Skip to main content

திமுக அணியில் இணைகிறதா ம.நீ.ம.? முரளி அப்பாஸ் பேட்டி..!

Published on 19/12/2020 | Edited on 20/12/2020
ddd

 

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கமல், ''எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான். அவரின் அடுத்த வாரிசு நான்தான்'' எனப் பேசினார். ''எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர் வாக்குகளை வாங்க நினைத்தால், கானல் நீராகத்தான் போவார்கள். இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். மற்ற கட்சிகள் எப்படி எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடலாம். கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம்'' என முதலமைச்சர், அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ம.நீ.ம செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்த உரிமை இல்லாத கட்சி அதிமுகதான். அதிமுக என்ற கட்சி எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை விட்டு ரொம்ப தூரம் சென்றுவிட்டது. அம்மையார் ஜெயலலிதா அக்கட்சிக்கு வந்த பிறகு, எம்.ஜி.ஆர். ஸ்டாம்ப் சைஸ் போட்டோவாக மாறிப்போனார். ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அம்மாவின் ஆட்சி, அம்மாவின் அரசாக மாறிவிட்டது. எம்.ஜி.ஆரை எல்லா வகையிலும் புறக்கணித்து மூடி மறைத்த ஒரு கட்சி, எம்.ஜி.ஆரைப் பற்றி மற்றவர்கள் பேசும்போது கொந்தளிக்கிறது என்றால் மற்றவர்களும் அவரைப் பற்றி பேசக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

ddd

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைவிட அந்தப் பகுதியில் வேறு எதையும் பெரியதாகக் கட்டமாட்டார்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அப்படி கட்டமாட்டார்கள் என்று சொல்லுவார்கள். எம்.ஜி.ஆர் நினைவிடம் இருக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அதைவிடப் பெரியதாகக் கட்டுகிறார்கள். அந்த நினைவிடத்தில் நுழைந்தால் அங்கு பெரியதாகத் தெரியப்போவது ஜெயலலிதாவின் நினைவிடம்தான். அப்படிப்பட்டவர்களுக்கு, அவரைப் பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது.

 

கமலுக்கு எம்.ஜி.ஆரை ஐந்து வயதில் இருந்தே தெரியும். இவர்களுக்கெல்லாம் எம்.ஜி.ஆரை தெரிவதற்கு முன்பே கமலுக்குத் தெரியும். அவரோடு பழகியிருக்கிறார், வளர்ந்திருக்கிறார். அப்போது எத்தனை புத்திமதி, நல்ல விசயங்களைச் சொல்லிக் கொடுத்திருப்பார். நீச்சல் பயிற்சியே அவர்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

 

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, ஆர்.எம்.வீரப்பனின் 'காக்கிச்சட்டை' படத்தின் வெற்றிவிழாவில், அரசியலுக்கு வருமாறு கமலை அழைத்துள்ளார். பொதுவிஷயங்களில் நிறைய கருத்துகளை கமல் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான், அரசியலுக்கு வரக்கூடிய எண்ணம் இருந்தால் வாருங்கள் என்று அழைத்துள்ளார். அப்போது நீங்கள் இருக்கும்போது நான் எதற்கு என்று சொன்னார் கமல்.

 

mnm

 

எம்.ஜி.ஆரைப் பற்றி புரிந்த மனிதன், எம்.ஜி.ஆர் புறக்கணிக்கப்படுவதைப் பார்த்த மனிதன், எம்.ஜி.ஆரின் நீட்சி என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்றால், அவரது ஓட்டைப் பிரிக்கிற விஷயம் அல்ல, எம்.ஜி.ஆரின் செயல்களைப் புதுப்பிக்கிற விஷயம். அது நாங்கள் மட்டுமல்ல. இன்றைய நாளில் எல்லோரும் சொல்லலாம். ஏனென்றால் அவர் பொதுத்தலைவர். காமராஜ், அண்ணா, பெரியார் மாதிரி எம்.ஜி.ஆர் பொதுத் தலைவராக மாறிவிட்டார். நம் தலைவரை ஊரே கொண்டாடுதே என்று நினைக்காமல், வாக்கு அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றனர். அவர்கள் அப்படிப் பழகிவிட்டனர். இப்போது தேர்தல் வந்துவிட்டதால் எம்ஜிஆரைப் பற்றி பேசுவார்கள்.

 

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஜெயலலிதா வந்த பிறகு எம்.ஜி.ஆர் மூடி மறைக்கப்பட்டார். திமுகவை எதிர்த்துக் கட்சி ஆரம்பித்து ஆட்சியைக் கைப்பற்றி இடைவெளியில்லாமல் ஆட்சி செய்து அதிமுகவை பலமிக்க இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆரை, இரட்டை இலையைக் கொடுத்துச் சென்றவரை மூடி மறைத்துவிட்டனர். தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் 'அம்மா ஆட்சி' 'அம்மா ஆட்சி' என்றுதான் அழைத்தார்கள். வேறு யாரும் எம்.ஜி.ஆர் பற்றி பேசவில்லை, நாங்கள் பேசியதால் முதலமைச்சருக்குப் பதட்டம் ஏற்பட்டுவிட்டது.

 

cnc

 

திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியிருப்பது...

