தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான சு. வெங்கடேசனை வரும் மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான சு. வெங்கடேசனை வரும் மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியுள்ளது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், மதுரை புறநகர் மாவட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர். மதுரையிலுள்ள ஹார்விபட்டியில் பிறந்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தனது 18 வயதிலேயே ஓட்டை இல்லாத புல்லாங்குழல் என்ற கவிதை நூலை எழுதினார்.
அதன்பின் 2011ல் வெளிவந்த ‘காவல் கோட்டம்’ புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இந்த புத்தகத்திற்காக அவர் 10 ஆண்டுகள் உழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது காவல் கோட்டம் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ‘நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்’.
மதுரை குறித்த பார்வை அவருக்கு என்றும் உண்டு. கீழடி அகழாய்வு நடைபெறாமலிருந்தபோது அதை எதிர்த்து போராடியவர்களில் இவரும் ஒருவர், கீழடியை உலகளவில் கொண்டுசென்றதற்கு இவரும் ஒரு காரணம். ஜல்லிக்கட்டு உட்பட தமிழ், தமிழர் சார்ந்தவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். தனது நாவல்களில் அதிகமான வரலாற்று பதிவுகளைக் கையாள்வது இவரது சிறப்பாகும். மற்றொரு நாவலான சந்திரஹாசம் பாண்டியர்கள் குறித்தது. தொடராக வெளியாகி, அண்மையில் புத்தகமாக வெளிவந்த வேள்பாரி மிகுந்த வரவேற்பை பெற்றது.
இப்படியாக மதுரை சார்ந்த வாழ்வியலிலும், வரலாற்றிலும் அதிக அக்கறை கொண்டவராக இருக்கும் வெங்கடேசன்தான் தற்போது மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். 2011 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.