தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, கேரளாவில் சட்டப்பூர்வமாக விற்பனையாகி வருகிறது. இந்த லாட்டரி சீட்டு மூலம் சிலர் பணக்காரர்களாகவும், பலர் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் லாட்டரித்துறை சார்பில் 25 கோடி ரூபாய்க்கான லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டதில், மெக்கானிக் ஒருவருக்கு பம்பர் பரிசு கிடைத்திருக்கிறது.
கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம் பாண்டவபுரா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவர், மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அவர் கேரளாவில் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், ரூ.500 கொடுத்த லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். ஒரு மாதம் முன்பு விற்பனை செய்யப்பட்ட அந்த லாட்டரி சீட்டுக்கு, மெக்கானிக் வேலை பார்க்கும் அப்துல் பாஷாவுக்கு தற்போது 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வந்த அப்துல் பாஷா, லாட்டரி சீட்டு மூலம் ஒரே நாளில் கோடிஸ்வரராக மாறியுள்ளார். இதனால், அவரும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். அப்துல் பாஷாவுக்கு கிடைத்துள்ள 25 கோடி ரூபாய் பரிசில், லாட்டரிச்சீட்டை விற்பனை செய்த நாகராஜுக்கு கமிஷனாக 10% என 2.5 கோடி ரூபாய் வழங்கப்படும். அதன் பின்னர், 30% என 6.75 கோடி ரூபாய் வருமான வரியான பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள, 15.75 கோடி அப்துல் பாஷாவில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பிறகு, கல்வி, சுகாதார வரி என 2.85 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு, இறுதியாக அப்துல் பாஷாவுக்கு 12.8 கோடி ரூபாய் கிடைக்கும்.