எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வில் ஒரு கிளைக் கழகத்தில் ஒரு அவைத்தலைவர் ஒரு கிளைச்செயலாளர் ஒரு பொருளாளர் ஒரு துணைச்செயலாளர் இரண்டு மேலவை பிரதிநிதிகள். இந்த ஆறுபேர் கொண்ட பிரதிநிதிகளுக்கு கீழ் கட்சியின் அங்கத்தினர்கள் செயல்பட்டு வந்தனர். இதே நடைமுறையில்தான் ஜெயலலிதாவும் கட்சி நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜெ., சசி இருவரும் ஆலோசனை செய்து கிராம ஊராட்சிகளில் உள்ள கிளைச் செயலாளர்கள் அதன் துணைப் பொறுப்பாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி செயலாளர் என்ற பதவி உருவாக்கினர். அ.தி.மு.க.வினருக்கு புதிய கட்சிப்பதவியாக அது அமைந்தது. அந்த ஊராட்சி செயலாளர் பதவிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.
ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் புதிதாக ஏன் உருவாக்கப்பட்டன. இப்போது அந்தப் பதவிகள் ஏன் காலிசெய்யப்பட்டன இதுகுறித்து அ.தி.மு.க. ஒ.செ.க்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் நாம் விசாரித்தோம். பொதுவாக ஒரு வருவாய் கிராமம் ஒரு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு மூன்று உட்பிரிவு கிராமங்கள் தமிழகம் எங்கும் உள்ளன. இதே போன்று மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சிகளில் பல கிளைக் கழகங்கள் உள்ளன. இதுபோன்ற கிளைக் கழகங்களில் உள்ள பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து கட்சிப் பணிகளைச் செயல்படுத்தவும் கட்சி மேலிட உத்தரவுகளை கிளை பொறுப்பாளர்களிடம் கொண்டு சென்று செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஊராட்சிசெயலாளர் பதவி.
இதன்படி ஒரு ஊராட்சிக்கு மட்டும் செயலாளர், இவருக்கு கீழ் துணைகிராம கிளை பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்... ஜெ. இருந்தவரை மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை எல்லோரும் அடங்கி ஒடுங்கி கட்சிப்பணி செய்துவந்தனர். ஜெ மறைவுக்குப் பிறகு ஊராட்சி செயலாளர்களுக்கும் கிளை செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் இடையே முட்டல்கள் மோதல்கள், உள்குத்துகள், மந்திரிகள்- மா.செ.க்களிடம் செல்வாக்கு பெறுவதில் ஈகோ, காரியம் சாதிப்பதில் போட்டிகள் அதிகரித்தன. கட்சி நிகழ்ச்சிகள், தேர்தல் வேலைகள் எல்லாமும் பாதித்தன.
கட்சிகூட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு மக்களைக் கூட்டிவரும் பணிகளில் கிளைச் செயலாளர்களுக்கும் ஊராட்சி செயலாளர்க்கும் இடையே போட்டியின் காரணமாக சொதப்பியது. இதன் காரணமாக கடந்த எம்.பி. தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் கட்சி தோல்வியடைய இவர்களின் உள்குத்து மோதல்களும் காரணம். மேலும், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக கொடுத்த பணத்தைப் பலர் பதுக்கிக்கொண்டனர் என்ற குற்றசாட்டும் கட்சித் தலைமைக்குச் சென்றது மேலும் இந்த ஊராட்சி செயலாளர் பதவிகளில் உள்ளவர்களில் அதிகளவில் சசி ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இப்போதைய கட்சியின் தலைமைக்கு எதிராக உள்குத்து வேலை செய்துவந்ததாகவும் சமீபத்திய கரோனா நிவாரணம் வழங்கியதில் முதலமைச்சர் தொகுதியான எடப்பாடியில் பல்வேறு விரும்ப தகாத செயல்களில் ஊராட்சி செயலாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் ஈடுபட்டதாகவும் ரிப்போர்ட் போயிருக்கிறது.
அதுமட்டுமல்ல, அரசு கான்ட்ராக்ட்டுகளில் கமிஷனில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கிளைச் செயலாளர்களைத் தனியாகவும், ஊராட்சி செயலாளர்களைத் தனியாகவும் கவனிக்க வேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான், இந்த இடைச்செருகல் பதவியால், தேவையற்ற மோதல்களும், ஒரு தரப்பினரின் வருவாய்ப் பெருக்கமும் கட்சியைப் பலவீனப்படுத்துகிறது என்ற அடிப்படையில் ஊராட்சி செயலாளர் பதவிகளைக் காலி செய்துள்ளது அ.தி.மு.க. தலைமை.
இதுநாள் வரை ஊராட்சி செயலாளர்களாக இருந்தவர்களுக்கு கவுரவமான மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என்று ஆறுதல் வார்த்தையும் கூறப்பட்டுள்ளது.