Skip to main content

‘எடப்பாடியுடன் பேச்சுவார்த்தையில் விஜய்; ராமதாஸ் செய்த சிறுபிள்ளைத்தனம்’ - எஸ்.பி.லட்சுமணன்

Published on 29/10/2024 | Edited on 29/10/2024
SP Lakshmanan Interview | TVK Vijay | Edappadi | Seeman 

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் மூத்த பதிரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். 

தனது முதல் மாநாட்டில் எழுதி வைத்த கொள்கைகளை பார்த்து படிப்பதில் தப்பு கிடையாது. கட்சி கொள்கையை விஜய் மனப்பாடம் பண்ணி சொல்லியிருந்தாலும் சினிமா டயலாக் போன்று பேசியிருந்தாலும் கவனிக்க தகுந்ததாக இருந்தது. சித்தாந்த ரீதியில் மத்தியில் ஆட்சி அமைத்திருப்பவர்கள் எதிரி என்றும் அரசியல் எதிரியாக மக்கள் விரோத ‘திராவிட மாடல்’ ஆட்சி என்றும் வெளிப்படையாக விஜய் பேசியிருக்கிறார். இப்படி விஜய் பேசியிருக்கும் பட்சத்தில் சராசரியான அரசியல் பணிகளை தடைகளின்றி செய்ய முடியும் என்பது தெரியாது. அரசியல் என்றாலே சவால்கள் நிறைந்ததுதான்.  

பா.ஜ.க. பற்றி விஜய் வெளிப்படையாக பேசாதிருந்ததை மக்கள் கவனித்து விட்டனர். இது விவாதப் பொருளாக மாறியது என்று விஜய் காதுக்கும் சென்றிருக்கும். பா.ஜ.க.வை அவர் விமர்சித்து பேசவில்லையென்றால் அம்பலப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே விஜய்யை பா.ஜ.க.வின் பி டீம் மற்றும் ஏ டீம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அது உண்மையில்லை என்று நிரூபிக்கும் வேலையை விஜய்தான் செய்ய வேண்டும். செயல்பாடுகள் மூலமாகத்தான் மக்கள் விஜய்யை எடைபோட்டு பார்ப்பார்கள். மற்ற கட்சிகளை விஜய் சாடிய அளவிற்கு அ.தி.மு.க.வை பற்றி பேசவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூத்தாடி என்று விஜய் பேசி அரசியல் வந்தாலும் எம்.ஜி.ஆராக ஆகிவிடமுடியாது. விஜய் எம்.ஜி.ஆரை பற்றி பேசி அ.தி.மு.க. வாக்குகளை பெற நினைக்கிறார் என்ற கருத்துகள் ஏற்றுக்கொள்ளகூடிய வகையில் இல்லை. ஏனென்றால் பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகள் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினாலும் அ.தி.முக.வினர் அவர்களுக்கு வாக்கு செலுத்திவிட மாட்டார்கள். ஜெயலலிதா இறந்த பிறகும் அக்கட்சியினர் மோடி விரித்த வலையில் சிக்காமல் இருக்கின்றனர்.

