உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் கரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வருகிறார். இதுதொடர்பாக திமுகவின் தமிழன் பிரசன்னா கூறியதாவது,
இன்னும் சில தினங்களில் மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய போகின்றது. தமிழகத்தில் எந்த ஒரு மக்களும் பசியோடு இருக்கவில்லை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானதைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று தமிழக அரசு கூறிவருகின்றது. ஆனால் மக்களுக்குத் தேவையான எதையும் தமிழக அரசு செய்யவில்லை என்றும், சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறிவருகின்றார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?
முதலில் எடப்பாடி பழனிசாமி யாரும் பசியோடு இல்லை என்று கூறியது ஒரு அப்பட்டமான பொய். நீங்கள் களத்தில் இறங்கிப் பார்த்தால் தெரியும். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தளபதி ஸ்டாலின் அறிவித்துள்ள 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 15,00,000 பேருக்கு உணவு அளித்திருக்கின்றோம். அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இன்றைக்கு முதல்வர் கூறியது போல் யாரும் பசியோடு இல்லை என்றால் ஏன் கோரிக்கை வரப்போகின்றது. ரேஷன் அட்டையை வைத்து மட்டுமே கோரிக்கைகளை நிறைவு செய்துவிட முடியாது. நீங்கள் 50 நாட்களுக்கு முன்பு 1,000 ரூபாய் பணம் கொடுத்தீர்கள். அதை வைத்து இரண்டு மாதத்தை ஓட்ட முடியாமா என்றால் முடியாது. மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அந்தப் பணத்தை வைத்து இத்தனை நாட்களை நகர்த்துவரா என்றால் முடியாது என்றுதான் பதில் வரும்.
பசி, ரேஷன் விவகாரங்களைக் கடந்து இந்த அரசின் தோல்வி எப்போது எங்கிருந்து ஆரம்பித்தது என்று பார்க்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் கேரளா பிப்ரவரி 4 ஆம் தேதியோ கூறியது இது ஒரு மருத்துவப் பேரிடர் என்று. ஆனால் இங்கே சட்டமன்றத்தில் எடப்பாடி கூறுகின்றார், இது ஒன்றும் உங்களுக்கெல்லாம் வராது, யாரும் மாஸ்க் போட தேவையில்லை என்று. ஆனால் இன்றைக்கு அவர் கொடுக்கின்ற எல்லா பேட்டிகளிலும் அவர் மாஸ்க் போட்டு இருக்கிறார். அடுத்த அவர் என்ன சொன்னார், 70 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்குத்தான் இந்த நோய் வரும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த நோய் வந்திருக்கின்றது. அடுத்து முதல்வர் என்ன சொன்னார், இது பணக்காரர்களின் நோய் என்றார். கோயம்பேட்டில் மூட்டை தூக்குபவர்கள் எல்லாம் பணக்காரர்களா? கோயம்பேட்டில் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டு மூட்டை தூக்குபவர்கள் எடப்பாடி பார்வைக்குப் பணக்காரர்கள். அடுத்து என்ன சொன்னார் என்றால், இந்த கரோனா மூன்று நாட்களில் போய்விடும் என்று கூறினார். அவர் கூறியதற்குப் பிறகுதான் நூறுகளில் இருந்த அதன் பாதிப்பு 500, 600, 700 என்று உயர்ந்து வருகின்றது. இதைச் சொல்ல பாமர மக்கள் போதுமே, ஒரு முதலைமைச்சர் எதற்குத் தேவை, என்றார்.