காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் அரசியல் அரங்கில் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் மாலனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவரின் கருத்துக்கள் வருமாறு,
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானத்தில் குறிப்பாக ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?
முதலில் ஜனநாயகத்துக்கு விரோதமாக என்பதே தவறானது. அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதற்கு போதுமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் புதிய மசோதாக்கள் பற்றி தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அப்படி இருக்க இதை ஜனநாயகத்துக்கு விரோதமாக என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு வாதம்.அதில் எந்த பொருளும் இருப்பதாக நான் கருதவில்லை. அப்படி எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் மக்களிடம் முறையிடலாம். மக்களிடம் அவர்களின் கருத்துக்களை பதிய வைக்கலாம். இது ஜனநாயகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு சுதந்திரம்தான். எனவே எதிர்க்க வேண்டும் என்றால் மக்களிடம் நேரில் செல்லலாம்.
ஆனால் இதுதொடர்பாக ஒரு அச்சம் இருக்கிறதே, பெரும்பான்மை இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எதிர்கட்சிகள் கூறுவதை பற்றி?
தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கைகளிலேயே கட்சிகள் தெரிவித்து விடுகிறார்கள். தங்களின் கொள்கைகளை மறைத்து விட்டு எந்த கட்சியும் மக்களிடம் வாக்குகளை பெறுவதாக நினைக்க இயலாது. அதையும் தாண்டி மெஜாரிட்டி என்பதே மக்கள் வழங்கியது தானே? பிறகு எப்படி அதை ஜனநாயக விரோதம் என்று கூற இயலும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கதக்க ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்திய விதம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முடிவு சரி, ஆனால் அமல் செய்யப்பட்ட விதம் தவறு என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த மாதிரியான விவகாரங்களில் எந்த அரசாக இருந்தாலும் இப்படியான முடிவைத்தான் எடுக்கும். இதற்கு நமக்கு பல முன் உதாரணங்கள் இருக்கிறது. அவசரநிலை அமல்படுத்தப்பட்ட போதும் இப்படியாக ஒரு சூழ்நிலையில் தான் நிறைவேற்றப்பட்டது. அவசரநிலை அமல்படுத்தப்படுகிறது என்று யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. குடியரசுதலைவருக்கு கூட இதுகுறித்து தெரியாது. அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அரசு வித்தியாசமாக செயல்படுவதாக நினைக்க தேவையில்லை.
காஷ்மீரில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதை எல்லாம் இணைத்தே திமுக சொல்வதாக புரிந்து கொள்ளலாமா?
இருக்கலாம், இது ஜனநாயகத்துக்கு உகந்த நடவடிக்கை என்று சொல்லவில்லை. ஆனால், அதற்கான அவசியம் ஏற்பட்டதாக அரசு நினைத்திருக்கலாம். பாஜக இல்லாத எந்த அரசாக இருந்தாலும் இதே மாதிரியான முடிவு எடுக்க முயன்றார்கள் எனில் அதற்கான வழிமுறையாக இதைபோன்றதொரு வழியையே பின்பற்றுவார்கள். எனவே சில விவகாரங்களில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.அதை மத்திய அரசு காஷ்மீர் விவகாரத்தில் செய்திருப்பதாக நான் நினைக்கிறேன்.