Skip to main content

'விமானத்தில் ஒலித்த தமிழ்க்குரல்'.... -கேப்டன் பிரியா விக்னேஷின் சிறப்புப் பேட்டி! 

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

priya vignesh

 

சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கான அறிவிப்பு தமிழில் அறிவிக்கப்படுவது போல ஒரு வீடியோ இணையத்தில் சில தினங்களுக்கு முன்னால் வைரலானது. தமிழில் அறிவித்த அந்தக் குரல் யாருடையது??? இனி தமிழ்நாட்டுக்குள் பயணிக்கும் விமானங்களில் தமிழில் தான் அறிவிப்புகள் அறிவிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் இணையத்தை முழுவதுமாக ஆக்ரமித்தன. தொடர் தேடுதலுக்குப் பின் அது தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் பிரியா விக்னேஷ் அவர்களுடைய குரல் என்பது தெரியவந்தது. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துவிட்டு அவருடன் நக்கீரன் குழுவினர் நடத்திய கலந்துரையாடலைப் பார்க்கலாம்.

 

தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? பின் கதை ஏதேனும் உள்ளதா? 

 

விமானியாக பயிற்சி எடுக்கும் போது 'விமானத்தில் அறிவிப்பு கொடுப்பது எப்படி' என்று ஒரு வகுப்பு எங்களுக்கு நடந்தது. நாங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்து காட்டினோம். அப்போது பயிற்சியாளர் ஜெரால்ட் உங்கள் தாய்மொழியில் இதைச் செய்யலாம் என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? ஒரு 5 நிமிடம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தாய்மொழியில் செய்து காட்டுங்கள் என்றார். முதன்முதலில் அப்போது தான் தமிழில் சொல்லிப்பார்த்தேன். பின் விமானியாக பணிக்கு சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். அப்போது எல்லாம் ஆங்கிலத்தில் தான் அறிவிப்புகள் கூறினேன். ஒரு நாள் மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 'அபிஜித் தோவல்' என்ற கேப்டனுடன் பயணித்தேன். அவர் என்னிடம் சில முக்கியமான தமிழ் வார்த்தைகள் கேட்டு ஆங்கிலத்தில் அறிவிக்கும் போது அதையும் சேர்த்துக் கூறுவார். வேறு மொழியைச் சேர்ந்தவரே இதைப் பண்ணும் போது நாம் ஏன் முழுவதும் தமிழில் சொல்ல முயற்சி செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன். அப்படித் தொடங்கியது தான் தமிழ் அறிவிப்புகள்.

 

இந்த வைரலான வீடியோவில் உள்ளது தான் உங்களுடைய முதல் தமிழ் அறிவிப்பா?

 

முதல் முறையாக தூத்துக்குடியில் தரை இறங்கும்போது அறிவித்தேன். அதே போல் சென்னையிலும் இது போல அறிவித்து இருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்ததாக எங்களுடைய பணிப்பெண்கள் சொன்னார்கள். அதனால் அப்படியே அதைத் தொடர்கிறேன்.

 

முழு அறிவிப்பையும் தமிழில் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முன்பயிற்சி எடுத்தீர்களா?

 

டெக்னிக்கல் வார்த்தைகளை முதலில் தமிழ்ப்படுத்தி பார்த்தேன். பயணிக்கும் போது எந்தெந்த இடங்கள் வழியில் வருகின்றன என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டேன். அதை வைத்துச் சுருக்கமாக எனக்குள்  தமிழில் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

 

சமுகவலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது? அதைக் கவனித்தீர்களா???

 

நிறைய பேர் பாராட்டியிருந்தார்கள். அதில் ஒருத்தர் "நீங்கள் அடுத்து எப்போது போகிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்கள் தமிழ் அறிவிப்பைக் கேட்பதற்காக நானும் பயணம் செய்கிறேன்" என்று சொல்லியிருந்தார். அதைப் பார்க்கும் போதே உணர்வுப்பூர்வமாக இருந்தது. தொடர்ந்து இதை நீங்கள் செய்யவேண்டும் என்று நிறைய தமிழ் உணர்வாளர்கள் அன்புக்கட்டளை விடுத்துள்ளனர்.

 

உங்களது இண்டிகா நிறுவனம் இது குறித்து என்ன சொன்னார்கள்?

 

அவர்கள் ரொம்ப சந்தோசப்பட்டார்கள். நேர்காணல் கொடுப்பதற்கு எல்லாம் உடனே அனுமதி கொடுத்தனர். எங்களுடைய உயர் கேப்டன் இதைத் தொடர்ந்து செய்யச் சொல்லியிருக்கிறார்.

 

விமானியாக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

 

சிறு வயதில் காக்கா, குருவி, விமானம் என பறப்பவை எல்லாவற்றையும் வியந்து பார்ப்பேன். விமானம் குறித்த என் சந்தேகத்தை அம்மாவிடம் கேட்ட பொழுது அவர் விளக்கம் கொடுத்தார். நானும் அந்த விமானத்தை ஓட்டுபவர் ஆக வேண்டும் என்று சொன்னேனாம். அப்போது எனக்கு மூன்று வயது. சிறுவயது இருக்கும் போதே வீட்டில் உள்ள வீணான பொருட்களை வைத்து விமானம் எல்லாம் செய்து பார்ப்பேன் அதைப்பற்றிய ஒரு எண்ணம் உள்மனதுக்குள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

 

தமிழ் மீதான ஆர்வம் எப்படி வந்தது?

 

என் அம்மா ஒரு தமிழ் ஆசிரியை. சிறுவயதில் இருந்தே எல்லாப் போட்டிகளிலும் என்னை பங்கெடுக்க வைப்பார். கல்லூரிகளில் எதாவது தமிழ் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க வேண்டுமானால் என்னை தான் அழைப்பார்கள்.

 

http://onelink.to/nknapp

 

விமானம் சார்ந்த படிப்புகளுக்கு நிறைய செலவும், காலமும் ஆகும் என்பார்கள். உங்களுடைய குடும்பப் பின்னணி என்ன? அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது சவால்கள் இருந்ததா?

 

நிறைய சவால்கள் இருந்தது. என் அப்பா திருவனந்தபுரத்தில் சாலையோரம் கடை போட்டு துணி வியாபாரம் செய்பவர். அம்மா பள்ளி ஆசிரியை. சாதாரண நடுத்தரக் குடும்பப் பின்னணி தான். இன்று வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். என்னுடைய அம்மாவின் பணிக்கால சேமிப்புப் பணம் மற்றும் ஊரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்தோம். என்னுடைய அத்தை அவருடைய வீட்டை அடமானம் வைத்து எனக்கு உதவி செய்தார். முதற்கட்ட பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டாம் கட்டத்திற்கு ஒரு 20லட்சம் வரை தேவைப்பட்டது. அப்பாவின் நடைபாதை கடைக்கு எதிரே ஹோட்டல் நடத்திய முருகன் என்பவர் ஒரு 15லட்சம் கொடுத்து உதவினார். நான் கேட்காமலேயே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடைய அத்தையும், அப்பாவின் நண்பர் முருகன் மாமாவும் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த வீடியோ பார்த்து அவர்களும் ரொம்ப சந்தோசம் ஆகிட்டாங்க.     

 

ஆகாயத்தில் அன்னைத் தமிழ் உங்கள் குரலில் ஓங்கி ஒலிக்கட்டும் பிரியா விக்னேஷ்!!!!

 

 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.