 

யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காக லாக் டவுனை காரணம் காட்டி கூட்டம் நடத்த அனுமதி அளிக்காமல் இருந்தனர். அந்த நேரத்தில் நாங்கள் மவுனமாக மக்களைச் சந்தித்தோம். மவுனப் பிரச்சாரம் செய்தோம். ஊர் ஊராகச் சென்றோம். இந்த மவுன பிரச்சாரமே மற்ற கட்சிகளிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மக்களுக்கு 3வது பார்வைக் கொடுத்திடுமோ? என்ற அச்ச உணர்வால் உடனே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

 

எப்போதுமே நாங்கள், நாங்கள் இல்லாவிட்டால் அவர்கள், எங்களைத் தாண்டி யாரும் வரமுடியாது என்ற வார்த்தை இரண்டு பேரும் சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். அந்த வார்த்தைப் பலிக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சாரத்திற்கு கிளம்பியிருக்கிறார்கள்.

 

உங்கள் தலைவருடன் உதயநிதி பேசி வருகிறார், கமல் திமுக அணிக்கு வர பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் செய்திகள் வருகிறதே...

 

இந்த நான்கு நாள் பிரச்சாரத்தில், நான் முதலமைச்சராவதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கமல் கேட்கிறார். மக்கள் நீதி மலரும்போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என்கிறார். என்னென்ன செயல்கள் செய்வேன் என்கிறார். இதனையெல்லாம் உதயநிதியோ, திமுகவோ ஒத்துக்கொள்ளும் என்று நினைத்தால் குழந்தைத்தனம்.

 

மக்கள் கவனம் திரும்பி எங்களுக்கான வாய்ப்பைக் கொடுக்க யோசிக்கக்கூடாது என்பதற்காக, இவர் என்று இருந்தாலும் திமுக கூட்டணிக்குப் போய்விடுவார் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகச் செய்யப்பட்ட ஒரு யுக்தி. இந்த யுக்தியை இப்போதுள்ள இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி செய்தது என்று தெரியவில்லை.

 

கட்சிக்கு மிக முக்கியமான பங்கு சின்னம். 'டார்ச் லைட்' சின்னம் கிடைக்கவில்லை என்பது ம.நீ.ம கட்சிக்குப் பெரிய இழப்பாகத் தோன்றுகிறதா?

 

கட்சித் தொடங்கி 14 மாதத்தில் தேர்தலைச் சந்தித்தோம். சின்னம் அறிவித்த 18 நாளில் தேர்தலைச் சந்தித்தோம். அதற்குள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தோம். இந்த இரண்டரை வருடங்களில் அது எங்களுக்கு ஒரு அடையாளமாக மாறிவிட்டது.

 

கட்சியில் ஆலோசனை செய்யும்போது சட்ட ரீதியாகக் கேட்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்கள். இதுதொடர்பான கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். எல்லாவற்றுக்கும் கடைசித் தீர்வு நீதிமன்றம். சின்னம் கிடைப்பதற்கான கடைசி முயற்சி வரை எடுப்போம். 

 

கோவில்பட்டியில் பேசிய கமல், ரஜினியுடன் இணையத் தயார் என்று கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது...

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வார்த்தை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, கேட்காமலா இருப்பேன். கேட்பேன் என்றார். அதன்பிறகு கமல் 60 விழாவில் தேவைப்பட்டால் இணைவோம் என்று இருவரும் சொல்லியிருக்கிறார்கள். அதற்குதான் அன்று ரஜினி, 'அதிசயம், அற்புதம் நிகழும்' என்று சொன்னார். ஒத்த கருத்து இருந்தால் அந்த வாய்ப்பை (ஒன்றிணைவதற்கு) ஏற்படுத்திக் கொண்டே வரும்.

 

nkn


ஒரு கருத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும். அதற்கு என்னென்ன பலப்படுத்த முடியுமோ அதற்குத் தயாராக இருக்கிறோம். அதனால்தான் தேவைப்பட்டால் பேசுவேன். அவரிடம் பேசுவதற்கு ஒரு ஃபோன்கால் போதும் என்றார். 

 

திமுக, அதிமுக ஆகியவை கூட்டணி பலத்தோடு நிற்கிறது. ம.நீ.ம கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா?

 

திமுக, அதிமுகவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றுதான் செல்கின்றன. திமுக, அதிமுக பிரமாதமாக ஆட்சி நடத்துகிறார்கள் என்று செல்லவில்லை. அந்த கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அவர்களை எதிர்த்து கூட்டணி அமைத்தவர்கள்தான். அந்தக் கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறது. முடியவில்லை என்றதும் அவர்களுடன் சென்றுள்ளனர். அவ்வளவுதான். ம.நீ.ம அணிகளை திரட்டுகிறதா, பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதா என இப்போது சொல்ல முடியாது. அதற்கான நேரம் இதுவல்ல. அதேநேரத்தில் ஒத்த கருத்துள்ள நாங்கள், சொல்கிற திட்டங்களில் உடன்பாடு உள்ளவர்கள், எங்களோடு வருவதற்கு ஆட்சேபனையில்லை. இதுதொடர்பாக முடிவு எடுக்க எங்கள் தலைவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.