சிதம்பரத்தை கைது செய்தது ஐ.என். எக்ஸ். மீடியா அதிபர் இந்திராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான்' என்கின்றன வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும். அந்த வாக்குமூலம் என்ன என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்தது நக்கீரன்.
முதல் கணவருக்குப் பிறந்த மகளைக் கொன்ற வழக்கில் தற்போதைய கணவருடன் சிறைப்பட்டு, அவரிடமிருந்தும் விவாகரத்து கோரியிருக்கும் இந்திராணி அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் ஐ.என்.எக்ஸ் மீடியா கம்பெனியை சிங்கப்பூரிலுள்ள சில்க் வார்ம் இன்வெஸ்ட்மெண்ட் என்கிற கம்பெனியின் மூலதனத்தில் ஆரம்பித்தோம். அதில் ஆசிரியராக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராக இருந்த வீர்சிங்வி பொறுப்பேற்றார். அவர்தான் எங்களுக்கு சோனியா காந்தி, ப.சிதம்பரம் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மூலம் நாங்கள் ஒளிபரப்பு நடத்த அனுமதி பெற்றோம். இந்திராணியாகிய நான் இந்தியன், எனது கணவரான பீட்டர் முகர்ஜி ஒரு பிரிட்டிஷ் பிரஜை. அதனால் எங்களது மீடியா கம்பெனிக்கு பல சட்ட சிக்கல்கள் வந்தன.
9 எக்ஸ், நியூஸ் எக்ஸ், 9 எக்ஸ் நியூஸ் என மூன்று சேனல்களாக தொடங்கிய எங்களது சேனல்களில் 9 எக்ஸ் சேனலை விற்க வேண்டி வந்தது. எங்களுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்பட்டது. மொரீஷியஸில் உள்ள ஒரு கம்பெனி 300-க்கும் மேற்பட்ட கோடிகளை தர முன்வந்தது. அதற்கு FIPB எனப்படும் அன்னிய மூலதனத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் அனுமதி தேவைப்பட்டது. நாங்கள் ப.சிதம்பரத்தை நார்த் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அவர் FIPB யின் அங்கீகாரத்தை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அத்துடன், "என் மகன் கார்த்தி சிதம்பரம் ஒரு கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.
நானும் எனது கணவர் பீட்டர் முகர்ஜியும் டெல்லியில் உள்ள ஹயாத் ஓட்டலுக்குச் சென்று கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். அவர், ஒரு மில்லியன் டாலர் கேட்டார். அதன் இந்திய மதிப்பில் 3.5 கோடி ரூபாயை கார்த்தியிடம் கொடுத்தவுடன் 350 கோடி ரூபாய்க்கான மொரீஷியஸ் மூலதனத்தை FIPB ஒரு சில தினங்களில் கிளியர் செய்தது'' என்று தெரிவித்திருப்பதாக அமலாக்கத்துறையினர் நம்மிடம் தெரிவித்தனர். ப.சி.யின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பேச்சு வார்த்தையில் வருகிறார். ஒரு மீடியாவுக்கு வரும் வெளிநாட்டு மூலதனம் குறித்து, மீடியா பற்றி எதுவும் தெரியாத கார்த்தி சிதம்பரம் என்ன ஆலோசனை தரமுடியும்? ஐ.என்.எக்ஸ் மீடியாவிடம் பணம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ப.சிதம்பரம் "எனது மகன் கன்சல்டன்சி நடத்துகிறான். அவனுக்கு உதவி செய்யுங்கள்' எனக் கூறி மகன் மூலமாக லஞ்ச பணம் வாங்கினார் என்பதுதான் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.
இந்த வாக்குமூலமும் அது தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ப.சி. தொடர்ந்த வழக்கில் சமர்பிக்கப்பட்டது. அதைப் பார்த்த பிறகு முன்ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, ""சிதம்பரம் இந்த முறைகேட்டில் முக்கிய சூத்ரதாரி (King pin) போல தலைமையேற்றுள்ளார்'' என முன்ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்ட ப.சி.யிடம் இந்திராணி-ப.சி. சந்திப்பு, மகனுக்கு உதவி செய்யுங்கள் என ப.சி. சொன்ன வாக்குமூலம், இந்திராணியின் ஆடிட்டர் சொன்ன குற்றச்சாட்டு ஆகியவை கேள்விகளாக்கப்பட்டுள்ளன.
இது சாதாரண தாசில்தார் அலுவலகத்தில் நடப்பது போன்ற கமிஷன்தான். அதை ப.சி.யின் நண்பரான சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரான அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நல்ல உடல்நிலையில் இருந்தவரை கண்டுகொள்ளவில்லை. அமித்ஷா தோண்டியெடுத்து விட்டார். அடுத்தகட்டமாக ப.சி. நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து பைல்களும் தோண்டப்படுகின்றன. அதில் ஒன்று ஏர் இந்தியா தொடர்பானது என்கிறது அமலாக்கத்துறை. ப.சி.யைத் தொடர்ந்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வரும் வாரங்களில் சிறைக்குப் போவார். இதற்கிடையே சு.சுவாமி போன்றவர்கள் சோனியா காந்தியையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
இதில் ப.சி. நிதியமைச்சராக இருந்தபொழுது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை கை வைக்க நரேந்திர மோடி விரும்பவில்லை. சமீபத்தில் மோடியை சந்தித்த மன்மோகன்சிங் பல விஷயங்களை மோடியிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் என்கிறது டெல்லி வட்டாரம்.