பாஜகவை எதிர்க்கும் கட்சிகளையும், பாஜகவுக்கு சவாலாக இருக்கும் கட்சிகளையும் வழிக்குக் கொண்டு வர, தங்களின் விசாரணை அமைப்புகள் மூலம் ரெய்டுகள், வழக்குகள் என்கிற அஸ்திரத்தை வீசி வருகிற மத்திய பாஜக அரசு, "அரசியல் தலைவர்கள் மீது நேரடியாகப் பாய்வதற்கு முன்பாக, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் குறி வைப்பதை மீண்டும் கையிலெடுத்துள்ளது" என்கிறார்கள் டெல்லியிலுள்ள அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், "மத்தியில் 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க தலைமை, காங்கிரசை அரசியல் ரீதியாகப் பலகீனப்படுத்துவதை முக்கியக் குறிக்கோளாக வைத்திருந்தது. குறிப்பாக, மாநிலங்கள்தோறும் இந்த அசைண்மெண்டை கையிலெடுத்தது. அதில் தமிழகத்தையும் முக்கிய இடத்தில் வைத்திருந்தது பா.ஜ.க தலைமை. அந்த வகையில், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனை காங்கிரசில் இருந்து பிரிக்க முயற்சித்தனர். இதற்காக, ஜி.கே.வாசனிடம் தனிச் செயலாளராக, அப்போதிருந்த தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் குறிவைத்தது.
அவரோ, பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்ற மறுத்த நிலையில், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிரான ஊழல் ரெக்கார்டுகள், திருச்சியைச் சேர்ந்த நித்திய ஆனந்தமான ஆர்.எஸ்.எஸ்.காரரான ஒரு தொழிலதிபரிடம் இருப்பதையறிந்து அவரைத் தூக்கிய மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்.க்கு எதிராகப் புகார் கொடுக்க வலியுறுத்தியது. அவரிடமிருந்த 190 பக்க ஆதாரங்களைக் கேட்டும் மிரட்டியது.
ஆனால், அவரோ, தமிழரான ஐ.ஏ.எஸ்.அதிகாரிக்கு எதிராகப் புகார் தரவும் ஆதாரங்களைக் கொடுக்கவும் மறுத்தார். எவ்வளவோ மிரட்டியும் மத்திய அரசின் நோக்கத்திற்கு அடிபணிய மறுத்ததுடன், இப்படி மிரட்டினால், தி.மு.க - அ.தி.மு.க தலைமையையும் நீதிமன்றத்தையும் அணுகுவேன் என அவர் சொல்ல, பிரச்சனையை அப்போது கைவிட்டது மத்திய அரசு. இதனால், வாசனின் தனிச் செயலாளர் தப்பினார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நேரடியாக ஆக்சன் எடுத்தால், காழ்ப்புணர்ச்சி என்கிற விமர்சனம் வரும். அதுவே அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களில் வழக்குப் பதிவு செய்து, அதன் மூலம் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவரை வளைத்தால் அது நிர்வாக ரீதியிலான ஊழல் விவகாரமாகப் பார்க்கப்படும்; மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களாக வராது என்கிற யோசனையில்தான், இத்தகைய தந்திரங்களைக் கையாண்டது. ஆனால், சம்மந்தப்பட்ட நித்திய ஆனந்தமான அந்த திருச்சி நபர் ஒத்துழைக்காததால் ஐ.ஏ.எஸ்.சும் தப்பினார்; வாசனையும் வளைக்க முடியவில்லை. இதனால், மாற்று அஸ்திரத்தைப் பயன்படுத்தி வாசனை காங்கிரசிலிருந்து பிரித்தது மத்திய அரசு.
இந்த நிலையில், அரசியல்வாதிகளை வளைக்க மீண்டும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் குறி வைக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில், முதல்வர் எடப்பாடிக்கு எதிரான பல ரெக்கார்டுகள் மத்திய அரசிடம் இருந்தாலும், எடப்பாடி தொடர்பான பல ரகசியங்கள் தலைமைச் செயாலளர் சண்முகத்திற்குத் தெரியும் என்பதால், சண்முகத்திற்கு எதிரான ரெக்கார்டுகளை பிரதமர் அலுவலகம் சேகரித்திருக்கிறது. அதேபோல, முக்கிய அமைச்சர்களின் துறைகளில், கோலோச்சும் உயரதிகாரிகள் பலரின் ரெக்கார்டுகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவைகளை தேவையான நேரத்தில் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்தில் வாரணாசி சென்ற நித்திய ஆனந்தமான அந்த திருச்சி தொழிலதிபரை மத்திய அரசு அதிகாரிகள் மீண்டும் அணுகியுள்ளனர். அப்போது, மீண்டும் புகார் கொடுக்க அவர்கள் வலியுறுத்தியபோது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக என்னால் புகார் தரமுடியாது என மறுக்க, அப்படியானால் உங்களிடம் இருக்கும் 190 பக்க ஆதாரங்களை மட்டும் எங்களிடம் கொடுங்கள் என அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, அதையெல்லாம் அப்போதே தீயிட்டு எரித்துவிட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார் அந்த திருச்சி நபர் !
இதேபோல, தமிழக ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் கொடுக்க பலருக்கும் வலை வீசப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பல அதிரடி தந்திரங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் பணிகள் டெல்லியில் ரகசியமாக நடந்து வருகின்றன. பாஜகவின் வலையில் சிக்காத அல்லது முரண்டு பிடிக்கிற தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து நெருக்கடிகளை மோடியும் அமீத்சாவும் உருவாக்கப் போகிறார்கள்" என்கின்றனர் டெல்லியின் ரகசியங்களை அறிந்தவர்கள்.
அரசியலுக்கு ரஜினி வரமாட்டார் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எதிர்பார்த்திருந்த நிலையில், பா.ஜ.க பின்னணியில், அரசியலுக்கு வருவதை அவர் உறுதி செய்திருப்பதால் மத்திய அரசின் ஆட்டம் இனி அதிரடியாக இருக்கும் என்கிறார்கள்.