Skip to main content

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா?

Published on 22/08/2019 | Edited on 23/08/2019

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே விதிப்புக்கு வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்தத்தை மாநிலங்களவை ஏற்றது. இதையடுத்து அந்த வரிவித்திப்பு உறுதியாக அமலுக்கு வரும் நிலை உருவாகியது. ஆனால், அந்த வரிவிதிப்பு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு விமர்சனம் செய்தவர் ப.சிதம்பரம்.

amit chidambaram

 

 

அதைத்தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் ஆகியவற்றை செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டிற்குள்ளும் தீவிரவாதிகள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்றும், தீவிரவாதிகளின் நடவடிக்கை ஒழிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

ஆனால், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் சாமானிய மக்களை மூன்று மாதங்களுக்கு மேலாக கடுமையாக அலைக்கழித்தது. நூற்றுக்கணக்கானோர் பணத்துக்காக ஏடிஎம் வாசலில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தனர்.

மோடியின் இந்த நடவடிக்கையை முட்டாள்தனமானது என்று முதன்முதலில் ஆதாரங்களுடன் கூறியவர் ப.சிதம்பரம்தான். பணமதிப்பிழப்பு சம்பந்தமாகவும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் தொடர்ந்து ப.சிதம்பரம் விமர்சனம் செய்து வந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த பொருளாதார அறிவு மோடி அரசுக்கு எதிராக, பதில் சொல்ல முடியாத கேள்விகளை தொடர்ந்து எழுப்பிவந்தது. அவருடைய விமர்சனமும் கேள்விகளும் மோடி அரசுக்கு கடுமையான குடைச்சலாக இருந்தன. இந்நிலையில்தான் ப.சிதம்பரத்தை ஏதேனும் வழக்கு வலையில் சிக்க வைத்துவிட்டால் அவரை வாயை மூடச்செய்யலாம் என்று மோடி அரசு திட்டமிட்டது. அதற்கு ஏற்றாற்போல சிக்கியதுதான் ஐஎன்எக்ஸ் மீடியா பணப்பரிமாற்றம்.

இந்த ஐஎன்எக்ஸ் மீடியா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் சிஇஓவும் இந்திய தொலைக்காட்சித் துறையில் புகழ் பெற்றிருந்தவருமான பீட்டர் முகர்ஜி என்பவருடன் இணைந்து, மத்திய மனிதவளத்துறை ஆலோசகரும், ஊடகத்துறையில் செயலாக்கருமாக பொறுப்பு வகித்த இந்திராணி முகர்ஜி என்பவர் இந்த மீடியாவை தொடங்கினார்.
 

indira muherji


இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 26 சதவீத பங்குகளை விற்க அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியதாகவும், அவர் 4.6 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்க அனுமதி கொடுத்ததாகவும் இந்திராணி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த பரிமாற்றத்திற்கு பிறகு நடந்த வருமான வரிச் சோதனையில் ஐஎன்எக்ஸ் மீடியா 305 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை சரிக்கட்ட ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் மூன்றரைக் கோடி ரூபாயை செலுத்தியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரிமாற்றங்களை அடிப்படையாக வைத்தே ப.சிதம்பரம் மீதும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் பாஜக அரசு வழக்குப் பதிவு செய்தது.

அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 305 கோடி ரூபாய் நிதி பெற்றதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

அப்போதிருந்து இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தையும், ப.சிதம்பரத்தை சிபிஐ நெருக்கி வருகிறது. இதற்காக கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டுகளையெல்லாம் முடக்கியது சிபிஐ. ஆனாலும், இந்த வழக்கு விசாரணைக்காக சிபிஐயும் அமலாக்கத்துறையும் அழைத்தபோதெல்லாம் ஆஜர் ஆகி பதில் அளித்தார் கார்த்தி சிதம்பரம்.

சுமார் ஒரு ஆண்டு விசாரணைக்கு பின்னரும் இந்த வழக்கில் ஆதாரம் சிக்காத நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு உள்நாட்டு கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பாஸ்கரராமன் என்ற ஆடிட்டரை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து தனது மகளைப் பார்க்க உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிரிட்டன் செல்ல விமானநிலையம் வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

அதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டது. எனவே, தனக்கு முன்ஜாமீன் கோரியும், தன்னை கைதுசெய்ய தடைகோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்செய்தார். ஆனால், 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி ப.சிதம்பரத்தை கைதுசெய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. முன்ஜாமீன் கோரிய இந்த வழக்கின் விசாரணையில் தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் ஒத்திவைத்தார்.

தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. பெரும்பான்மை பலத்துடன் தான் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் நிலையில் மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதில் அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் இந்திராணி முகர்ஜி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியிடம் இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்த 2018 ஜூன் மாதத்திலிருந்து, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு இடையில் சுமார் ஒரு ஆண்டு முடியும் நிலையில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.

அவர் ஒப்புதல் அளித்தபிறகு, சுமார் 40 நாட்களுக்கு பின்னர், டெல்லி உயர்நீதிமன்றம், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மூன்று நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கவுர் கூறினார்.

மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் பெற்றுவிடுவார் என்று நினைத்த பாஜக அரசு அவரை எப்படியும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடன் ப.சிதம்பரம் வீட்டுக்கு மட்டும் 4 முறை அதிகாரிகள் படையெடுத்தனர். மிகப்பெரிய பொருளாதார குற்றங்களில் சிக்கிய எத்தனையோ வழக்குகளை நாடு பார்த்திருக்கிறது. அந்தக் குற்றவாளிகள் அனைவரும் அரசு உதவியுடனே வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அவர்களே கூறியும் இருக்கிறார்கள்.
 

chidambaram arrest

 

 

ஆனால், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிலு ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், நாட்டின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவருமான ப.சிதம்பரத்தை கைது செய்வதில் காட்டிய வேகத்தையும், அந்த நடவடிக்கையை மீடியாக்களில் பரப்பி அவர் எங்கோ தலைமறைவாகிவிட்டதைப் போல ஒரு சித்திரத்தை உருவாக்கியதையும் மூத்த அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.