Skip to main content

மக்களின் கேடயமாக உள்ளாட்சித்துறை பணியாளர்கள்!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

  

கரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி  திறம்பட கையாண்டு வருகின்றனர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளாட்சித்துறை ஊழியர்கள்! சுகாதாரத்துறையினரை விட உள்ளாட்சித் துறை வீரர்களின் தியாகமே தேசிய அளவில் போற்றப்படுகிறது. 
             

தமிழகத்தில் உள்ளாட்சித்துறையில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஊழியர்களாக இருக்குன்றனர். தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில், போர்க்கள வீரர்கள் போல வீதிக்கு வீதி தெருவுக்குத் தெரு பம்பரமாகச் சுழன்று களப்பணியாற்றி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் உள்ளாட்சித்துறை ஊழியர்களின் தியாகத்தை உணர்ந்து அவர்களுக்கு பாத பூஜை செய்து மக்கள் மகிழ்கின்றனர்.  

 

Municipal Administration


            
சென்னை திருவான்மியூர் பகுதிகளில் வலம்வந்த உள்ளாட்சித்துறை ஊழியர்களிடம் நாம் பேச்சு கொடுத்தபோது, ‘’ எந்த ஒரு மாநகரமும் செய்ய முடியாத பணிகளைத் துவக்கி தேசத்தையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் சென்னை மாநகராட்சி ஊழியர்களை அழைத்துப் பேசினார் அமைச்சர் வேலுமணி. கரோனா பதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டும் என்பதற்காக வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது. அதற்கு உங்களின் ஒத்துழைப்புதான் அவசியம். உங்களின் நலன்களை அமைச்சர் எங்கிற முறையில் நான் பாதுக்காக்கிறேன். ஆய்வுப் பணிகளில் உங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம் என அறிவுறுத்தினார். ஊழியர்கள் தரப்பில் சம்மதம் தெரிவித்தோம். 
           

இப்போது, சென்னை பெரு நகரம் முழுவதும் வீடுவீடாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதனால் மக்கள் வெளியேறுவதும் தடுக்கப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறது சென்னை மாநகராட்சி. சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் 16 ஆயிரம் களப்பணியாளர்களையும் ஆய்வுப் பணிக்காகக் களமிறக்கியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி. குறைந்தது 30 நாட்களுக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்கவும், அடுத்தடுத்த நாட்களில் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் நபர்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டிருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி எந்த ஒரு மாநிலத்திலும் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவில்லை. தற்போது, தமிழக உள்ளாட்சித்துறையின் இந்தச் செயல்பாடுகளை அறிந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வீடுவீடாக ஆய்வு செய்ய தற்போதுதான் உத்தரவிட்டுள்ளார்! மக்களின் உயிரைப் பாதுக்காக்கும் கேடயமாக உள்ளாட்சித்துறையின் பணியாளர்களாகிய நாங்கள் இருப்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது ! ‘’ என்று பெருமிதமாகச் சொல்கிறார்கள். 
               

http://onelink.to/nknapp



சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினரிடம் நாம் விசாரித்தபோது, ‘’ வீடுவீடாக ஆய்வு செய்யப்படுவதில் கவனம் செலுத்தி வரும் அதேவேளையில் இன்னும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு முழுமையான கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கரோனா தொற்றைத் தடுக்க, வைரஸ் பாதித்தவர்கள் வசிக்கும் வீடுகளின் முகப்பில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள்  என்கிற ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

 

Municipal Administration


               

வைரஸ்  எங்கிருந்து பரவுகிறது என்பதைக் கண்டறியும் பணியில் வேகத்தை அதிகரித்துள்ள மாநகராட்சி, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது.  வீதிக்கு வீதியும், தெருவுக்குத் தெருவும், முக்கியச் சாலைகளிலும்  கிருமி நாசினி தெளிப்பு பணிகளைத் துரிதப்படுத்தியிருக்கிறோம். இதற்காக, உள்ளாட்சித்துறை பணியாளர்கள் கண்துஞ்சாமல் வேலைப்பார்த்து வருகின்றனர். இதன் பணிகளைத் தினந்தோறும் கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அமைச்சர் வேலுமணி, மாநகராட்சியை மக்கள் எளிமையாக தொடர்புகொள்வதற்கேற்ப தொடர்பு மையத்தையும், அதற்கென  தனி செயலியையும் உருவாக்கச் சொல்லியிருந்தார். 
            

உடனடியாக உருவாக்கப்பட்டது. சமீபத்தில் அவைகள் தொடங்கப்பட்டு அதனைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். அதில் வரும் புகார்கள் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது. அதிகாரிகளால் தீர்க்கப்பட முடியாத பல பிரச்சனைகள் அமைச்சர் வேலுமணியின் கவனத்துக்கொண்டு செல்கிறோம். பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கிறார். மக்களைப் பாதுகாக்கும் கேடயமாகச் சென்னை மாநகராட்சி செயல்படுவதைக் கவனித்துதான், தற்போது டெல்லி அரசும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை வீடுவீடாகத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களைக் கரோனாவிலிருந்து மீட்கவும் சென்னை மாநகராட்சி பகுதியில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை போன்றே தமிழகத்தின் மற்ற மாநகராட்சியும் எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது“ என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். 
              

மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற நோய்கள் உருவாவதற்கு கொசுக்களின் பெருக்கம் முக்கியக் காரணம். கொசுக்களால் உருவாகும் நோய்கள் மக்களின் எதிர்ப்பு சக்திகளையும் குறைத்துவிடுகின்றன. அதனால் கொசுக்களைக் கட்டுப்படுத்த வீடுகளின் சுற்றுப்புறத்தையும், வீதிகள் மற்றும் சாலைகளையும் சுத்தப்படுத்துவது; அந்தப் பகுதிகளில் குப்பைகளும் கழிவுகளும் தேங்காமல் பார்த்துக்கொள்வது; சுத்தப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது போன்ற சுகாதாரப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதற்கு உள்ளாட்சித்துறை ஊழியர்களில் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களும் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், வீதிகளைச் சுத்தப்படுத்தும்போது அந்தந்த பகுதிகளிலுள்ள மக்களிடம் கரோனா தொற்று பரவாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வுப்பணிகளையும் செய்து வருகின்றனர். 
            

கோடைக்காலம் துவங்கியதால் சென்னையில் குடிநீர் பஞ்சம் வராமல் தடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த அமைச்சர் வேலுமணி, சென்னை மெட்ரோ நிர்வாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஆலோசனையில், சென்னையில் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும் என்றும், குடிநீர் விநியோகத்தின் போது சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார் வேலுமணி. மேலும்,  சென்னை குடிநீர் வாரியமும், மற்ற பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் தண்ணீர் விநியோகத்தைத்  தடையின்றி வழங்குவதற்கேற்ப ஆணையும் பிறப்பித்துள்ளார் என்கிறார்கள் குடிநீர் வடிகால் வாரியத்தினர்.



 

சார்ந்த செய்திகள்