சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காது கேட்காத சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே குடியிருப்பில் பணியாற்றும் லிப்ட் ஆப்ரேட்டர், செக்ரியூட்டிகள் உள்பட 17 பேர் அவரை 7 மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 17 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார்.
''ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும், ஒரு பெண் என்ற முறையிலும் இந்த 17 பேருக்கும் ஆஜராக மாட்டோம் என்று சொன்ன வழக்கறிஞர் சமுதாயத்திற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
இந்த குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமை இனி இந்த உலகத்தில் எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. அந்த அளவுக்கு தண்டனை தீவிரமாக இருக்க வேண்டும். நீதிமன்றமும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் இந்த வழக்கில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க உதவ வேண்டும்.
17 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களை ஜாமீனில் வெளியே வர விடக்கூடாது. தமிழ்நாடு அரசு அவர்களை தூக்கிலிட்டு காண்பிக்க வேண்டும். இந்த வழக்கில் விரைவில் அதாவது மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். அதிலிருந்து மூன்று மாதத்திற்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்த வழக்கில் இவர்கள் மேல்முறையீடு செல்ல அனுமதிக்கக் கூடாது. அந்த உரிமையை அவர்களுக்கு நீதிமன்றம் வழங்கக் கூடாது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை இந்தியாவே திரும்பிப் பார்க்க வேண்டும். சிறுமிகளிடம், பெண்களிடம் இதுபோன்ற வன்முறைகளை செய்யக்கூடாது என்ற பயம் அனைவருக்கும் வர வேண்டும்''.