நெல்லை மாவட்டத்தின் அம்பை நகரில் பரந்து விரிந்து செல்கிற தென்மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 6500 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அகத்தியர் மேட்டுப் பகுதி மலை இருக்கிறது. அதன் பின்புறமுள்ள சதுப்பு நிலப் பள்ளத்தாக்கில் இயற்கையாக உற்பத்தியாகிறது தாமிரபரணி ஆறு .
மகாமுனி அகத்தியரின் கண்பார்வை பட்டுப் பொங்கியிறங்கும் தாமிரபரணி வற்றாத ஜீவ புண்ணிய நதி என்று நம்பப்படுகிறது.சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்க கயிலாசம் சென்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.அதைச் சமன் செய்யுமாறு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு செல்லுபடிச் சிவபெருமான் கட்டளையிட்டார்,அதன்படி எழுந்தருளிய தமிழ் முனிவரான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் 'பாபநாசம்' என்னும் இத்தலத்தில் தான் என்பது இதின் சிறப்பாகும்.இப்படி புண்ணிய நதியும் கர்ம வினைகளை நாசம் செய்கிற சிவபெருமானும் ஒரு சேர அமைந்திருப்பதால் அந்தப் பகுதி "பாபநாசம்" என்றானது.
இப்படி, நதியும், தெய்வங்களும் இரண்டு சிறப்பு அம்சங்களாயிருப்பதால் எந்தவிதக் கலப்புமில்லாமல் அம்மையப்பனின் அருட்பாதம் படுகிற முகத்துவாரத்தின் வழியாக பாய்கிற தாமிரபரணியாற்றின் எதிரே வீற்றிருக்கும் பரம்பொருளை வணங்கினால் செய்த பாவங்கள், கர்மாக்கள் அகலும் என்பது சாஸ்திர விதி. அதன் காரணமாகவே மானுடர்களின் பாவங்களைப் போக்குற பாபநாசம் என்று அழைக்கப்பட்டு தென்மாவட்டத்தின் புண்ணிய ஷேத்திரமானது பாபநாசம். இதனாலேயே கையடக்கமான அந்தப் பாபநாசத்தில் பக்தர்களின் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும். நதியில் மூழ்கி பக்தி சிரத்தையோடு பகவானை வழிபட்டு விட்டுச் செல்லும் பக்தர்கள் அன்றாடம் வருவதுண்டு.
இப்படி இருந்த காலம் போய், அண்மைக் காலமாக எதிர்மறை நிகழ்வுகள் அங்கே நடப்பதுதான் நகரின் புனிதத்தை சிறிது சிறிதாகச் சிதைத்துவருகிறது என மனம் புழுங்குகின்றனர் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும்.
ஆரம்ப காலங்களில் இறைவனை வழிபட வரும் பக்தர்கள் தாமிரபரணியில் மூழ்கி அப்படியே பாவம் போக்க ஆதிக்கடவுளை வணங்கிவிட்டுச் செல்லும் மரபு தலைகீழாகிவிட்டது.அனால் இப்போது பாபநாசம் என்றால், கர்ம வினைகளை போக்கவும்,முன்னோர்களுக்கான பரிகாரத்திற்கு ஏற்ற இடமாகவும் மாறி வருகிறது.
இதன் காரணமாகவே இப்படிப் பரிகாரம் செய்ய வருபவர்களின் கூட்டம் தான் அன்றாட நிகழ்வாகி விட்டது. அதற்காக வருபவர்கள் அவரவர் தன்மைக்கேற்ப யாகமோ, தர்ப்பணமோ செய்து விட்டு நதியில் தலைமுழுகிவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால் பரிகாரம் செய்துவிட்டு குளித்த அதே ஆடையுடன் வீட்டிற்குச் சென்றால் அது பாவம் என்ற எண்ணத்தில், அந்த ஈரத் துணிகளை அப்படியே ஆற்றில் விட்டு விட்டுக் கிளம்பிவிடுகிறார்கள். இப்படிப் பரிகாரத்திற்காக வருபவர்கள் தங்களின் ஆடைகளை அப்படியே ஆற்றில் விடுவதால் அது பிற பகுதிகளில் குளிக்கும் மக்களின் கால்களில் சிக்கி சில நேரங்களில் உயிரிழப்பையே ஏற்படுத்திவிடுகிறது.அப்படி விடப்படும் துணிகள் டன் கணக்கில் சேர்ந்து நதியை அசுத்தப்படுத்தவதுடன் நான்கு மாவட்ட மக்களின் குடிநீராகவும் பயன்படுவதால் அந்த மக்களுக்கு பலவிதமான நோய்களையும் உண்டாக்குகிறது என்பது அந்த பகுதிவாழ் மக்களின் நெடுங்காலக் குற்றச்சாட்டு.
அண்மையில் தாமிரபரணியைச் சுத்தப்படுத்தும் வகையில் ஆய்வுக்கு வந்த பசுமைத் தீர்ப்பாய நீதிபதியும் மாவட்டக் கலெக்டர் ஷில்பாவும் இப்படி ஆற்றில் சேருகிற துணி மூட்டைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்.இப்படித் துணிமணிகளை ஆற்றில் விடுவது குற்றம். அவைகளை உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார்கள். இதைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் காஞ்சனாவின் நடவடிக்கையால் சுமார் 2 டன் எடையிலான துணிகள் அகற்றப்பட்டது.இது அதன் ஒரு பகுதிதான்.கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பிலும் நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் பலர் இப்படித் துணிகளை ஆற்றில் விட்டுச் செல்வது தொடர்கதையாகத் தான் இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
பாவத்தைக் கழுவ பாபநாசம் செல்பவர்கள் இனி மறந்தும்கூட உடைகளை ஆற்றில் விட்டு விடாதீர்கள்.இப்படி உடைகளை ஆற்றோடு விடுவதன் மூலம் நான்கு மாவட்ட மக்களின் பெரும் பாவத்திற்கு ஆளாகுகிறீர்கள்.இப்பாவத்தைக் கழுவ தாமிரபரணியால் கூட முடியாமல் போகலாம் !