மாநிலத்தின் உயர் பதவியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஒருநாளாவது என் துணைவியாரின் வேலை பளுவை குறைக்க சமைக்கப்போகிறேன் எனச்சொல்லி சமையல் அறையில் காய்கறிகளை நறுக்கி சமையல் செய்யும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது இந்தியா முழுவதுமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.
அசாம் மாநிலம் உள்துறை, அரசியல், பொதுநிர்வாக செயலாளராக இருப்பர் மணிவண்ணன். இவர் தமிழ்நாட்டில் ஆந்திரா எல்லையோரம் திருவள்ளுவர் மாவட்டத்துக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். படித்ததெல்லாம் தமிழகத்தில் தான். பட்டப்படிப்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். பின்னர் ஒன்றிய அரசின் சிவில் சர்விஸ் தேர்வுக்கு படித்து தேர்ச்சி பெற்றார். வடகிழக்கு மாநிலங்களில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அசாம் மாநில கேடர் அதிகாரியாக பணியாற்ற துவங்கினார்.
இயற்கை வளங்கள் நிறைந்த இந்தப்பகுதியில் மரங்கள் அடிக்கடி வெட்டப்பட்டன. இதனை தடுக்கவும், வனத்தை உருவாக்கவும், அங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பெரியளவில் மரச்செடிகள் நடப்பட்டு பெரும் வனத்தையே உருவாக்கினார். இதனை அசாம் மாநில முதலமைச்சரே நேரில் வந்து பார்த்துவிட்டு பாராட்டினார். அசாம் மாநிலத்தில் எளிய மக்களின் நம்பிக்கை அதிகாரியாக பணியாற்றினார்.
அரசின் சில பதவி உயர்வுக்கு பின்னர் தற்போது அசாம் மாநில உள்துறை, அரசியல், பொதுநிர்வாக செயலாளராக பணியாற்றி வருகிறார். மிக முக்கியமான இந்த பதவியில் அதிகளவில் அரசுப்பணிகள் இருந்தபடியே இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று தன் துணைவியாருக்கு சமையல் பணியில் உதவ களமிறங்கியுள்ளார். அவரே சாதம், சாம்பார், பொறியல் செய்து அசத்தியுள்ளார். தான் சமைத்ததை தன் மனைவி, மகன், மகளுக்கு பரிமாறியுள்ளார்.
நான் ஐ.ஏ.எஸ், நான் சமையல் செய்வதுபோல் போட்டோ, வீடியோ வெளியே வந்தால் என் இமேஜ் என்னவாது என்கிற போலி கவுரவம் பார்க்காமல், அவர் சமையல் செய்யும் வீடியோவை அவரது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இது அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பணியாற்றிவரும் அவரது பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கவர்ந்துள்ளது. இந்த செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மணிவண்ணன் குறித்து அவரது பால்ய நண்பர்கள் நம்மிடம் பேசும்போது, “ஏழ்மையான குடும்பம், படிப்பு மட்டுமே தன்னை உயர்த்தும் என்கிற நம்பிக்கையோடு படித்து தேர்வெழுதி பணியில் சேர்ந்தவர். அசாம் மாநிலத்தில் ஏழை, விவரமறியாத மக்களுக்கு தன் அதிகாரத்தின் வழியாக என்னென்ன நன்மை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துகொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் தனக்காக, தன்குடும்பத்துக்காக கிராமத்தில் சொந்தமாக வீடுகட்டினார். சொந்த வீடு தேவை என்கிற அவரது தந்தையின் கனவு. ஓலைகுடிசையில், மழைவந்தால் மண் சுவர் இடிந்துவிழுந்துவிடுமோ என வாழ்க்கை நடத்தியவர்கள். தனது தந்தையின் கனவை இப்போதுதான் அவரால் நிறைவேற்ற முடிந்தது. பெரிய மாளிகையெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் கட்டும் வீடுபோன்றுதான் அவரால் கட்ட முடிந்தது. அந்த வீடு புதுமனை புகுவிழாவில் திருவாசம் ஓதவைத்தார். இப்படி வித்தியாசமானர், மக்களுக்காக சிந்திப்பவர்” என்றார்கள்.
அழகான தன் குடும்ப வாழ்க்கைக்கு பரபரப்பான அதிகார அலுவலக பணியிலும் நேரம் ஒதுக்கியதோடு, நான் அதிகாரி என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் சமையல் வீடியோவை வெளியிட்டு உலக மகளிர் தினத்தை கொண்டாடியது மகிழக்கூடியதே.