மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜக தான் காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பாலுவை சந்தித்து பேட்டி கண்டோம். அதில் சில கேள்வி பதில்களை மட்டும் தொகுத்துள்ளோம்.
ஏக்நாத் ஷிண்டேவை அடுத்து அஜித் பவாரும் எங்களுடைய கட்சிக்கு வந்துவிட்டார் அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று அண்ணாமலை கூறுகிறாரே?
அண்ணாமலை எப்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாரோ அன்று முதல் இந்த உலகத்தில் தன்னை தவிர யாரும் அறிவாளி இல்லை என்ற மிதப்பில் பயணம் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே அடிப்படை சித்தாந்தத்தில் உள்ளிருப்பவர்கள். அதிமுகவை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தது போல் திமுகவை கொண்டு வர முடியவில்லை. அதற்கு ஆளுநரை வைத்து அரசியல் செய்து பார்த்தார்கள். ஆனால் அதுவும் திமுகவில் எடுபடவில்லை.
செந்தில் பாலாஜியின் வழக்கை திமுகவோடு இணைத்து வைத்து பேசுகிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி மீது போடப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் ஜெயலலிதா ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது நடந்தது. அதில் 2014 - 2019 வரை சொல்லப்படும் குற்றச்சாட்டு அனைத்துமே செந்தில் பாலாஜிக்கு யாரும் நேரடியாக பணம் கொடுத்தாக கூறப்படவில்லை. அதில் தவறு என்னவென்று பார்த்தால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று மனு கொடுத்து திமுக அவரை ஏற்றுக் கொண்டது. அதனுடைய விளைவு இன்றைக்கு அவரை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அதற்கான விமர்சனங்களை எதிர்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு இன்றைக்கு அதிமுகவினர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இதுவே பெரிய நகைமுரணாக இருக்கிறது. அவர்களோடு இருந்த செந்தில் பாலாஜி வேறொரு கட்சிக்கு சென்றதால் திமுகவில் நடந்த ஊழலை போல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் படம் போட்டு காட்டுகிறார்கள். திமுக செந்தில் பாலாஜியை காப்பாற்றுவது என்பது குற்றமற்றவர் என்று கூறுவதாக இல்லை. நீதிமன்றத்தில் அந்த வழக்கை சந்தித்து அவர் குற்றமுள்ளவர் என்றிருந்தால் அவர் தண்டனையை அனுபவிக்க போகிறார். முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்து போன காரணத்தினால் அவர் குற்றவாளி இல்லை என்றுதான் இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜியை கருவியாக வைத்துக் கொண்டு திமுகவை ஒவ்வொரு நாளும் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதே இவர்களுடைய ஒரே நோக்கம். அதற்கு திமுக சரியாக எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் காரணத்தினால் தான் இவர்கள் ஏதாவது குறை சொல்லி வருகிறார்கள்.
ஷிண்டேவையும் உத்தவ் தாக்கரேவையும் பிரித்த மாதிரி எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர் செல்வத்தையும் பிரித்துவிட்டார்கள். சசிகலாவையும் தினகரனையும் இருந்த தடம் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். இந்த நான்கு பேரும் ஒன்றிணைந்தால் இந்த இயக்கம் பெரிய இயக்கமாக இருக்கும். இவர்களுக்குள் நடக்கும் பணச் சண்டை, பதவிச் சண்டையின் காரணத்தினால் ஒட்டுமொத்த மக்களையும் அடகு வைத்துவிட்டார்கள். இதே அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். அந்த வழக்கில் அவர்கள் எடுத்த முன்னேற்றங்கள் என்ன என்பது தான் கேள்வி. இதே தலைமைச் செயலகத்தில் அதிமுக ஆட்சியிலும் சோதனை நடந்தது. ஆனால், திமுக ஆட்சியில் மட்டும் சோதனை நடந்ததை பெரிதாக பேசும் பாஜகவினுடைய கூட்டணியில் இருந்த நான்கு அமைச்சர்கள் மீது நடத்திய சோதனையின் விளைவுகள் என்ன. அதே போல் இயக்கங்களை உடைத்து அரசியல் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஹைஜாக் செய்து ஒரு ஆட்சி அமைப்பது போன்று செய்தால் திருப்பி அடிப்போம் என்று கர்நாடகா தேர்தலில் அவர்கள் காண்பித்து விட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி மாநில தலைமைகளை மதிக்காமல் ஒட்டுமொத்தமாக அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டதால் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல பேர் வெளியே சென்றுவிட்டார்கள். சமீபத்தில் கூட கேரளா காங்கிரஸ் தலைவரே பாஜகவுக்கு சென்றுவிட்டார். அதனுடைய அடிப்படை காரணம் என்னவென்றால் மாநில தலைமையை மதிக்காமல் ஒரு கட்சி இருந்தால் அனைத்து இடங்களிலும் உடையும். ஆனால், உலகத்திற்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் மிக பெரிய நாடுகள் துண்டு துண்டாய் சிதறுவதை சர்வாதிகார நாடுகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் விலை போவது மாதிரி சில வேலைகளை பாஜக செய்து விடுமோ என்ற அச்சம் என்னை போன்றவர்களுக்கு இருக்கிறது. இந்தியாவை போன்ற நாடு என்பது பல கலாச்சாரத்தையும், பல மொழிகளும் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒன்று. இதனால் தான் நாங்கள் ஒன்றியம் என்று கூறுகிறோம். இதை ஒன்றாக அமைக்கிறோம் என்று சொல்லி சொல்லி உடைத்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. அதனால், சீனா போன்ற வெளிநாட்டு ஆதிக்கம் நம்மை வந்தடையும்.
ஆக இந்தியாவினுடைய ஒருமைப்பாடு என்பது மொழியினுடைய அடிப்படையிலும் கலாச்சார அடிப்படையிலும் அவரவர்களுக்கு உண்டான பன்முகத் தன்மையோடு இருக்கின்ற ஒருமுகமாக இந்தியா இருந்தால் தான் இந்தியாவாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் பாஜக இந்த தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று சொன்னால் இந்தியா ஒரு நாள் அடக்கம் ஆகிவிடும்.