சுதந்திர இந்தியாவுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டியிருந்தது. அம்பேத்கரை இந்தியாவின் சட்ட அமைச்சராக நேரு நியமித்தார். காந்தியும் இதற்கு சம்மதித்தார்.
அம்பேத்கர் இதற்கு ஒப்புதல் அளித்து, பதவி ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. முன்பு அவரை இகழ்ந்தவர்களும் இப்போது புகழ்ந்தார்கள். அமைச்சர் என்ற பொறுப்பு அவரை ஒரே நாளில் உயர்ந்த மனிதராக மாற்றியது.
இரவு பகல் பாராமல் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் வேலையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.
தனது பிறப்பு காரணமாக எத்தனையோ இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்தவர் அம்பேத்கர். தனது மக்களுக்கு தகுந்த சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் கவனமாக இருந்தார்.
தீண்டாமை ஒழிக்கும் 17 ஆவது பிரிவு,கொத்தடிமையாக நடத்தப்படுவதைத் தடுக்கும் 23 ஆவது பிரிவு, மத்திய அரசு, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளுக்கும் தேர்வு செய்வதில் ஒதுக்கீடு வழங்கும் 235 ஆவது பிரிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் சபையில் பிரதிநிதித்துவம் வழங்க இட ஒதுக்கீடு செய்யும் 330 ஆவது பிரிவு, இதேபோல் மாநில சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 332 ஆவது பிரிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும், அவர்களை சமூக அநீதி மற்றும் எல்லா வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாக்க அறிவுறுத்தும் 46 ஆவது பிரிவு.
இப்படி பல பிரிவுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உத்தரவாதம் ஏற்படுத்தினார் அம்பேத்கர். ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை...
“உரிமைகள் என்பவை சட்டத்தினால் காப்பாற்றப்படுவதில்லை. சமூகத்தின் சமூக உணர்வு மற்றும் நெறி உணர்வு ஆகியவற்றால்தான் பாதுகாக்கப்படுகின்றன”
புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கி அரசியல் நிரணய சபையிடம் ஒப்படைத்தார் அம்பேத்கர்.
இந்தப் பணியில் ஒய்வு இல்லாமல் உழைத்ததால் அவர் சுகவீனமடைந்தார். எனவே, சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் பம்பாய் வந்தார் அம்பேத்கர்.
வயதாகிவரும் நிலையில் தன்னைக் கவனித்துக் கொள்ள வாழ்க்கைத் துணை வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவ மனையில் பணியாற்றிய டாக்டர் சாரதா கபீர் என்பவர் அம்பேத்கரை நன்றாக கவனித்து வந்தார். மிகுந்த பரிவுடன் இருந்தார். அவரையே திருமணம செய்துகொள்ள அம்பேத்கர் முடிவு செய்தார். சாரதாவும் அவரை மணக்க சம்மதித்தார்.
பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த சாரதாவுக்கும் அம்பேத்கருக்கும் டில்லியில் உள்ள அவருடைய வீட்டில் பதிவு திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கு சில நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
ஆறு மாதங்கள் மக்கள் கருத்தறிந்த பிறகு நகல் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது.
315 சரத்துக்களையும், 8 படிமங்களையும் கொண்ட புதிய அரசியல் சட்டத்தை 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்து அம்பேத்கர் பேசினார். இதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது பலத்த கரவொலி எழுந்தது. அம்பேத்கரை எல்லோரும் பாராட்டினார்கள். அப்போது, இந்த நகலைத் தயாரிக்கும்போது மேலாதிக்க சாதியினரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததை அவர் வெளிப்படுத்தினார்.
நவம்பர் 26 ஆம் தேதி இந்திய மக்களின் பெயரால் இந்த அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இதையடுத்து இன்னொரு முக்கியமான பிரச்சினையில் அம்பேத்கர் தனது கவனத்தைத் திருப்பினார். அதுதான் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை, விவாகரத்து உரிமை வழங்க வகை செய்யும் மசோதா.
இது 1941 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, 1946 ஆம் ஆண்டு வாக்கில் தயாரிக்கப்பட்ட மசோதா. ஆனால், அதை நிறைவேற்ற விடாமல் ஆதிக்கச் சக்திகள் தடுத்து நிறுத்தியிருந்தன. அதை அம்பேத்கர் தன் கையில் எடுத்தார். அதற்கு உயிர்கொடுக்க விரும்பினார். ஆனால், அதை முதல் பொதுத் தேர்தல் முடிந்த பிறகுதான் எடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தினார்கள்.
பெண்களுக்கு உரிமைகள் கொடுப்பதை அப்போதும் சரி இப்போதும் சரி ஆதிக்க சக்திகள் கடுமையாக எதிர்த்தே வருகின்றன.
