தமிழகத்தின் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'
ஒரு வருடமாக நடக்கும் ஆட்டத்தில் முடிவு என்ன?
'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' - இந்த ஆங்கில தொடரை பார்க்காதவர்கள் கூட, இந்த பெயரை கேள்வி பட்டிருப்பீர்கள். கேள்வி மட்டும் பட்டவர்கள், இதன் கதை கருவையும் தெரிந்துகொள்ளுங்கள். மஹாராஜா இறந்த பின்னர் அந்த சிம்மாசனத்திற்காக அடித்துக்கொள்ளும் மற்ற சிற்றரசர்கள், இதற்கு நடுவில் புதுமையான கலாச்சாரம், ஃபேண்டஸியான கதை களம் என்று பின்னியிருப்பார்கள். இக்கதையின் வெற்றியே அடுத்து என்ன நடக்கும் என்று நாம் என்ன கணித்தாலும், நம் கணிப்புகளை துவம்சம் செய்வதுதான் என்கின்றனர் இதை ரசித்து பார்ப்பவர்கள். உலகம் முழுவதும் இத்தொடர் டாப் ஹிட் அடித்து பல லட்சம் ரசிகர்களை சம்பாரித்துள்ளது. தமிழ் நாட்டிலும் இதே போன்ற கதை அம்சத்தை கொண்டுதான் கடந்த ஓராண்டாக தமிழ்நாடு அரசியல் செயல்படுகிறது.
தமிழ்நாட்டிலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு ஆரம்பப்புள்ளி கடந்த டிசம்பர் 5 தேதி நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் தான்.அவரின் இறப்பே மர்மமாக இருக்கும் நிலையில், அதை மறந்துவிட்டு சிம்மாசனத்தை பிடிக்க போட்டி ஆரம்பித்துவிட்டது.இது ஆரம்பத்தில் இரண்டு கதாபாத்திரங்களை கொண்டு ஆரம்பித்தாலும் இப்போது பல்வேறு கிளை கதாபாத்திரம் செயல்பட்டு வருகிறார்கள்.தமிழகத்தின் கேம் ஆஃப் த்ரோன்ஸ் போட்டியாளர்களாக இருந்தது, இருப்பது இவர்கள்தான்.
சசிகலா
ஜெயலலிதா இறந்த பின்னர் இவர்தான் அந்த இடத்தை எடுத்துக்கொள்வார் என்பது பலரது கணிப்பாக இருந்தது. ஆனால், மத்தியில் நிலவிய எதிர்ப்பால் ஒ.பன்னீர் செல்வத்தை முன்னிறுத்தி முதல்வர் ஆக்கினார். தனது கட்டுப்பாட்டை மீற மாட்டார், பின்னர் அந்த இடத்திற்கு ஆசை படமாட்டார் என்று நம்பிக்கொண்டிருந்தார். பிளவுபடாமல் இருந்த கட்சியில் சின்னம்மாவிற்கே கட்சியின் தலைமை பதவி என்று கட்சி பெரியவர்கள் கூறும்படி ஏற்பாடு செய்தார். கட்சியின் தலைமை மட்டும் போதாது, ஆட்சி அதிகாரமும் வேண்டும், அந்த ஆசனம் வேண்டுமென்ற ஆசை சசிகலாவிற்கு வந்தது. போகப் போக ஜெயலலிதாவாக நின்றார், ஜெயலலிதாவாக நடந்தார், ஜெயலலிதாவாகவே தன்னை நினைத்துக்கொண்டார். அப்போது முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தின் இடத்தை எளிதாக பெற்றுக் கொள்ளலாம், சொத்துக் குவிப்பு வழக்கிலும் தப்பித்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டார். சசிகலா, ஒரு நல்ல நாள் பார்த்து முதல்வராக காத்திருந்தார். ஒ.பன்னீர் செல்வமும் சின்ன அம்மாவின் ஆணைக்கு இணங்க ராஜினாமா செய்தார். ஆனால், திடீரென பல திருப்பங்கள். கட்சி பிளவு பட்டது. இருக்கின்றவர்களை வைத்து ஆட்சியையும், கட்சியையும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர், தங்களை ஆதரிப்பவர்களை கூவத்தூருக்கு அழைத்துச் சென்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தன் கைக்குள் வைத்திருந்தார். இருந்தாலும் சட்டம் யாரை விட்டது, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சசிகலா ஜெயலலிதா சமாதியில் சபதம் போட்டுவிட்டு சிறைக்கு சென்றார். கட்சியின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார்.
