இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி, தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக கரோனா முன்களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (17.01.21) மாலை வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,24,301 முன்களப் பணியாளர்களில், 447 பேருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பக்கவிளைவுகள் ஏற்பட்ட 447 பேரில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டநிலையில், ஒருவர் மட்டும் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளார் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோது ஏற்பட்ட பக்கவிளைவுகள், வாந்தி, மயக்கம், தடிப்புகள் போன்ற சிறிய பிரச்சனைகள்தான் எனவும் தெரிவித்துள்ளது.