மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம், மக்களின் பெரும்பான்மை பொழுதுகளையே விழுங்கி வருகிறது என்றால், அது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் தான். தொலைதூர தகவல் தொடர்புக்கு, பொழுதுபோக்கு தளங்களாகவும் ஆரம்பிக்கப்பட்ட இவை, இன்று மனிதனின் வாழ்வோடு இணைந்துவிட்டன என்றால் மிகையாகாது. மணிக்கு ஒருமுறையாவது இந்த சமூகவலைதளங்களுக்கு சென்று பதிவுகளை பார்க்கவில்லை என்றால் அன்றைய நாள் ஓடாது என்ற ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இன்றைய தலைமுறை.
ஒரு தசாப்தத்தை கடந்து மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த சமூகவலைதளங்களின் பயன்பாடு என்பது ஆரம்ப காலத்திற்கும், தற்போதைய நிலைக்கும் மிகப்பெரிய மாறுதலை சந்தித்துள்ளது என்றே கூறலாம். தொடக்கத்தில் எழுத்துவடிவிலாக இருந்த பதிவுகள் காலப்போக்கில் மீம் என்ற புகைப்பட வடிவ பதிவுகளாக பரிணமித்தது. ஆரம்பகாலகட்டத்தில் தனித்த நபரையோ, சூழலையே கிண்டல் செய்யும் விதமாக மட்டுமே அதிகளவில் வெளியாகி வந்த மீம்கள், தற்போது சமூக பிரச்சனைகள் சார்ந்தும், விழிப்புணர்வு மீம்களாகவும் மாற தொடங்கியுள்ளன.
நடிகர்களுக்கான சண்டைகள், கிரிக்கெட், பெண்களை கேலி செய்வது போன்ற மீம்களில் திளைத்திருந்த இளைஞர்கள் தற்போது சமூகத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. கேளிக்கை விஷயங்களை விடுத்து, ஜல்லிக்கட்டு, பேரிடர் கால உதவிகள் தொடக்கி மக்களவை தேர்தல், சந்திரயான் 2, சுபஸ்ரீ விபத்து என சமூகத்தை நோக்கி இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.டி யில் பணியாற்றும் இளைஞர்கள் என வளரும் தலைமுறையினரின் இந்த புதிய பார்வை, சமூகத்திற்கான ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை விரிவுபடுத்தியது, இந்தியாவின் அறிவியல் சாதனையாக சந்திரயானை சாமானியர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது, பள்ளிக்கரணையின் நடந்த ஒரு விபத்தை இந்திய அளவில் கொண்டுசேர்த்தது என இவை அனைத்திலுமே சமூகவலைதளங்களின் பங்கு அளப்பரியது என்றே கூற வேண்டும்.
பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட ஒரு தளத்திற்கு வழக்கமாகிப்போயிருந்த ஒரு கூட்டம், இன்று அதே தளத்தினை சமூக மாற்றங்கள் சார்பானதாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகளில் வெற்றியும் பெற்றுவருகிறது என்பதே நிதர்சனம். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நடிகர் துதிகள் என இவை அனைத்தையும் கடந்து, மக்கள், சமூகம், சுற்றுசூழல், அரசியல் போன்ற பிரச்சனைகளுக்கு தங்கள் குரலை எழுப்புவதற்கான ஒரு தளமாக இதனைமாற்றி புதிய தடத்தினை இளைய தலைமுறையினர் அமைத்துவருவது ஆரோக்கியமான சமூகத்திற்கான ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.