பன்னீர் செல்வம்
முதல்வராக பதவி ஏற்று, ஒரு பொம்மை போல இருந்த இவருக்கு, சோதனைமேல் சோதனை. இன்னும் சிறிது காலத்தில் பதவி போய்விடுமோ என்றிருக்கையில், மக்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடத் தொடங்கினர். பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக டெல்லி வரை சென்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தார் (நல்லா கேட்டுக்கோங்க மக்களே ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காகத் தான் பேசப் போனார், வேற எதற்கும் அல்ல). ஜல்லிக்கட்டு போராட்டமும் மக்களால் வெற்றி அடைந்தது. எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கையில், திடீரென ஒரு திருப்பம். முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் மெரினாவில் இருக்கும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். கட்சி இரண்டாக பிரிந்தது. இது ஒன்றும் இக்கட்சிக்கு புதிதல்ல, முன்பே ஜானகிக்கும், ஜெயலலிதாவிற்கும் பதவி யுத்தம் ஏற்பட்டு அதில் வெற்றிபெற்றவர்தான் ஜெயலலிதா. இதுவரை அம்மா அப்படியிருந்தார் இப்படியிருந்தார் என்று சொல்லிக்கொண்டிருந்த ஓபிஎஸ். அம்மாவையே அவர்கள் காட்டவில்லை என்று அடித்து சொன்னார்.இவர் பக்கமும் ஆட்கள் சேர ஆரம்பித்தனர்.கவர்னரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்தனர். கூவத்தூரில் இருப்பவர்கள் ஓபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றனர். இவரோ தர்ம யுத்தம் என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தோல்வியை தழுவினார் ஓபிஎஸ். இனிமேல் இவரது அரசியல் வாழ்க்கை போய்விட்டது என்று இருக்கையில், தினகரனை கழட்டி விட்டு எடப்பாடியும் இவரும் கைகோர்த்து, திரும்பி துணை முதல்வராகி தர்மயுத்தத்தில் வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிச்சாமி
கட்சியில் எம்எல்ஏ வாக இருந்த இவர் சசிகலாவிற்கு உண்மையானவர்( கூவத்தூரில் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டதற்காக) என்று தமிழகத்தின் முதல்வராக்கினர். முதல்வராக வந்த பின்பும் சசிகலாவிற்கு உண்மையாக இருப்பார் என்று நினைத்தனர். தினகரனை ஆர் கே நகர் தொகுதியில் நிறுத்தினர். பின்னர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தலை ரத்து செய்தனர். இதற்கு பின்னர் இரண்டாக இருந்த அணி மூன்றாக உருவெடுத்தது. எடப்பாடிக்கும் ஒரு அணி உண்டாகியது. மத்தியில் இருந்து கவர்னர் வழியாக பிரிந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி ஒன்று சேர்ந்தது. பின்னர் இவர்கள் கேட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கப் போராடினர். தினகரனுக்கும் இவர்களுக்கும் கடும் போட்டி நிலவியது. மேலிடம் இவர்கள் பக்கம் என்பதால் சின்னம் இவர்களுக்கே கிடைத்துவிட்டது. இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் இரட்டையர்கள் போல் ஒன்றாகவே சென்று வருவதும் ஒரு சிறப்பு.
தினகரன்
துரோகம் செய்தவர்களுக்கு எதிராக தன் சிரிப்பையே ஆயுதமாக ஏந்தியிருக்கிறார் இவர். அதற்காக இவரொன்றும் தியாகியில்லை. எந்தக் கேள்விக்கும் சாதாரணமாக பதில் அளிக்கிறார், திருச்சியில் கூட்டத்தை காட்டியிருக்கிறார், ரெய்டுகளுக்கும் அஞ்சாமல் ஆடுகிறார் என்று வலிமையான போட்டியாளராக பார்க்கப்படுகிறார். இரட்டை இலை இல்லையென்றான போதும், கவலையில்லை என்று கலங்காமல் இருக்கிறார். தொப்பி கிடைக்காவிட்டாலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பி அந்த ஆசனத்தை நோக்கி நடக்கிறார்.
ஸ்டாலின்
இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனையில், தனக்கு சாதகமாக ஏதேனும் நடக்குமென்று ஒதுங்கி நின்று காத்திருந்தார் இந்த போட்டியாளர். சட்டப்பேரவையிலிருந்து சட்டை பறக்க வீரநடை நடந்து வந்தார். அடித்தாலும் பிடித்தாலும் அவர்களை விட்டு ஆட்சி போகாமல் பார்த்துக்கொண்டார் மத்திய அண்ணாச்சி. அதனால், அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்காமல் பெவிலியனில் காத்திருக்கிறார் இவர்.
தமிழகத்தின் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஆரம்பித்து ஒரு வருடம் ஆக போகிறது. இன்று வரை அந்த போராட்டம் சிம்மாசனத்திற்காகவே இருக்கிறது, மக்களுக்காக என்றும் எந்த போட்டியும் இருந்ததில்லை....
சந்தோஷ் குமார்