ளடக்கியவர்கள்.
இவர்களை வழக்குப் போட்டு ஒன்றும் செய்யமுடியாது என்று கருதிய வெள்ளையர்கள், குற்றப்பரம்பரை சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அதன்படி இந்தப் பிரிவு மக்கள் காலையிலும், மாலையிலும் காவல் நிலையம் சென்று கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்கள். இது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் அல்லாமல், 64 சாதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது எதைப் பற்றியும் அமைச்சர் படிக்காமல் நாட்டுக்காகப் போராடிய ஒரு சமூகத்தை திருடர்களாக, கொள்ளையர்களாக சித்தரித்துள்ளார். தற்போது டிடிவி தினகரன் என்ன பேசியுள்ளார். எதைப் பேசினாலும் நிதானமாகப் பேசுங்கள் என்றுதானே தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது. எல்லோரும் சொல்வது தானே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவர் ஊத்திக் கொடுத்தார், அதானே உங்கள் குலத்தொழில் என்று பேசுகிறீர்கள். இதை யார் சொல்லி நீங்கள் பேசுகிறார்கள். இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.