Skip to main content

ஓபிஎஸ்ஸை வைத்து எதையும் சாதிக்கலாம்னு திட்டம் போடாதீங்க...கறார் காட்டிய இபிஎஸ்! 

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10-ந்தேதி சென்னை திரும்புகிறார். அவருடன் சென்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் படையும் அன்றைய தினமே திரும்புகிறது. முதல்வரும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அரசு எப்படி இயங்குகிறது என கோட்டை வட்டாரங்களில் ஒரு ரவுண்ட் வந்தோம்.

 

admk



எடப்பாடியும் முக்கிய அமைச்சர்களும் இல்லாத நிலையில் கோட்டை வெறிச்சோடிதான் இருக்கிறது. அ.தி.மு.க.வினரின் நடமாட்டம் குறைந்துள்ளது. மாறாக, அமைச்சர்களின் வீடுகளுக்கு படையெடுக்கின்றனர் கட்சியினர். தலைமைச்செயலகத்துக்கு வருகிற துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவாதிக்கிறார்கள். இந்த விவாதம் அமைச்சர்களின் வீடுகளிலும் நீண்ட நேரம்வரை செல்கிறது.


  admk



முதல்வரின் பயணத்தில் இருக்கும் அவருடைய செயலாளர்கள் சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் மூவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் துறைகளின் செயலாளர்களிடம் தினமும் இரண்டுமுறை ஆலோசிக்கிறார்கள். கோட்டையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் மூலம் அறிந்து எடப்பாடிக்கு தகவல் சொல்லியபடி இருக்கின்றனர் அவரது செயலாளர்கள். முதல்வர் இல்லாத சூழல் குறித்து மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, முதல்வர் வெளிநாட்டில் இருக்கும்போது அவரது பொறுப்பை தற் காலிகமாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப் பட்டது. அதற்கேற்ப டெல்லியும் சில முயற்சிகளை எடுத்தது; ஆனால், பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க விரும்ப வில்லை எனவும், ஒப்படைத்துத் தான் ஆக வேண்டுமெனில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் ஒப்படைக் கிறேன் எனவும் அழுத்தமாக டெல்லிக்கு சொல்லி அதில் உறுதியாகவும் இருந்தார் எடப்பாடி. ஒரு கட்டத்தில் அதனை டெல்லி ஏற்றுக்கொண்டதால் பொறுப்புகளை மடைமாற்றம் செய்யாமல் ப்ளைட் ஏறினார் முதல்வர்.


வெளிநாட்டில் இருக்கும் எடப்பாடி, இந்திய நேரத்தை அட்ஜஸ்ட் செய்து தின மும் காலையிலும் இரவிலும் தங்கமணியிடமும் வேலு மணியிடமும் ஆலோசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மூத்த அமைச்சர்கள் இருவரிடமும் சில அசைன் மெண்டுகளை கொடுத்துவிட்டு சென்றதால் அது தொடர்பாக, அவர்களிடம் விவாதிக் கிறார் எடப்பாடி. குறிப்பாக, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச் சர்கள், எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கு மாறு சொல்லப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் க்ளோஸாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் கள். உளவுத்துறை அதிகாரிகளிடம், அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களை தங்கமணி -வேலுமணியிடம் பகிர்ந்துகொள்ள எடப்பாடி அறிவுறுத்தியிருப்பதால், உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் இவர்களிடம் பகிர்ந்துகொள் ளப்படுகின்றன.

சமீபத்தில் ஓ.பி.எஸ். வசமிருக்கும் சி.எம்.டி.ஏ.விலும் குடிசை மாற்று வாரியத்திலும் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்தின் தலையீடு அதிக மிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளது. அண்மையில் குடிசை மாற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ராஜசேகர், தேனி சென்று ரவீந்திரநாத்தை சந்தித்து சில டீலிங்குகளை பேசி முடித்துவிட்டு வந்திருப்பதை மோப்பம் பிடித்து, அதன் முழு விபரங்களையும் மேலிடத்தில் ஒப்புவித்திருக்கிறது உளவுத்துறை. மேலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கிழக்கு கடற்கரைசாலையிலுள்ள ஒரு ரிசார்ட்டில் ரகசிய ஆலோசனை நடத்திய விவகாரத்தையும், அவர்களுக்கு பின்னணியில் மூத்த அமைச்சர்கள் இருவர் தூண்டுகோலாக இருப்பதையும் உளவுத்துறை சொல்லியுள்ளது.