மற்ற கட்சிகள் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படுவது போல் அ.தி.மு.க. கட்சிக்கும் விஜய்யால் பாதிப்பு வரும். பா.ஜ.க.வுடனும் தி.மு.க.வுடனும் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு குறைவு. பிரதானமாக இப்போது பலர் எதிர்பார்ப்பது விஜய் அதிமுக பக்கம் கூட்டணி சேர்வாரா? என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சியினர் வந்தால் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்று விஜய் சொல்கிறார். கொடுக்கும் இடத்தில் வைத்து தனது கட்சியை விஜய் அங்கு பேசியிருக்கிறார். அ.தி.மு.க. ஒரு காலும் இதை ஏற்று கூட்டணிக்கு செல்லாது. எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய் கொடுக்கும் அதிகார பகிர்வை வைத்து கட்சி நடத்தும் அளவிற்கு அ.தி.மு.க. வலிமையற்றதாக இல்லை. மாநாடு நடந்து கொண்டிருந்த நேரத்தில் த.வெ.க நிவாகிகள் அக்கட்சியின் செயல்பாடு பிடிக்காமல் பா.ம.க. இணைந்துவிட்டார்கள் என்று ராமதாஸ் செய்திருப்பது சிறு பிள்ளைத்தனமானது இதை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. 
ஒரு சினிமா பிரபலம் வரும்போது குறைந்த பட்சம் லட்சக்கணக்கானோர் திரளத்தான் செய்வார்கள். திரண்ட மக்கள் ஏற்கனவே இங்குள்ள கட்சிக்கு ஓட்டு போட்ட மற்றும் புதிய வாக்காளர்கள் தான். விஜய்யின் அரசியல் வருகையால் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஓரளவிற்கு பாதிப்பு இருக்கும். ஆனால் இளைஞர்கள், பெண்கள் போன்றவர்கள் அதிகமாக இருப்பது நா.த.க., வி.சி.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்குத்தான். முதலில் இந்த கட்சிதான் விஜய்யின் வருகையால் பெரிதும் பாதிக்கப்படப்போகிறார்கள். இளைஞர்களின் வாக்குகளில் இவர்களுக்கு மிகப்பெரிய சேதாரத்தை அந்த கட்சிகள் சந்திக்க நேரிடும். விஜய்க்கு வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களது பெற்றோர்களையும் அவர் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக விஜய்க்கு வாக்களிக்க சொல்ல வாய்ப்பிருக்கிறது. இதில் திராவிட இயக்கங்களும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. விஜய்யால் எங்களுக்கு பாதிப்பில்லை அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் பாதிப்பு என்று தி.மு.க. மறுத்தால் தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். கண்டிப்பாக தி.மு.க. அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள். ஆனால் பாதிப்பில்லை என்று சொல்ல முடியாது. 

செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளில் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று விஜய் மட்டும்தான் சொல்லியிருக்கிறார். இதை முதலமைச்சர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் விஜய் அ.தி.மு.க.வுடன் சீட்டு எண்ணிக்கை வரை பேசியிருக்கிறார். மாநாட்டில் அ.தி.மு.க.வை விமர்சிக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவேளை விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துவிட்டால் மாநாட்டில் வந்த 5 லட்சம் பேரில் குறைந்தது 1 லட்சம் நபர் அந்த கூட்டணியை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் விஜய்யை நம்பி வந்தவர்கள் எல்லோரும் கூட்டணி இல்லாமல் நேரடியாக விஜய் ஆட்சியை பிடிப்பார் என்ற நம்பிக்கையில்தான் அவர் பின்னாடி செல்கின்றனர். அதனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணியும் தடைபடும். விஜயகாந்த் முதலில் தனியாக தேர்தலில் நின்றால்தான் கணிசமான வாக்கு எண்ணிக்கைகளை தமிழ்நாட்டில் வாங்கினார். திருடன் என்று விஜயகாந்த் இரண்டு கட்சிகளை விமர்சித்த பிறகு உடனே அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்றைக்கு பேசும் நிலைமையில் கூட தே.மு.தி.க. இருந்திருக்காது. அந்த கட்டமைப்பை விஜயகாந்த் உருவாக்கினார். அதை உருவாக்கும் முன்பு விஜய் கூட்டணி வைத்தால் அவரை தனிப்பெரும் தலைவராக பார்க்க மாட்டார்கள். நடந்தது ஒருநாள் கூத்து அல்ல. ஒவ்வொரு நாளும் கடுமையான விமர்சனம் வரும், அரசியல் ரீதியாக தாக்கப்படுவார். தனிமனித வாழ்கை விமர்சிக்கப்படும் இதுதான் யதார்த்தம்.