சேவை பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக இன்கம்மிங், அவுட் கோயிங் இல்லாமல் ஏர்செல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.
ஏர்செல் நம்பரை பயன்படுத்தி ஆதார், வங்கி, கேஸ் இன்னும் பல முக்கிய சேவைகளுக்கு பயன்படுத்தி வந்ததால் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பலர், ஏர்செல் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்தனர். இதனால் பலர் தங்கள் எண்ணை ஏர்செல் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறினர்.
இந்நிலையில், நேற்று டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவக் சர்மா தனியார் தொலைக்காட்சிக்கு அழித்த பேட்டியில், முன்னறிவிப்பு இன்றி வாடிக்கையாளர்களின் சேவையை துண்டித்தது சட்ட விரோதம். வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஏர்செல் நிறுவனம் சேவையை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், வேறு நிறுவனங்களுக்கு மாறிய வாடிக்கையாளர்களின் இருப்புத் தொகையை ஏர்செல் நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்தநிலையில், 3 தினங்களுக்குப் பிறகு தற்போது ஏர்செல் சேவை சீரடைந்துள்ளதாக அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது.