Skip to main content

பெரிய இடத்து பெண்கள் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசுவார்களா..? - ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019


கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து அக்கட்சியில் இருந்து பிரிந்து வெளியே வந்தார் ராஜேஸ்வரி பிரியா. இவர் பாமகவில் இருந்து வெளியே வந்ததும், கமலை உடனடியாக சந்தித்து பேசினார். அதனால் எப்படியும் மக்கள் நீதி மய்யத்தில்தான் இணைவார் என்ற பேச்சு எழுந்து. ஆனால் எந்த கட்சியுடனும் இணையவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் யாருடனாவது கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையுமே நம்பாமல் தனியாகவே ஒரு புதிய கட்சியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருவதுடன், கமலையும் சேர்த்து விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் நம்மிடம் பேசியபோது,
 

gd



கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இதுதொடர்பாக நடிகர் கமலிடமே உங்கள் நிகழ்ச்சியை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால், இதனால் எந்த மாற்றமும் இதுவரை நடைபெறவில்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு எதுக்கு? இதனை 60 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் கமல் தொகுத்து வழங்குகிறார். பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. கமலுக்கு சமூக பொறுப்பு என்பது அறவே இல்லை. மக்களை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கும் கமலுக்கு அதற்கான தகுதி சுத்தமாக இல்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெளி மாநில ஆட்களுக்கு நம் மாநிலத்தை பற்றி எதுவுமே தெரியாது.கலாச்சாரம், பண்பாடு இது எதுவும் இல்லை. 
 

இவங்களுக்கு ஒரு விளம்பரம் வேணும், இன்னொன்னு பணம் வேணும். இதில் கலந்து கொள்பவரின் கோபம், ஈகோ, சண்டை இதெல்லாம் நாம தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்? ஆபாசமா டிரஸ் போட்டுக்கிட்டு, படுத்துக்கிட்டு, பேசிக்கிட்டு, 60 கேமிராக்கள் இருப்பது உங்களுக்கு சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனால் எங்க குழந்தைங்க நாளைக்கு அதே மாதிரி இருக்கணும்னா நாங்க என்ன பண்றது? இது தமிழர்களுக்கே சம்பந்தமே இல்லாத ஒரு நிகழ்ச்சி. என்ன ஆர்மி? நம்ம ராணுவத்தில் நிஜமாவே செத்து போறவங்களை பத்தி ஏதாவது கவலை இருக்கா? எந்த ராணுவ வீரரையாவது இவர்கள் ஹீரோவா ஏத்துட்டு இருக்காங்களா? ஏன் விவசாயத்தை பத்தி நிகழ்ச்சி நடத்தலாமே, ஏன் நடத்தல? 100 நாட்களில் இந்த நிலத்தில் யார் விவசாயம் பண்ணி அதிக மகசூல் தருகிறார்கள் என்று பார்க்கலாமே? பாத்ரூம் போற வரைக்கும் கேமரா வைத்துள்ளார்கள். இதை எப்படி புரிந்துகொள்ள முடியும். இப்படி செய்வதற்கு உள்ளேயே கேமரா வைத்துவிடலாமே? இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள். இதை பார்ப்பவர்கள் யாரும் அதை விரும்பி பார்க்கவில்லை. ஆர்வத்தை உண்டாக்குவதால் என்ன இருக்கிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். நான் அந்த நிகழ்ச்சியை ஒருபோதும் பார்ப்பதில்லை. முகப்புத்தகத்தில் புரோமோ போடும்போது பார்ப்பேன். தனியாக யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். குடும்பமாக பார்க்க முடியுமா?
 

 

சின்ன வயதை உடைய குழந்தைகளின் மனது இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சலனப்படும். அவர்களை பக்குவப்படுத்தாவிட்டாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் அவர்களை சீரழிக்காமல் இருக்க வேண்டியது மிக முக்கியம். கமல் போன்ற ஆட்கள் இதை ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டித்து வருகிறோம். தமிழக இளைஞர்களை, மாணவர்களை இந்த நிகழ்ச்சி மனதளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் முன் அதனை நிறுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதை கண்டிப்பாக செய்வோம்.அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சரவணன் பேருந்தில் பெண்களை இடிப்பேன் என்று கூறியதை எப்படி ஒளிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சியை கட் செய்துதானே போடுகிறார்கள். பெரிய இடத்து பெண்களை பற்றி யாராவது அந்த நிகழ்ச்சியில் கூறினால் அதை ஒளிபரப்புவீர்களா? ஏழைகள் என்றால் ஒருவித இளக்காரம். அந்த கொடூர தன்மையே இந்த மாதிரியான விபரீத நிகழ்ச்சிகளை நடத்த அவர்களுக்கு துணிச்சலை கொடுக்கிறது.