இன்றைய நிலையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் இப்படியென்றால், அன்றைய நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
நேரு ஒப்புதல் அளித்ததால் அந்த மசோதாவை மிகக் கவனமாக சீர்திருத்தினார். ஆனால், அதை அறிமுகப்படுத்துவதற்கு வல்லபாய் படேல் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். பெண்களுக்கு உரிமைகள் கொடுத்தால் இந்துச் சமூகம் உடைந்து சிதறி விடும் என்று அவர் கூறினார். இருந்தாலும் 1951 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இந்துச் சட்டம் குறித்த மசோதாவை அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்த பெண்கள் இந்தச் சட்டத்தை பாராட்டினார்கள். பெண்களுக்கு பிடித்திருந்தாலே ஆண்களுக்கு பிடிக்காமல் தானே போகும்.
கடைசிவரை அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டனர். அம்பேத்கர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.
“அழுவாரின்றி அழுங்குரல் ஓசையின்றி கொன்று புதைக்கப்பட்டு விட்டது” என்று கூறினார் அம்பேத்கர்.
இந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து இனியும் சட்ட அமைச்சராக நீடிப்பது பயனற்றது என்று அம்பேத்கர் நினைத்தார். தனது பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பினார்.
அம்பேத்கரின் கடினமான உழைப்பை நேரு பாராட்டினார். ஆனால், அம்பேத்கரின் உழைப்பும் தனது விருப்பமும் நிறைவேறாமல் போனதில் அவருக்கு வருத்தம் இருந்தது.
1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கின. அம்பேத்கரின் அமைப்பு சோஷலிஸ்ட் கட்சியுடன் மட்டும் உடன்பாடு செய்து கொண்டு காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டது.
மத்திய பம்பாய் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அம்பேத்கர் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளரிடம் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மார்ச் மாதத்தின நடுவில் மாநிலங்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பம்பாய் மாநில சட்டமன்றத்தில் இருந்து 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. இந்தத் தேர்தலில் அம்பேத்கரும் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவருக்கு பலர் கொடுத்த ஆதரவு காரணமாக வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூன் மாதம் அவருக்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. அதை நேரில் சென்று பெற்றுக் கொண்டார். மாநிலங்களவையில் நேரு தலைமையிலான அரசாங்கத்தின் பல கொள்கைகளை அம்பேத்கர் கடுமையாக சாடினார்.
மொழிவழி மாநிலங்களை உருவாக்குவதில் நேரு அரசாங்கம் ஊசலாட்ட போக்கை கடைப்பிடித்தது. அதை அம்பேத்கர் வன்மையாக கண்டித்தார். ஆந்திர மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக பொட்டி ஸ்ரீராமுலு உயிர்த்தியாகம் செய்தார். அதன்பிறகு 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவாக்குவதற்காக மசோதா தாக்கலானது. அதன்மீது நடைபெற்ற விவாதத்தில் அம்பேத்கர் பேசினார்...
“நீங்கள்தானே அரசியல் சட்டத்தை உருவாக்கினீர்கள் என்று எதற்கெடுத்தாலும் என்னை கேட்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் ஒரு சவாரிக் குதிரையாக இருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டேனோ அதைத்தான் செய்தேன். எனக்கு விருப்பம் இல்லாததையும் நான் செய்ய வேண்டியிருந்தது.”
“உங்களுடைய களங்கங்களுக்கு எல்லாம் என்னை குற்றம் சாட்ட விரும்புகிறீர்கள். நான் அரசியல் சட்டத்தை எழுதியதாக கூறுகிறீர்கள். ஆனால், தவறாக பயன்படுத்தப்பட்டால் அந்த அரசியல் சட்டத்தை எரிக்கும் முதல் நபராக நான்தான் இருப்பேன்”
அம்பேத்கரின் ஆவேசமான உரை அரசியல் சட்டத் தயாரிப்பு தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தியது. உண்மையில் அவரை உயர்ஜாதியினர் தங்களுடைய கருவியாகவே பயன்படுத்தி இருந்தார்கள்.
அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவை முதன் முறையாக நேரு அரசாங்கம் பயன்படுத்தியது. அந்த நடவடிக்கையை அம்பேத்கர் கடுமையாக கண்டித்தார்.
அதுபோலவே, சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாத ராஜாஜியை முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்ததை எதிர்த்தார். பம்பாயில் தோல்வியடைந்த மொரார்ஜி தேசாயை முதல்வராக தேர்ந்தெடுத்ததையும் கண்டித்தார். இரண்டு நடவடிக்கைகளும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.