தமிழ் மொழியின் இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று(15ஆம் தேதி) நடைபெற்றது. இதில், சொல்லின் செல்வர் விருதை சூர்யா சேவியர் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அவரைச் சந்தித்த நாம் அவர் விருது பெற்றதற்கு நமது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டு, அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதில் ஒரு கேள்வியாக, “பாஜக அலை வீசுகிறது அதில் தமிழகமும் தப்பாது என்றும், 2024ல் தமிழக மக்களும் வாக்களித்து பிரதமர் மோடியை ஆட்சிக்கு கொண்டுவருவார்கள் என்றும் எச்.ராஜா சொல்கிறார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்கில் மாற்றம் வரும், அதன் மூலம், தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் வரும் என அண்ணாமலை சொல்கிறார்” என்று கேட்டோம்.
அதற்கு பதில் அளித்த சூரியா சேவியர், “எச்.ராஜா முதலில் சாரணர் தேர்தலில் நின்று 54வது ஓட்டை வாங்கட்டும் பிறகு மோடி வருவதைப் பற்றி பேசுவோம். அரவக்குறிச்சியிலும், காரைக்குடியிலும் ஏன் தோற்றார்கள்? முதலில் அதற்கு பதில் சொல்லட்டும் அவர்கள். காரைக்குடியில் மோடி வந்து பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று மறுப்பு தெரிவித்தார். இவருக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கட்சி காலி ஆகிவிடும் என்று தான் ராம்நாடில் பிரச்சாரம் மேற்கொண்டார் மோடி.
அண்ணாமலை கொஞ்சம் அடக்கிவாசிக்க வேண்டும். திமுக என்றும் உங்களுக்கு பணிந்து போகாது. அண்ணாமலை எதற்கும் பதில் சொல்ல மாட்டார். ‘வா அண்ணாமலை.. உளறிட்டு போ அண்ணாமலை’ என்பது போல்தான் பேசிக்கொண்டிருக்கிறார். ட்விட்டரில் மாணவி தற்கொலை குறித்து சர்ச்சைப் பதிவு செய்தார். அது தற்போது பொய் என்று நிரூபனமாகிவிட்டது. அண்ணாமலை தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யவில்லை.
நான் இன்னும் சில விஷயங்களை பேச தயங்குகிறேன். காரணம், அது அவரின் தனிப்பட்ட பிரச்சனை. அந்தத் தனிப்பட்ட பிரச்சனைக்குள் நான் செல்லவில்லை. ஆனால், அண்ணாமலை அதனை மேடையில் பேசிக்கொண்டிருக்கிறார். “நான் பெங்களூரு நட்சத்திர விடுதியில் தங்கவில்லை” என்று பேசிக்கொண்டிருக்கிறார். பெங்களூரு நட்சத்திர விடுதியில் அண்ணாமலை நுழைந்த ஆடியோ, வீடியோ எங்களிடம் இருக்கிறது. வாயை அண்ணமாலை அடக்கவேண்டும். நாங்கள் இதன் மூலமாக உங்களை அடக்க முயலவில்லை. கருத்தியல் ரீதியாக எதிர்க்கொள்ள தயார். திமுக தலைமை, தமிழ்நாடு அரசு, முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களை இழிப்படுத்தக்கூடிய வேலையை அண்ணாமலை செய்வார் என்றால் அந்த ஆடியோவையும், வீடியோவையும் வெளியிட நான் தயார்” என்று தெரிவித்துள்ளார்.