Skip to main content

சானிட்டரி நேப்கின்கள் வந்த பிறகு தான் பெண்களுக்கு குழந்தை பிறப்பு குறைந்துள்ளதா..? - மனநல மருத்துவர் ஷாலினி விளக்கம்!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020


சில தினங்களுக்கு முன்பு வெளியான ஒரு தமிழ் திரைப்படத்தில் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் இடம்பெற்றிருந்ததாக ஒரு புகார் எழுந்தது. இதுகுறித்து ஆதரவான நிலைப்பாட்டை ஒரு சாராரும், எதிரான நிலைப்பாட்டை மற்றொரு பிரிவினரும் எடுத்து வரும் நிலையில், இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை நாம் எழுப்பினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

sd



சமீபத்தில் வெளியான ஒரு தமிழ் திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் சிலரால் வரவேற்கப்பட்டதையும், சிலரால் விமர்சிக்கப்படுவதையும் நாம் தொடர்ந்து பார்க்கிறோம். தற்போது அந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் அந்த படத்தை பார்ப்பவர்களுக்கு இயல்பாக தோன்றுகிறது. அந்த திரைப்படத்தில் ஒரு தம்பதியினர், தங்களுக்கு திருமணம் ஆகி நீண்ட வருடங்கள் ஆகியும், இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், அதனால் அதற்கு மருந்து கொடுங்கள் என்று மருத்துவரிடம் சொல்வதை போலவும், அதற்கு மருத்துவர் இந்த சானிட்டரி நேப்கின்கள் வந்த பிறகு இது தொடர் கதையாக உள்ளது என்று சொல்வதை போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை எப்படி புரிந்து கொள்வது? இந்த காட்சிகளில் உண்மை தன்மை இருக்கின்றதா? 

இதில் விஞ்ஞான ரீதியான எந்த உண்மையும் இல்லை. இந்த சினிமாக்காரர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போவதற்கு இந்த மாதிரியான கருத்துக்களும் ஒரு காரணம். தனக்கு தோன்றியதை எல்லாம் யாரிடமும் எந்த அறிவியல் பூர்வமான கருத்துக்களையும் கேட்காமல் தனக்கு பிடித்தப்படி படத்தில் வசனங்களாக சேர்த்துக்கொள்வார்கள். அதையும் பொதுமக்கள் தியேட்டரில் விசிலடித்து பார்ப்பார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். சானிட்டரி நேப்கின்களுக்கு பதிலாக பழைய முறையில் துணியை பயன்படுத்த சொல்கிறார்களா என்று தெரியவில்லை. அந்த காலத்தில் அவ்வாறு பயன்படுத்திய போது பெண்களுக்கு ஏகப்பட்ட நோய்கள் உருவானது.

அந்த நோய்களில் சிக்கி துன்பப்பட்டார்கள். மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் துணிகளுக்கு பெயரே தீட்டு துணி என்று அழைப்பார்கள். அப்போது குடிசை வீடுகளில் இருந்தவர்கள் அதை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பார்கள். அதில் சிறிய உயிரினங்கள் மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும். அதனால் ஏகப்பட்ட நோய்கள் பெண்களுக்கு ஏற்பட்டது. இது எல்லாம் தற்போதுதான் ஓரளவு குறைந்துள்ளது. இப்போது மீண்டும் திரைப்படத்தின் வாயிலாக அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள். 

மேலும் நீங்கள் கூறுவது போல உறவினர்களின் குடும்பத்தில் அதுவும் தாய் மாமன் மகளை திருமணம் செய்வதன் மூலம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. அதுவும் நெருங்கி உறவினர்கள் திருமணம் செய்யும் போது குழந்தைகள் ஆரோக்கிய குறைபாடுடன் பிறப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும். இந்த மாதிரியாக சானிட்டரி நாப்கின்களில் தொடங்கி பெண்களை அடிமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்கு பெண்கள் வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை. இதன் மூலம் பெண்களை முடக்க பார்க்கிறார்கள். இதை உபயோகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச சுகாதாரத்துடன் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. இதை படம் எடுப்பவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டால் கூட கூறுவார்கள். 

திருமணம் ஆன தம்பதிகள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் குழந்தையின்மை பிரச்சனையும் முக்கியமானது. அந்த வகைகளில் குழந்தை பிறப்பதுதான் ஆண்மைத்தனம் என்று மீசையை முறுக்கி விடுபவர்களின் செயல்களை எப்படி பார்ப்பது? 

குழந்தை பிறப்புக்கு ஆண்களின் விந்தணுக்கள் மட்டுமே காரணம் இல்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஐம்பது சதவீதம் காரணமாக இருக்கிறார்கள். குழந்தை பிறப்பு என்பது ஒரு தம்பதியினரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றது. ஆகையால் இருவருக்குமே அதில் சந்தோஷம் இருப்பது இயற்கையான ஒரு விஷயம். ஆனால் ஆடு, மாடுகள் கூட குட்டி போடுகின்றது.

அதனால் குழந்தை பிறப்பில் இருக்கும் மகிழ்ச்சியை விட அதை நல்ல முறையில் வளர்த்தோமா, அவர்களை சபையில் நிறுத்தி காட்டினோமா என்பதுதான் மிக முக்கியம். பெத்து போடுதல் மட்டும் ஒரு தந்தைக்கு பெரிய சாதனை என்று யாரும் கருத முடியாது. நல்ல பழக்க வழங்கங்களையும், நல்ல வளர்ப்பையும் அந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்து, குழந்தைகளும் அவ்வாறு வளர்ந்தால் அப்போது மீசையை முறுக்கிக் கொண்டு திரியலாம். அதனால் பெத்த உடனே மீசையை முறுக்கி விடுதல் என்பது உடனே சந்தோஷப்பட்டுக் கொள்ளுதல் போலத்தான்.